அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, மார்ச் 30, 2014

இதயம் இணைந்து வாழுங்கள்!

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் ,புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!

உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் [நற்செயல்கள் செய்தாலும்] அவர் செய்த செயல்களை நிச்சயமாக வீணாக்க மாட்டான்.  [ஏனெனில் நீங்கள் ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பினும்] நீங்கள் ஒருவர் மற்றொருவரில் நின்றும் உள்ளவர் தாம்''.


இப்படி தித்திக்கும் திருமறையின் ஸூரத்துல் ஆலுஇம்ரான் வசனம் 195ல் ஆணையும் பெண்ணையும் ஒன்றிணைத்து அல்லாஹ்  பேசுகிறான்.

''அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவில் இருந்தே படைத்தான். அவரிலிருந்தே  அவர் [ஆதமின்] மனைவியையும் படைத்தான். பின்னர் அந்த [ஆதம் ஹவ்வா ] இருவரிலிருந்தே அநேக ஆண்களையும், பெண்களையும் [வெளிப்படுத்தி உலகில்] பரவச் செய்தான்''.

இப்படித் தித்திக்கும் திருமறையின் சூரத்துன் நிஸா அத்தியாயத்தின் வசனம் ஒன்றில்  ஆண் இனத்தையும், பெண் இனத்தையும் பின்னிப் பிணைத்து அல்லாஹ்  பேசுகிறான்.

ஆணா , பெண்ணா?

உலக அரங்கில் ஆண் இனம் உயர்ந்தது என்றும் , பெண் இனம்  பிற்பட்டது என்றும் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். எல்லாத் துறைகளிலும் ஆணே ஆதிக்கம் பெற்றவன் என்றும், பெண்ணுக்கு ஏதோ சில சதவிகிதங்கலைப் பிச்சை கொடுப்பது என்றும்  நிலைமை உருவாகி விட்டது. ஆணிடத்தில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களைப் பெண்கள் போராடிக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும்  என்ற நிலை உலக அரங்கில் நிலைத்து விட்டது. இதில் எல்லா தேசங்களும் ஏற்றத் தாழ்வு இன்றிக் கைகோர்த்து ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. இது இன்றளவும் நடந்து வரும் கொடுமை.

ஆணுக்கு பெண் அடிமையல்ல என்பதையும் ஆணும் பெண்ணும் சரி சமத்துவம் உள்ள தூய ஜீவன்கள் என்பதையும் இஸ்லாம் வலியுறுத்தியே சொல்கிறது. எல்லா விஷயங்களிலும் ஆணுக்கு பெண் பணிந்து போக வேண்டும் என்பதில் அர்த்தம் இருக்காது.  சில விஷயங்களில் சிலர் சிலருக்கு ஒத்துப் போவதிலும் விட்டுக் கொடுப்பதிலும் வெற்றி இருக்கிறது என்பது உண்மையான விஷயம் தான்.
ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் என்றோ ஒருவரை விட ஒருவர் தாழ்ந்தவர் என்றோ பேதம் கற்பிக்கக்கூடாது. இந்த பேதம் குடியேறிய இதயத்தில் என்றைக்குமே நடுநிலையைக் காண முடியாது.  நீதியையும் எதிர் பார்க்க முடியாது. நெஞ்சமே நாசத்தின்  வீழ்ந்து விடும்.

கணவனா? மனைவியா?

குடும்ப வாழ்விலும் தானே உயர்ந்தவன் என்று கணவன் மமதை கொண்டு அலையக் கூடாது. தனக்குக் கீழேதான் மனைவி என்ற வக்கிரமும் வரக்கூடாது. தனிப் போன்ற உயிருள்ள உரிமையுள்ள சமத்துவம் உள்ள தன்  இணைதான்  மனைவி என்ற மகத்துவமான எண்ணம் கணவன் மனதில் நிறைந்திர்க்க வேண்டும். அப்போதுதான் இல்லற வாழ்வு நல்லற வாழ்வாகச் சிறக்கும்.

கணவன் மனைவி இருவருமே சரி சமத்துவம் கொண்டு மனம் விட்டுப் பேசி மகிழ்வுடன் பழக  வேண்டும். மகிழ்வான வாழ்வுக்குத் தனது அன்பும் பரிவும் புன்னகையும் பாலமாக இருக்கச் செய்ய வேண்டும். தனது வாழ்வு பிறர் வாழ்க்கைக்குப் படிகளாக விளங்க வேண்டும் என்ற ஆசையுடன் வாழ வேண்டும். தனது  குடும்பம் பிற குடும்பத்துக்கு இலக்கணமாக அமைய விழைய வேண்டும். இப்படி ஒரு குடும்பம் அமைந்தால் அதுவே பல்கலைக்கழகம் .

ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டு உணர்வும், மாற்றுக் கருத்து ஏற்படும்போது விட்டுக் கொடுக்கும் மனப்பண்பும் -தவறுகள் நிகழ்ந்து விட்டபோது மன்னித்து மறந்து விடும் குணமே குடும்பத்தைக் கோபுரமாக நிமிர்த்தி வைக்கும். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்  போவதில்லை,, கெட்டுப் போனவர் விட்டுக் கொடுபதில்லை' என்று  பழமொழி சொல்வார்கள் . அணு அணுவாக அனுபவித்துப் பார்த்தவர் கூறிய உயர் மொழியாகத் தான் அது  இருக்க வேண்டும். தனக்கு வரும் வெற்றி என்  மனைவிக்கும் வெற்றி தான் என்று ஒரு கணவன் நினைக்க வேண்டும். தனக்கு ஏற்படும் அவமானம் என்  கணவனுக்கு அவமானம் தான் என்று ஒரு மனைவி நினைக்க வேண்டும்.

மகிழ்வையும், சஞ்சலத்தையும், சுகத்தையும், துக்கத்தையும் ஏற்றத்தையும், தாழ்வையும் எந்தத் தம்பதிகள் இருவருக்கும் சமம் என்று  எண்ணுகிறார்களோ அவர்கள் துன்பத்திலும் இன்பம் கொள்வார்கள்  . இதற்கு மாறாக எவர் மட்டும் எப்படியும் போகட்டும்,, தான் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதும் என்று நினைக்கும் கணவனோ அல்லது மனைவியோ இறுதியில் துன்பத்தின் விளிம்பில் வெதும்பி நிற்பார்கள். மனைவியின் கண்ணீரைத் துடைக்கும் கணவனும்- கணவனின் கண்ணீரைத் துடைக்கும் மனைவியும் காலம்  காலமாக இன்பம் காண்பார்கள். ஒருவரை ஒருவர் அன்பு கொண்டு வாழ்வில் வரும் உயர்விலும் தாழ்விலும் பங்கு கொண்டு இரு மனமும் ஒரு மனதாக இணைந்து நின்றால் என்றைக்குமே வாழ்வில் சஞ்சலம் இல்லை  . மகிழ்வு தான் இருக்கும். நல்ல எண்ணத்தோடு வாழும்  கணவனும் மனைவியும் என்றுமே தோற்றுப் போவதில்லை. கெட்ட எண்ணத்தில் வாழும் தம்பதிகள் செல்வங்கள் குவிந்து கிடந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்ததில்லை. இது உண்மை!

ஒரு பெண் , தனது கணவனுடைய பொருத்தத்தை அடைந்த நிலையில் இறந்து விட்டால், அவள் சொர்க்கத்திற்குள் நுழைந்து கொள்வாள்.
ஆதாரம்.. திர்மிதி]

ஒரு பெண்ணுக்கு இதை விட ஒரு சுபச் செய்தி வேற என்ன வேண்டும்? ஒரு பெண் கணவனுக்கு கீழ்படிந்து நடந்தால்  அவளுக்கு தான் நன்மை என்பதை ஏன் சில மனைவிமார்கள்  புரிவதில்லை?

விசுவாசம் கொண்ட ஒருவர் , தனது மனைவியோடு வெறுப்புடன் இருக்கக்கூடாது,, ஏனெனில் அவளுடைய செயல்பாடுகள் அவருக்குப் பிடிக்காதிருந்தாலும், ஏதேனும் அவளுடைய ஒரு செயலாவது பிடித்தமானதாக இருக்கக்கூடும்.
ஆதாரம் .. முஸ்லிம்]

ஒரு கணவனுக்கு இதை விட ஒரு அழகான  நபிமொழியின் விளக்கம் வேண்டுமா ?
அல்லாஹ் நல்ல தம்பதிகளாக வாழ அருள் செய்வானாக....
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!