வெள்ளி, டிசம்பர் 20, 2013

முக அழகை தந்தவனே , அக அழகையும் தந்தருள்வாய் !



முக அழகை தந்தவனே, அக அழகையும் தந்தருள்வாய்!
"இறைவா நீ என் உருவத்திருக்கு அழகைத் தந்தது போல் எனது குணநலன்களையும் அழகுறச் செய்வாயாக !" -என்று அருமை நாயகம் பிரார்த்தித்தார்கள் .
அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி) அவர்கள் ,
நூல் அஹ்மது)


கண்ணாடி முன் நின்று தமது முக அழகை ரசித்து அக மகிழ்ந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் " இறைவா ! என் கோலத்தை அழகுபடுத்தியது போல் எனது சீலத்தையும்  கண்ணியப்படுத்துவாயாக " என்று இறைஞ்சினார்கள் .

"நான் எல்லாவித சங்கைக்குரிய பண்புகளையும் சங்கம மாக்கத்தான் அனுப்பப்பட்டுளேன் " என்று நவின்ற எம்மான் நபி நாதர் தான் இவ்வாறு பிரார்த்தித்தார்கள் .

குர் ஆனை விரித்துப்பார்த்தால் , அருமை நபியின் அழகு முகம் காண முடியும் என்ற பொருளில், அவர்களின் குணம் குர் ஆனாகும் " என்று எந்த நபியைப் பற்றி நம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் புகழாரம் சூட்டினார்களோ அந்த நபிதான் இவ்வாறு பிரார்த்தனை செய்தார்கள்.

வற்றிய வயிறுடனும் ஒட்டிய கன்னத்துடனும் கால் வயிற்று உணவுக்குக் கூட வகை தெரியாமல் ஊர் சுற்றியலைந்து கொண்டிருந்த ஒருவர் கருணையுள்ள ரஹ்மானின் கதிமோட்சம் பெற்று தமக்கு வசதியும் வாயிப்பும் வந்தபின் பெருமை தலைகேறி தலைகால் தெரியாமல் ஆட்டம் போடுகிறார் .

கொடி கட்டிக் கொண்டு , சுவர்களில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டும் ஐந்துக்கும் பத்துக்கும் ஆளாயிபறந்து கொண்டிருந்த ஒரு அடிமட்ட கூலியாள் நாலு பேரை வளைத்துபோட்டு ஒரு பதவிக்கு வந்துவிட்டால் , உலகமே தன் காலடியில் விழ வேண்டுமென்று கனவு காண்கிறான் . தம்மிடம் யார்வந்தாலும் குனிய வேண்டும் . பல்லிளிக்க வேண்டும் என்று எண்ணுகிறான் இவன் பெற்ற இந்த செல்வத்துக்கு , செழுமைக்கும் எந்த அப்பாவிகள் காரணமோ அவர்களை உதாசீனப்படுத்தி , கசிக்கிப் பிழிகிறான்.

எவ்வளவு தூரம் உயர்ந்து கொண்டே போனாலும் கீழுள்ளவர்களை மதிக்கும் குணாதிசயம் உள்ளவனே நெறியுள்ள மனிதன் என்பதை அண்ணல் நபி (ஸல்) தமது பண்பான பாங்கான வாழ்கையில் உணர்த்துகின்றார்கள் .

ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் நபியிடம் வந்து , திரு மக்கா சென்று உமராச் செய்து வர அனுமதி வேண்டுகிறார்கள் . ஹஜ்ரத் உமருக்கு விடையளித்த பெருமானார் (ஸல்) அவர்கள் உமரே ! அல்லாஹ்விடத்தில் எனக்காக துஆ செய்யுங்கள் . எனக் கேட்டுக் கொள்கிறார்கள்.

" எனக்காக துஆ செய்யுங்கள் " என்று பெருமானாரின் அன்பு கட்டளை ஹஜ்ரத் உமர் அவர்களிடம் ஆயிரமாயிரம் இன்ப அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது .

இவ்வுலகத்து அனைத்து சொகுசுகளும் எனக்கு கிடைத்தாலும் , பெருமானார் (ஸல்) அந்நேரம் என்னிடம் தந்த இன்பத்தின் இனிமைக்கு எல்லை ஏது...? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!