அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, டிசம்பர் 28, 2013

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை (2ஆம் பாகம் )




அல்லாஹ்வின் திருபெயரால் ......
நிச்சயமாக அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  வாழ்க்கை வரலாறைப் படிப்பதினால் நம் வாழ்வில் மாற்றம் ஏற்படும் , அண்ணலாரின் மீது அன்பும், பாசமும் ,நேசமும் இன்னும் அதிகரிக்கும் . சுன்னத்துகளை பின்பற்ற அதிகம் கவனம் , ஆசைகள் பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உணவுகள் எப்படி இருந்தது என்று நாம் பார்த்தோம் . அவர்கள்  அணிந்திருந்த ஆடைகள் , இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன .

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை , கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி "இவ்விரு ஆடைகள் அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் " என்று குறிப்பிட்டார் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து "இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன் " என்றார் . அவர்களுக்கு அது தேவையாக இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டனர் . பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர்  என சஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்கள் .
நூல்: புகாரி .

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது  என்பதையும் உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது  தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள் .
நூல்: புகாரி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது  என்பதையும் இந்தச் சான்றுகளிருந்து அறியலாம்.

மாமன்னராகவும் , மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன .

உணவு , உடை போன்ற வசதிகளுக்காக தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான் . எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான் .மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான் . இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்து பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் , இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

உணவு ,உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா ? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா ?

" நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை . ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள் " என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார் .
நூல்: புகாரி.

கூலம் நிரப்பட்ட தோல் தலையணை  தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது  என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் .
நூல்: புகாரி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம் அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும் . இதைக் கண்ட நாங்கள் " அல்லாஹ்வின் தூதரே ! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம் ; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் " எனக் கேட்டோம் . அதற்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் " எனக்கு இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது ? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லகூடிய ஒரு பயணிக்கும் , அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும் , இவ்வுலகத்துக்கும் உள்ளது" எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள் .
இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார் .
நூல்கள் :திர்மிதி, இப்னு மாஜா ,அஹ்மத் .

"நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன் . எனது இரு கால்களையும் அவர்கள் சஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன் . அவர்கள் சஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள் . உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன் . அவர்கள் சஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன்.இவ்வாறு நடந்ததற்கு காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது " என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார் .
நூல்: புகாரி.

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5ஷ் 5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை .மனைவி கால்களை  மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது . என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்.

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள் .

"முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள் அதை மீட்காமலேயே மரணித்தார்கள் " என்று நபிகள் நாயகம் (ஸல்) மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார் .
நூல்:புகாரி.

அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியலைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ , வெள்ளிக் காசையோ , அடிமைகளையோ , வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை , தமது ஆயுதங்கள் , தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள் .
நூல் புகாரி.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவை தாம்.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்று இந்த உலகத்தில் யாராவது வாழ்ந்து இருக்கிறார்களா ? அப்படி யாராலும் வாழ முடியுமா ? நிச்சயமாக முடியாது . இந்த மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு ஒரு அற்புதமான வாழ்வு !அவர்களின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.......

இன்ஷாஅல்லாஹ் தொடரும்......

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!