அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மே 03, 2014

அஸ்ஸிராத்' என்பது நரகத்தின் பாலமாகும்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


'அஸ்ஸிராத் ' என்பது நரகத்தின் மேல் அமைக்கப்படும் ஒரு பாலமாகும். இறைநம்பிக்கையாளர்கள் அதன் மீது நடந்து சென்றே சொர்க்கத்தை அடைவார்கள் . அந்தப் பாலம் வாள்  முனையைவிட மிகவும் கூர்மையானதாகவும், தலைமுடியைவிட மிகவும் மெல்லியதாகவும் இருக்கும். மக்கள், தாங்கள் புரிந்த நற்செயல்களுக்கேற்ப அந்தப் பாலத்தைத் துரிதமாகவோ மெதுவாகவோ கடந்துசெல்வார்கள் . தீயவர்கள் அப்பாலத்தில் நடக்க இயலாமல் கீழே நரகத்தில் விழுந்துவிடுவார்கள். [ஃபத்ஹுல் பாரீ , இர்ஷாதுஸ் ஸாரீ ]அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறியதாவது..

மக்களில் சிலர்  ''அல்லாஹ்வின் தூதரே! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா? '' என்று  [நபி [ஸல்] அவர்களிடம்] கேட்டார்கள். அப்போது நபி [ஸல்] அவர்கள் , ''மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா? '' என்று கேட்டார்கள். மக்கள்  ''இல்லை,, அல்லாஹ்வின் தூதரே! '' என்று பதிலளித்தார்கள் . நபி [ஸல்] அவர்கள் , ''பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழுநிலாவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா? என்று கேட்டார்கள். மக்கள் ''[சிரமம்] இல்லை,, அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தார்கள்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள் . அல்லாஹ் மனிதர்களை [மறுமை மன்றத்தில்] ஒன்றுகூட்டி , ''[உலகத்தில்] யார் எதை வழிபட்டுக் கொண்டிருந்தார்களோ அதைப் பின்தொடர்ந்து செல்லட்டும் '' என்பான் . ஆகவே , சூரியனை வழிபட்டுக்கொண்டிருந்தவர்கள்  [அதைப்] பின்தொடர்ந்து செல்வார்கள் .  ஷைத்தான்களை வழிபட்டுக் கொண்டிருந்தவர்கள் [அவற்றைப்] பின்பற்றிச் செல்வார்கள்.

இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள் . அவர்களிடையே நயவஞ்சர்களும் இருப்பார்கள். அப்போது இறைவன் , அவர்கள் அறியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து  ''நான்தான் உங்கள் இறைவன் '' என்பான் . உடனே அவர்கள்  ''உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம். எங்கள் இறைவன் எங்களிடம் வரும்வரை நாங்கள் இங்கேயே இருப்போம் . எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்துகொள்வோம்'' என்பர் .

அப்போது இறைவன் அவர்கள் அறிந்த தோற்றத்தில் அவர்களிடம் வந்து  ''நானே  உங்கள் இறைவன் '' என்பான் . அதற்கு அவர்கள்   ''நீயே எங்கள் இறைவன் '' என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள் . அங்கு நரகத்தின்  மீது பாலம் அமைக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. நானே [அந்தப் பாலத்தைக்] கடப்பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அப்போதைய நிலையில் இறைதூதர்கள் அனைவரின் பிரார்த்தனையும்   'அல்லாஹ்வே! காப்பாற்று காப்பாற்று  ' என்பதாகவே இருக்கும் . அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும். அவை கருவேல மரத்தின் முட்களைப் போன்றிருக்கும். ''கருவேலமர முள்ளை நீங்கள் பார்த்ததில்லையா? என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்  [பார்த்திருக்கிறோம்] அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தார்கள் .

[தொடர்ந்து] அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள் .. அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப்  போன்று இருக்கும். ஆயினும் , அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அப்போது  அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப் பிடிக்கும்  . அவர்களில்  [இறைமறுப்பு உள்ளிட்ட] தம் [தீய] செயல்களால்  அழிந்துபோனவரும் இருப்பார்.

[இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால்] மூர்ச்சையாகிப் பிறகு  பிழைத்துக்கொள்பவரும் இருப்பார். இறுதியாக இறைவன் , தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று உருதிகூரியவர்களில்  தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான்.

அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான். வானவர்கள் அவர்களை சஜ்தாவின் [சிரவணக்கம்] அடையாளங்களை வைத்து  இனங்கண்டு கொள்வார்கள் . [ஏனெனில்] அல்லாஹ்  நரகத்திற்கு, மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான். ஆகவே , வானவர்கள் அவர்களை [நரகத்திலிருந்து] வெளியேற்றுவார்கள்.


அப்போது அவர்கள் [நரக நெருப்பில் ] கரிக்கப்பட்டிருப்பார்கள். எனவே அவர்கள்மீது   'மாஉல் ஹயாத்' எனப்படும்  [ஜீவ] நீர் ஊற்றப்படும். உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைபயிர் முளைப்பதைப் போன்று  [புதுப் பொலிவுடன்] நிறம் மாறிவிடுவார்கள். அவர்களில் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக்கொண்டிருக்கும் ஒரு மனிதர்  மட்டும் எஞ்சுவார் . அவர், ''என்  இறைவா! நரகத்தின் [வெப்பக்] காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது. அதன் ஜூவாலை என்னைக் கரித்துவிட்டது  . ஆகவே , நரகத்தைவிட்டு என் முகத்தை [வேறு பக்கம் ] திருப்பிவிடுவாயாக! என்று அல்லாஹ்விடம்  பிரார்த்தித்துக்கொண்டேயிருப்பார்  .

அப்போது அல்லாஹ்  ''[உன் கோரிக்கையை ஏற்று] இதை நான் உனக்கு வழங்கிவிட்டால்  வேறொரு கோரிக்கையையும் நே முன்வைக்கலாம் அல்லவா? என்று கேட்பான். அதற்கு அவர் ''இல்லை,, உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன்'' என்பார் . ஆகவே, இறைவன்  அவரது முகத்தை நரகத்தைவிட்டு  [வேறு பக்கம்] திருப்பிவிடுவான்.

அதற்குப் பிறகு  ''என் இறைவா! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! '' என்பார் அவர் , அதற்கு இறைவன்  ''வேறெதையும்  உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா? மனிதா! உனக்குக் கேடுதான் . உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன!'' என்பான். ஆனால் , அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார். அப்போது இறைவன் , ''நீ கேட்டதை உனக்கு நான்  கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடாது'' என்பான் .

அதற்கு அவர்  ''இல்லை,, உன் கண்ணியத்தின் மீதாணையாக ! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன்  '' என்று சொல்லிவிட்டு, வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார்.

இதையடுத்து இறைவன் அவரை சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான்.  சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம்வரை  மௌனமாக இருப்பார். பிறகு  ''இறைவா! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!'' என்று கூறுவார் .பின்னர் இறைவன் , ''வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா? மனிதா! உனக்குச் கேடுதான் உனது ஏமாற்று வேலைதான் என்ன! என்று கேட்பான். அதற்கு ''என் இறைவா! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக  ஆக்கிவிடாதே! '' என்று இறைவன் சிரிக்கும்வரை பிரார்த்தித்துக்கொண்டே இருப்பார். அவரைக் கண்டு இறைவன்  சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன்  அனுமதி வழங்கிவிடுவான் .

சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்தபின் , ''நீ [விரும்பிய] இன்னதை ஆசைப்படலாம்  '' எற்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைப்படுவார். பிறகு [மீண்டும் ] ''நீ [விரும்பிய] இன்னதை ஆசைப்படலாம் '' என்று சொல்லப்படும். அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப்பெரும்வரை ஆசைப்பட்டு [தம் விருப்பங்களைத் தெரிவித்து] க் கொண்டே இருப்பார். அப்போது இறைவன், 'இது உனக்கு கிடைக்கும்,, இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்பான்.

அறிவிப்பாளர்  அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறினார்கள். இந்த மனிதர்தான்  சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
ஆதாரம்.. புகாரீ]

சில ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.. இந்த கடைசி மனிதருக்கு அல்லாஹ்  இந்த உலகத்தை போன்று பத்து மடங்கு  கொடுப்பான் என்று வந்துள்ளது.
நரகத்திலிருந்து வெளியேறும் கடைசி மனிதரும் , சொர்க்கத்தில் நுழையும் கடைசி மனிதருமான  இவருக்கு எவ்வளவு அல்லாஹ் வழங்குகிறான் என்றால் . நரகத்தைவிட்டு பாதுக்காகப்பட்டவர்களுக்கு  சொர்க்கத்தில் முதன் முதலாக நுழைய்பவர்களுக்கு  என்ன என்ன பாக்கியங்கள் , உயர் பதவிகள் , மாளிகைகள், இன்னும் நிறைய நிரப்பமான கூலிகள் கிடைக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது புத்திக்கு எட்டாது . அல்லாஹ்  நம் அனைவரையும்  நரகத்தைவிட்டு பாத்துக் காக்க வேண்டும். சொர்க்கத்தில் முத்தம் முதலாக நுழைய கிருபைச் செய்ய வேண்டும்.  ஆமீன்.................

அல்லாஹ் மிக அறிந்தவன்.
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!