ஞாயிறு, மார்ச் 23, 2014

தாமதித்து சுவனம்சென்ற ஸஹாபி [தொடர்ச்சி] 

அல்லாஹ்வின் திருபெயரால்.....
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி.............

மனிதனுக்கு ஆசை இருப்பது இயற்கைத்தான் . ஆனால் , அந்த ஆசை பேராசையாக மாறிடக்கூடாது என்பதுதான் எங்கள் ஆசை! 
சிலருக்கு பணம் இருந்தும் அவர்களுக்கு கொடுக்க மனம் இல்லை. சிலருக்கு மனம் இருந்தும் கொடுக்க பணம் இல்லை . இரண்டும் உள்ளவர்கள் இருக்கிறார்கள் அவர்களை நல்லடியார்கள் தான் என்று சொல்ல வேண்டும் .

ஒரு முறை நாயகம் [ஸல்] அவர்கள் ''ஸதகா '' வின் நன்மையைப்பற்றி விளக்கி அதை அளிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துக் கூறியவுடன் தன்னிடம் இருந்த பொருள்களிலிருந்து பாதி பாகத்தை தர்மமாக வழங்கிவிட்டார்கள். எகிப்திலிருந்து நூறு ஒட்டகங்களின் மேல்  ஏற்றி வந்த பொருட்கள் அனைத்தையும்தர்மம் செய்து விட்டார்  யென்றால் அவருடைய செல்வத்தின் மதிப்பை அறிந்து கொள்ளலாம்.!

அப்துல் ரஹ்மான் [ரலி] அவர்கள் பல சந்தர்பங்களில் நிறைய அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்துள்ளார்கள்  . யுத்தம் நேரத்திலும் , மற்ற நேரத்திலும் அவர்கள் தர்மம் அதிகமாக செய்து இருக்கிறார்கள். 

ஒரு நாள் நாயகம் [ஸல்] அவர்கள் ஸஹாபா பெருமக்கள் நிறைந்த கூட்டத்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது பெருமானார் [ஸல்] அவர்கள்  ''இன்று இரவு  நான் சுவனத்தைக் கண்டேன். அதில் உங்களுக்கு கிடைக்க விருக்கும் சிறப்பான பரிசுகளையும் கண்டேன்'' என்று கூறினார்கள் . அதன் பிறகு, ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் [ரலி] அவர்களை நோக்கி  ''சுவனத்தில் நான் மனிதரைப் பார்த்தேன் , அவர், சுவனத்திலுள்ள எந்த வாசல் வழியாக  சென்றாலும் அங்கிருந்து  ''மர்ஹபா மர்ஹபா''  [வாருங்கள் வாருங்கள்] என்ற அழைப்பொலிகள் வந்தன என்றார்கள். இதனைக் கேட்ட  ஹஜ்ரத் ஸல்மான் [ரலி] அவர்கள்  ''யா ரசூலுல்லாஹ்! அந்த அளவுக்கு தகுதி வாய்ந்த அந்த மனிதர், மிகவும் கவுரவமானவராகதான் இருப்பார்''என்றார்  . அதற்கு நாயகம் [ஸல்] அவர்கள்  ''அந்த மனிதர் ஹஜ்ரத் அபூபக்கர் சித்தீக் [ரலி] அவர்கள் தான்! '' என்று பதிலளித்தார்கள். அதன் பிறகு ஹஜ்ரத்  உமர் [ரலி] அவர்களைப் பார்த்து  ''நான் சுவனத்தில் வெள்ளை நிறம் கொண்ட முத்து மாளிகை  ஒன்றினைக் கண்டேன். அதில் வைடூரியங்கள் பதிக்கப்பட்டிருந்தன! இந்த மாளிகை யாருக்கு உரியது? என்று கேட்டேன். இது ''குறைஷ்'' குலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபருக்குச் சொந்தமானது என்று எனக்கு பதிலளிக்கப்பட்டது. அந்த அழகான மாளிகையின் பேரொளியும், கவர்ச்சியும் கண்டு  ''சைய்யிதுல் முர்சலீனான '' எனக்காகத் தான் இருக்கும் என்று எண்ணி அதில் நான் பிரவேசிக்க முற்பட்ட போது  , ''இது ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்களுக்குரியது'' என்று தெரிவிக்கப்பட்டது என்றார்கள். இதே போல் ஹஜ்ரத் உஸ்மான் [ரலி] ஹஜ்ரத் அலி [ரலி] மற்றும் பல முக்கிய ஸஹாபாக்களின் தகுதிகளின்படி அவர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசுகளைப் பற்றி படிப்படியாக அறிவித்தார்கள்.

இதன் பிறகு ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் [ரலி] அவர்களை நோக்கியப்படி ''என்னுடைய தோழர்கள் அனைவரும் சுவனத்தில் வந்து சேர்ந்த பிறகும், நீர் மிகவும் தாமதமாக என்னிடம் வந்தீர்கள். அதனால் நான் எங்கே நீர் சுவனவாசியாக அங்கீகரிக்கப்படாமல் விடுபட்டு விட்டீரோ? என்று பயந்து விட்டேன். வியர்வை சிந்தியப்படி வந்த உங்களிடம் ''ஏன் இவ்வளவு தாமதித்து வந்தீர்? என்று வினவிய போது , நான் ஈட்டிய பொருள்களின் கணக்குகளை சமர்ப்பிப்பதில் தாமதமாகி விட்டது.  என் சொத்துக்களை எப்படி சம்பாதித்தேன் அதை எங்கு  செலவு செய்தேன்? என்று என்னிடம் கேட்கப்பட்டது! என்று நீர் பதில் அளித்தீர் என்று நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் கூறினார்கள் .

தன்னைப் பற்றிய இந்த செய்தியினை, நாயகம் [ஸல்] அவர்கள் கூறியதைக் கேட்ட ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் [ரலி] அவர்கள் அழுதபடியே  'யா ரசூலுல்லாஹ்! இரவுதான் எகிப்தில் செய்த வர்த்தகத்தில் நூறு ஒட்டகங்கள் கொண்ட சாமான்கள் வந்தன. அவை அனைத்தையும் மதீனாவில் வாழும் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும்  'ஸதகா ''வாக அளித்தேன். அதில் தான் ஏதாவது குறைபாடு நேர்ந்துவிட்டு, அல்லாஹ்வின் சமூகத்தில் சமர்ப்பித்த என் கணக்கில் தாமதிக்கும் படியாகி விட்டிருக்கலாம்'' என்றார் அவர் கண்கள் குளமாயின.

அப்துல் ரஹ்மான் [ரலி] அவர்களிப்பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவர்கள் செய்த தர்மங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . இப்போது நாம் விஷயத்துக்கு வருவோம்.... சுவனவாசிகளில் பத்து பேர்களில் ஒருவர் தான் இந்த அப்துல் ரஹ்மான்[ரலி]  அவர்கள்.  இவர்கள் வாழ்நாளில் செய்த தர்மம் அதிகம் அதிகம்  . அவர்கள் சுவனத்தில் செல்லுவதற்கு தாமதம்  அவர்கள் உலகில் ஈட்டிய பொருள்களை கணக்கு சமர்ப்பிப்பதில் தாமதமாகி விட்டது  அதுதான் காரணம் . இன்று நம்மில் எத்தனை பேர்கள் முறையாக உழைத்து சம்பாதிக்கிறார்கள் , அவர்கள் இன்று வீண் விரயம்  அதிகம் செய்கிறார்கள்  . இன்னும் சிலபேர்கள் தவறான முறையில் சம்பாதிக்கிறார்கள் . இன்னும் பல் பேர்கள்  அதிகமாக செல்வம் குவிந்து கிடக்கிறது , அவர்களில் எத்தனை பேர்கள்  ஜகாத் கொடுக்கிறார்கள்? தான தர்மம்  செய்கிறார்கள் ?  மறுமையில்  இவர்களின் நிலை என்ன வென்று சொல்வது ?  நாம் இந்த சம்பவத்தில் மூலம் உணர வேண்டாமா?  சிந்திக்க வேண்டாமா ?  செல்வந்தர்களாக இருக்கக் கூடியவர்கள்  நிச்சயமாக ஆழமாக சிந்திக்க வேண்டும் ! அல்லாஹ்விடம் கணக்கு கொடுக்காமல் தப்பிக்க முடியாது  என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும்  . 

அல்லாஹ்  மிக அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!