அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

வெள்ளி, மார்ச் 21, 2014

போதனையும்சாதனையும்

அல்லாஹ்வின் திருபெயரால்....
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !!!

காலம் ரொம்ப சுருங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு மரணம் நெருங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும். நமது கடந்தக் காலத்தை நினைத்துப் பார்த்தால் ஒன்றும் இல்லை . சொர்ப்பகாலம் என்று தான் நமக்கு தோன்றும்.


வள்ளல் நபி [ஸல்] அவர்கள் வம்பான வார்த்தைகளை வாய் திறந்து வழங்கியதாக வரலாறே கிடையாது . தேவையான நேரத்தில் தேவையான விஷயங்களை தெள்ளத் தெளிவாக அள்ளித் தெளித்தார்கள். மற்ற நேரங்களில் மௌனமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு சொல்லும் , செயலும் அரியதோர் படிப்பினையை அகிலத்திற்கு அறிவுறுத்திக் கொண்டிருக்கிறது. பெருமானார் [ஸல்] அவர்கள் எதை சொன்னார்களோ, அதையே செய்தார்கள். எதை செய்தார்களோ அதையே சொன்னார்கள். ஆனால் இன்று செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் போதிக்கிறான். நபி [ஸல்] அவர்கள் சாதிக்கவும் செய்தார்கள்   போதிக்கவும் செய்தார்கள். போதனை பெரியதா? சாதனை பெரியதா? என்று ஒன்றில் இருந்து ஒன்றை இனம் பிரித்து பார்க்க முடியாத படி  அவர்களது வாழ்வும், வாக்கும் பின்னிக் கிடந்தன.

இறைவன் அருளிய திருமறைப்படி வாழ்ந்து காட்ட முடியுமா? என்று வினாவுக்கு விடையாக  வாழ்ந்து காட்டினார்கள் , அந்த வள்ளல் நபிகளார் ! அந்த கருணை நபியின்  கண்ணிய வாழ்வை கண் திறந்து கருத்துடன் படித்துப் பார்த்தால் கரையாத கல் நெஞ்சமும் கரைந்து விடும். நிறையாத குறை நெஞ்சமும் நிறைந்து விடும். அரசனுக்கும் , ஆண்டிக்கும், குருவுக்கும், சீடனுக்கும் இன்னும் வாழ்வில் எந்தெந்த தரத்தில்  இருக்கும் அத்தனை பேர்களுக்கும் அவர்களது வாழ்வு ஓர் ஒளி விளக்காக மிளிர்கிறது . என்றோ நடக்கப் போவதையும் அன்றே சொல்லி விட்டுச் சென்ற அந்த  மாண்பாலரின் தேன் உரைகள் தான் எத்தனை/ எத்தனை?

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் -

''என் உம்மத்தினர்களுக்கு விரைவில் இப்படி ஒரு காலம் வரும். அக்காலத்திலே..... மனிதர்கள் ஆணவம், அகம்பாவம் முதலிய துர்குணங்கள் நிறைந்து இருப்பார்கள்.கல்வி  கற்பதை வெறுத்து அறிவிலியாக இருப்பார்கள் . அநீதம், அக்கிரமம், அழிச்சாட்டியம் செய்வதையே விரும்புவார்கள். நீதம் பேச தயங்குவார்கள்  . நல்லவைகளை கெட்டவைகலாகவும் , கெட்டவைகளை நல்லவைகலாகவும் கருதுவார்கள். முஸ்லிம் இழிவாகவும், காஃபிர்கள் சங்கைவான்கலாகவும்  கருதுவார்கள். முஸ்லிம்களின் ஒற்றுமை குன்றி வேற்றுமை வேரூன்றி நிற்கும். மஸ்ஜிதுகள் பாதைகளாகவும், தூங்குமிடமாகவும் பயன்படுத்தப்படும் . முஸ்லிம்கள் ஒருவருக் கொருவர் பகைத்துக் கொண்டு சர்ச்சைகள் செய்து சபித்துக் கொள்வார்கள்.

ஐங்காலத்  தொழுகைகளையும் அலட்சியமாக கருதி விட்டு விடுவார்கள் . ஏழைகள் கேவலமாக கருதப்படுவார்கள் [இன பந்துக்களாக இருப்பினும் சரியே] சிறியவர்கள் உள்ளங்களில் பெரியோர் பற்றிய பயம் இருக்காது. பொறாமை அதிகமாகும். இதனால் ஒரு மகன் தன் தகப்பன் மரணிப்பதை விரும்புவான். உண்மை குறைந்து பொய் மிகைத்து விடும். மது அருந்தும் பழக்கம் சர்வசாதார்ணமாகிவிடும்  . வட்டி , லஞ்சம் சர்வ சாதாரணமாகிவிடும் [சாதாரண செயலாக  கருதப்படும்] ஆண்கள் வெட்கப்படுவார்கள். பெண்கள் வெட்கப்படமாட்டார்கள். அக்கிரமக்காரனுக்கு உதவியும், ஒத்தாசையும் புரிவார்கள். யாசிப்போரை விரட்டி விடுவார்கள்.

மோச நாசங்கள் நிறைந்து விடும். நம்பிக்கை குறைந்து விடும். ஒரு பாவமும் அறியாத பத்தினிப் பெண்கள்  மீது விபச்சாரப் பட்டம் சுமத்தப்படும். ஒரு தாசி தன் மகளை சிங்காரிப்பது போல ஒரு தாய் தன்     மகளை சிங்காரிப்பால்.அக்காலத்திலே வான் பொழியாது. பூமி முளைக்காது. சிறியோர் பெரியோரை கண்ணியப்படுத்தமாட்டார்கள். பெரியோர் சிறியோர் மீது அன்பு செலுத்த மாட்டார்கள். நல்லொழுக்க சீலர்கள் இழிவாக கருதப்படுவார்கள். எங்கு நோக்கினும் குழப்பமும், புரட்சியும் பரவிப் பெருகி நிற்கும். தர்க்கம் புரிவதற்கும், திறமையைக் காட்டுவதர்க்குமே கல்வி பயில்வார்கள்.

முஃமின்களின் மனதில் ஈமானின் நிலை குலைந்து விடும். தவறுகள் செய்து விட்டு அதைப் பிறரிடம் பெருமையாக கூறுவார்கள். உண்மையை உரைப்பவர் மக்களால்நிந்திக்கப்படுவார்கள் . குர் ஆன் ஷரீபை சங்கீதத்தைப் போன்று இராகமிட்டு ஓதுவார்கள். ஆனால் அது அல்லாஹ்வின் அருள் மொழியாயிற்றே, என எண்ணிப் பார்க்க மறந்திடுவார்கள். இதுபோன்று இன்று நடக்கும் இந்த செயல்களை முன்பே நமக்கு எச்சரித்து விட்டார்கள், ஏந்தல் நபிகளார்! கண்ணை மூடிக் காலை  நீட்டி களிப்போடு தூங்கியவன் காலை கருக்கலுக்குள் கட்டையாகி கதை முடிந்து போகும் இந்த அற்பமான  உலகில் இன்றோ, நாளையோ என்று பயப்படக்கூடிய இந்த துன்யா வாழ்வை விட என்றும் அழியா சொர்க்க வாழ்க்கையை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? நரக நெருப்பை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அளவற்ற அருளாளனின் அன்பை எண்ணி தினமும் அயராது வழிபட்டு இந்த  மாய உலகின் போதையிலிருந்து நம்மை நாம் பாதுக்காக்க புண்ணிய நபியின் புனித உரைகளை ஏற்று நம் வாழ்வில்  மறு மலர்ச்சி காணுவோம். பண்பான வழிகளில் பக்குவம் பெறுவோம். இழிந்த கோலத்தை அழகு  காட்டி சாக்கடை வாழ்க்கையில் தள்ளும் இந்த உலக ஆபத்திலிருந்து நம்மை பாதுகாத்து மறு உலக  நிலையான வாழ்விற்காக நாம் நம்மை தயார் செய்வோம்!

அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!