வியாழன், மே 08, 2014

[தலை]விதி

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

ஒருமுறை உமர் [ரலி] அவர்கள் அன்றைய ஷாம் [சிரியா ] நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டபோது அங்கு பெருநோய் கண்டிருப்பதாக வழியில் கேள்விப்பட்டார்கள். உடனே மதீனா திரும்பிவிட எண்ணிய உமர் [ரலி] அவர்களிடம், ''விதியிலிருந்து  ['களா '] வெருண்டோடுகிரீர்களா ? என அபூஉபைதா [ரலி] அவர்கள் கேட்டார்கள் . அதற்கு உமர் [ரலி] அவர்கள்  , '' 'களா ' விலிருந்து [இப்போதைய நிலையிலிருந்து] கதரின் பக்கம் [இறைவன் முன்பே தீர்மானித்த முடிவின் பக்கம்] செல்கிறேன்'' என்று பதிலளித்தார்கள். இதிலிருந்து  'கதர் ' [இறைவனின் தீர்மானம்] என்பது , களா ' வாகி நடைமுறைக்கு வராத வரை அதை இறைவனே மாற்றுவதற்கு இடமுண்டு என்று தெரிகிறது.



உண்மையே பேசிவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் [கருவாக] சேமிக்கப்படுகிறார் . பிறகு அதைப் போன்றே [நாற்பது நாட்கள்] அந்தக் கரு [அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்] ஒரு கருக் கட்டியாக மாறுகிறது . பிறகு அதைப் போன்றே [மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்றே] ஒரு சதைப்பிண்டமாக மாறிவிடுகிறது.

பிறகு [அதனிடம்] அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள் , [செயல்பாடு], அவன் நற்பேருபெற்றவரா ? அல்லது நற்பேறு அற்றவரா? [ஆகியவை எழுதப்படும்] . பிறகு அவனுள் உயிர் ஊதப்படும் .

இதனால்தான் அல்லாஹ்வின் மீதாணையாக! 'உங்களில் ஒருவர் , அல்லது ஒரு மனிதர் ' நரகவாசிகளின் [தீய ] செயலைச் செய்துகொண்டே  செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே  'விரிந்த இரு கைகளின் நீட்டளவு' அல்லது 'ஒரு முழம் ' இடைவெளிதான் இருக்கும்,, அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.

[இதைப் போன்றே] ஒருவர் சொர்க்கவாசிகளில் [நற்] செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே  'ஒரு முழம் ' அல்லது 'இரு முழங்கள் ' இடைவெளிதான் இருக்கும்,, அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின்  செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஆதாரம் புகாரீ]

இம்ரான் பின் ஹூஸைன்  [ரலி] அவர்கள் கூறியதாவது..

ஒரு மனிதர் , ''அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று [முன்பே அல்லாஹ்வுக்குத்] தெரியுமா? எனக் கேட்டார் . நபி [ஸல்] அவர்கள்  ''ஆம்  [தெரியும்] என்று சொன்னார்கள் .

அவர்  ''அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டுமா? '' என்று கேட்டார். நபி [ஸல்] அவர்கள்  ''ஒவ்வொருவரும் 'எ[தை அடைவ] தற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது  'எ [தை அடைவ] தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ  ' அதற்காகச் செயல்படுகிறார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம்.. புகாரீ]

அதாவது ஒருவர் சொர்க்கவாசியா? அல்லது நரகவாசியா? என்பது அல்லாஹ்வைப் பொறுத்த மட்டில்  , அவனுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயமாகும். மனிதனைப் பொறுத்த வரை , அவனுக்கு அது தெரியாது.. மறுமையில்தான் தெரியும்  . ஆகவே மனிதன் தன்  சுவாதீனத்தையும் விருப்பத்தையும்  பயன்படுத்தி நற்செயல்கள் புரிய எல்லா முயற்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆர்வத்துடன் முயற்சிகள் மேற்கொள்ளும்போது நன்மைகள் கைகூடி வர இறைவன் அருள் புரிவான். இறைவனின்  அருள் நிச்சயமாக கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையுடன் முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து , தலை விதிப்படி நடக்கட்டும் என்று இருந்துவிடலாகாது. ஏனெனில் ஒருவருடைய தலைவிதி என்ன என்பது , அதை நிர்ணயித்த அல்லாஹ்  ஒருவனுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாகும். அது நடைமுறைக்கு வந்த பிறகுதான் மற்றவர்களுக்குத் தெரியவரும்  . எனவே , தமக்கு எதைப் பற்றி அறிவே இல்லையோ அதைக் காரணம் காட்டி, இப்போது  'நற்செயல் புரிவதில் பயனில்லை என்று வாதிடுவது அறிவுடைமை ஆகாது.

விதி என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்களில் ஒன்றானதால் அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ  சொல்லித்தந்த அடிப்படையிலேயே அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். நம் கணிப்புகளின் அடிப்படையில் விதி குறித்து விவாதித்துக்கொண்டிருக்கலாகாது இதனாலேயே  ''விதி குறித்துப் பேசப்பட்டால் நீங்கள் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள் '' என நபி [ஸல்] அவர்கள் அறிவுத்தினார்கள். [தப்ரானி] . [ஃபத்ஹுல் பாரீ ]

இப்னு உமர் [ரலி] அவர்கள் கூறியதாவது..

நபி [ஸல்] அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும் , ''நேர்த்திக்கடன் [விதியிலுள்ள] எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன்மூலம் கஞ்சனிடமிருந்து [செல்வம்] வெளிக்கொணரப்படுகிறது [அவ்வளவுதான்] என்று சொன்னார்.
ஆதாரம்.. புகாரீ]

எடுத்துக்கொள்வதையே  'நேர்த்திக்கடன்' [நத்ர் ] என்பர் . அல்லது பொதுவாக அல்லாஹ்வுக்காக இன்ன  நன்மையைச் செய்கிறேன் என உறுதி எடுத்துக்கொள்வதாகவும் இது இருக்கலாம். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால், இந்த நேர்த்திக்கடன் மனிதனை விதியின்பால் கொண்டுசெல்லுமே ஒழிய, நேர்த்திக்கடனால் விதியை மாற்றிவிட  முடியாது . அல்லாஹ் எதை ஏற்படுத்தியுள்ளானோ அதுதான் நடக்கும். தனக்கு ஒரு நன்மை வருகிறது எனும்போது கஞ்சன் கூட நேர்த்திகடன் மூலம்  ஏழைகளுக்குச் செலவிட முன்வருவான். இவ்வாறு கஞ்சனிடமிருந்து  செல்வத்தை வெளியேற்றி ஏழைகளுக்குச் கொடுக்க நேர்த்திக்கடன் ஒரு வழியாகும். அவ்வளவுதான் மற்றப்படி விதியை வெல்ல நேர்த்திக்கடனாலும் முடியாது.

[ஃபத்ஹுல் பாரீ ]

அல்லாஹ் மிக அறிந்தவன்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!