அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, நவம்பர் 15, 2013

உங்களில் சிறந்தவர்..                                          அல்லாஹ்வின்  நற்பெயரால்.

பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் ஆதாயத்தின் மடங்கு இரட்டிப்பாகும். சில தலைவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களில் செய்திகளாக வரும் போது அதை நாம் தெளிவாக அறிகிறோம்.


மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் குறித்து சில செய்திகள் இங்கே...

தங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, ஆசனங்கள், பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைமை பொறுப்பு மற்றும் இறைத்தூதர் என்ற இமாலயப்பொறுப்பு இரண்டையும் கொண்ட முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்... சகோஸ்

ஒரு நபித்தோழர் குறிப்பிடுகிறார்...
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828

ஏனெனில் காலில் விழுபவரும், விழப்படுபவரும் ஒரே மனிதர்கள் தாம் என சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தாம் இறந்த பிறகும் கூட தம் அடக்கஸ்தலத்திற்கு கூட சிரை வணக்கம் செய்ய கூடாது கண்டிப்புடன் கூறினார்கள்.

மற்றொரு நிகழ்ச்சி...
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.
நூல் : அஹ்மத் 12093 ,15726, 15717

ஆன்மீகமோ அரசியலோ, தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதும் உண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்கு தரப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

அதைக்கூட மக்களை செய்ய விடாமல் அதிலும் குறிப்பாக ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அந்தச் சீர்திருத்தத்தை தம் இறப்பிற்கு பின்னரும் கூட முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே.

அடுத்த ஒரு நிகழ்ச்சி பாருங்கள்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.
அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.
இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.
அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.
பிறகு கிராமவாசி, 'முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!' என்று கூறினார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.
பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலி நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.

தமக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு காட்டரபி நபிகள் மீதுள்ள போர்வையை பிடித்து இழுக்கிறார். அதுவும் அவர்கள் மேனி சிவக்கும் அளவிற்கு. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்... வந்தவரின் சுபாவம் இப்படியானது தான் என தெளிவான தெரிந்தவர்கள் அவர்கள் அதனால் தான் அவருக்கு சிறை தண்டனை கொடுக்காமல் சிரித்துக்கொண்டே கருவூல நிதியிலிருந்து அவருக்கு சிறிது கொடுக்க சொல்கிறார்கள் .இன்றைய ஆட்சியாளர்கள் முன் இப்படியாய் ஒரு சம்பவம் நடந்தால்...

புகழை விரும்பா தலைவர்கள் கூட அதுவாக தம் மீது விழும் போது மவுனமே சாதிப்பார்கள். ஆனால் இந்த தலைவரோ எப்பேற்ப்பட்ட சூழ் நிலையிலும் தம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார் பாருங்கள்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மகன் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1043, 1061, 1063

இங்கே சொன்ன செய்தியை விட சொல்லப்பட்ட தருணமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தன் மகன் மரணித்த சோகத்தில் கூட மக்கள் தவறான புரிதலில் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் தக்க சமயத்தில் விளக்கமளிக்கிறார்கள்.  எந்நிலையிலும் தம் மீது புகழின் நிழல் கூட விழ மறுத்து விட்டார்கள்.
அவர்களின் நீத தன்மைக்கு ஒரு சான்று பாருங்கள்.

யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார்.

நபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறி நபி மூஸாவை விட தம்மை உயர்த்தி பேச வேண்டாம் என தீர்ப்பு கூறுகிரார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புஹாரி பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917

இந்த  நிகழ்வை சற்று ஆழமாக சிந்தியுங்கள். வழக்கை கொண்டு வருபவர் ஒரு யூதர் அதுவும் வழக்கே முஸ்லிமுக்கு எதிராக தான். அதிலும் நபி முஹம்மதை காட்டிலும் தம் சமூகத்தின் தலைவரை உயர்ந்தவர் என்கிறார். ஆனால் இங்கே வழக்கை விசாரித்து நீதி சொல்பவர் நபி முஹம்மத் அவர்கள். என்ன ஆச்சரியம் தமக்கு சாதகமில்லாமல் கொண்டு வரப்பட்ட வழக்கிற்கு தானே நீதி சொல்கிறார்கள். அதுவும் நீதமாய். ஏனெனில் நியாயமான தீர்ப்பைதான் நபி முஹம்மத் வழங்குவார்கள் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த யூதர்கள் கூட நிதர்சனமாக அறிந்து வைத்திருந்தார்கள். 

இன்னும் சொல்லலாம்...
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

  உலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஏன் எத்தனையோ சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் கூட தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே... ஆனால் இங்கு நபி முஹம்மத் அவர்களோ ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவி இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய அந்த சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை.

கலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று!

மனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.

 தலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனிதமனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது வலிமையானது என்பதை சிந்திப்போர் புரிந்துக்கொள்வார்கள்.

இறுதியாக...
அவர்களது இறுதி காலக்கட்டத்தில் ஒரு சம்பவம்!
'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்!

அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.
இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள்.
நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824

இங்கே பேசுவது ஒரு சர்வசாதரண மனிதர் அல்ல., ஒரு சம்ராஜியத்தின் தலைவர். இஸ்லாமெனும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவளுக்கு எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. என்ன ஒரு சமத்துவம்.. இன்றைய தலைவர்களில் எவராவது இதைப்போன்று செய்ய முன்வருவார்களா.. அல்லது குறைந்த பட்சம் தம் தவறுக்கு பொது மன்னிப்பாவது இந்த சமூகத்திடம் கேட்பார்களா.... ஊழலிலும் இலஞ்சத்திலும் குளிர்காயும் தலைவர்கள் மத்தியில் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் கழித்த அந்த மாமனிதர் மக்கள் மன்றத்தில் தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்...

அவர் தாம் உலகில் வாழ்ந்த நாளிலும் இனி இந்த உலகம் வாழும் நாள் வரையிலும் தம் செய்கையின் மூலம் சிறந்தவர் என்பதை நிருபித்து சென்று விட்டார்கள். அவர்கள் பெயரில் அவதூற்றை மட்டுமே அச்சேற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்கள் இனியாவது பகுத்தறிவு பார்வையோடு சிந்திக்கட்டும் அந்த மாமனிதரின் உண்மை வரலாற்றை..
நன்றி naanmuslim .blogspot .com

இஸ்லாம் இம்மைக்கும் வெற்றி , மறுமைக்கும் வெற்றி
நன்மையை ஏவி தீமையை தடுப்பது நம் அனைவரும் மீது கடமை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!