ஞாயிறு, ஏப்ரல் 20, 2014

காலம்குறுகிவிடும் நற்செயல் குறைந்துவிடும்  

காலம் குறுகிவிடும் நற்செயல் குறைந்துவிடும்  அல்லாஹ்வின் திருபெயரால் ...........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !

ஒரு ஆண்டு என்பது ஒரு மாதமாக ஆகிவிட்டது , ஒரு மாதம் என்பது ஒரு வாரமாக ஆகிவிட்டது, ஒரு வாரம் ஒரு நாளாக இருக்கிறது , ஒரு நாள் ஒரு மணிநேரமாக ஆகிவிட்டது. அல்லாஹ் காலத்தை சுருக்கிவிட்டான் . மனிதர்களின் ஆயுள் காலத்தையும் குறைத்துவிட்டான் . மரணத்துக்கு வயது காலம் , நேரம் எதுவும் இல்லை . ஃபித்னா காலம் வந்துவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு ஃபித்னா தலை தூக்க ஆரம்பித்துவிட்டது . இதை விட்டு நாம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி  எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்வது, அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வழிமுறைகளை அறிந்து நாம் பின்பற்றி செல்லுவது.


அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறியதாவது..

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள்,  ''[இறுதிக் காலத்தில் மக்களின் ஆயுட் ] காலம் குறுகிவிடும்,, நற்செயல் குறைந்துவிடும் ,, பேராசையின் விளைவாக மக்களின் மனங்களின்] கருமித்தனம் உருவாக்கப்படும். ஹர்ஜ்' பெருகிவிடும்'' என்று சொன்னார்கள்  .
மக்கள் , ஹர்ஜ் என்றால் என்ன? என்று கேட்டனர் . நபி [ஸல்]அவர்கள், ''கொலை,கொலை'' என்று [இருமுறை] கூறினார்கள் .

அபூமூஸ அல்அஷ்அரீ [ரலி] அவர்கள் கூறியதாவது..

''இறைநம்பிக்கையாளர்கள் ஒருவர்கொருவர் [ஒத்துழைக்கும் விஷயத்தில்] ஒரு கட்டடத்தைப்  போன்றவர்கள் ஆவர் . கட்டடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுசேர்க்கிறது '' என்று நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் . பிறகு தம் கைவிரல்களை ஒன்றோடொன்று கோத்துக்  காண்பித்தார்கள்.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சொன்னத்துக்கு நேர்மாறாக தான் இன்று முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பது எதார்த்த உண்மை. கருத்து வேறுபாடுகள் வரலாம் ஆனால், அங்கே பிளவுகள் வரலாமா? இயக்கங்கள் புதுசு புதுசாக உருவாக்கலாமா? என்பது ஒரு கேள்வி??? போற்றுவதும் , தூற்றுவதும் தான் நம்மிடத்தில் அதிகம் அதிகம் இருக்கிறது.

அபூபக்ரா நுஃ பைஉ பின் அல்ஹாரிஸ் அவர்கள் கூறியதாவது..

ஒரு மனிதரைப் பற்றி நபி [ஸல்] அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஒருவர் அவரைப் பற்றி புகழ்ந்துரைத்தார்.  உடனே நபி [ஸல்] அவர்கள் , ''உமக்குக் கேடுதான்  . உம்முடைய தோழரின் கழுத்தை நீர் துண்டித்துவிட்டீரே! என்று பலமுறை கூறினார்கள்.
பிறகு , ''உங்களில் ஒருவர் [தம் சகோதரரைப் ] புகழ்ந்தேயாக வேண்டும் என்றிருந்தால், '[அவர் குறித்து ] நான் இன்னின்ன விதமாக எண்ணுகிறேன்' என்று [மட்டும்] அவர் கூறட்டும் . அதுவும் அவர் அவ்வாறு இருப்பதாகக் கருதினால் மட்டுமே கூறட்டும்  . அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை [செய்து முடிவு] செய்பவன் ஆவான். அல்லாஹ்வை முந்திக்கொண்டு யாரையும் தூய்மையானவர் என்று [யாரும்] கூற வேண்டாம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் காலித் பின் மஹ்ரான்  [ரஹ் ] அவர்களின் அறிவிப்பில் , ''[நபி [ஸல்] அவர்கள் தம்முன் புகழ்ந்தவரைப்  பார்த்து] உமக்கு அழிவுதான் '' என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

ஒருவரை அளவு கடந்து புகழும்போது அவருக்குத் தலைக்கனம் மும் கர்வமும் ஏற்பட வாய்ப்பு உண்டு . மேலும் அவரிடம் இல்லாத பண்புகளையும் இருப்பதாகக் கூறிப் புகழ்கின்ற  நிலையம் உருவாகும். ஏனெனில் , தாம் நிறையவே சாதித்துவிட்டதாக அவர் எண்ணத் தொடங்கிவிடுவார் . ஆகவேதான் அவ்வாறு புகழ்வது ஒருவரை அழிப்பதற்க்குச்  சமமாகும் என்றார்கள் நபி [ஸல்] அவர்கள்.

இன்று சில இயக்க அமைப்பு தலைவர்களை அளவுக்கு மீறி புகழ்வதை நாம் பார்க்கிறோம். அவர்களுக்காக மற்ற முஸ்லிம் சகோதரர்களைக் கூட பகைத்துக் கொள்ளும் அளவுக்கு  வக்காலத்து வாங்கக் கூடிய சில நபர்களை நாம் பார்க்கிறோம். அந்த தலைவர்களுக்காக கூட மற்றவர்களை இழிவாகவும் , கெட்ட  வார்த்தைகளைக் கொண்டு பேசுவதையும் நாம் பார்க்கிறோம். இவர்கள்தான் மக்களுக்கு நேர்வழி பக்கம் அழைத்துச் செல்லக் கூடியவர்கள்? அன்பு சகோதர்ரர்களே! கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹாரிஸ் பின் வஹ்ப் [ரலி] அவர்கள் கூறியதாவது..

நபி [ஸல்] அவர்கள் [ஒருமுறை[ ''சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா? அவர்கள் [மக்களின் பார்வையில்] பலவீனமானவர்கள்,, பணிவானவர்கள். [ஆனால்] அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு [எதையேனும்] கூறுவார்களானால் , அல்லாஹ் அதை [அவ்வாறே] நிறைவேற்றிவைப்பான். [இதை போன்றே] நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் இரக்கமற்றவர்கள் அகம்பாவம் கொண்டவர்கள்,, பெருமை பிடித்தவர்கள்'' என்று கூறினார்கள்.

இன்று மக்களில் பலவீனமானவர்கள், பணிவானவர்கள் தான் ஒதுக்கப்பட்டு அவர்களை புறக்கணித்து விடுகிறார்கள். இரக்கம் இல்லாவர்களும் , ஆணவம் கொண்டவர்களும், பெருமை பிடித்தவர்களும் தான் சிறப்புள்ளவர்களாக கருதுகிறார்கள். நாங்கள் தான் நேரான வழியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்ளும் சிலர்  கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் . அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். மற்றவர்களை இழிவாக எண்ணக் கூடாது. யார் நேர் வழியில் இருக்கிறார்கள் என்பது அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும்தான் தெரியும்  என்பது உணர்ந்து நிதானமாக பேச வேண்டும் , நடக்க வேண்டும்.
அல்லாஹ்  நம் அனைவரையும் நல்லடியார்களின் கூட்டத்தில் சேர்த்து வைப்பானாக..! சொர்க்கவாசிகளின் பட்டியலில் ஆக்கி வைப்பானாக! ஆமீன்..

அல்லாஹ் மிக அறிந்தவன்.
இந்த கட்டுரை யாரையும் , எந்த இயக்கத்தையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை .        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!