அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மே 17, 2014

சதகத்துல் ஜாரிய எனும் தர்மம்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


சதகத்துல் ஜாரிய  என்பது ஒரு மனிதனுடைய ஜீவிய காலத்திலும், அவர் இறந்து விட்டபிறகும் நன்மைகளை வழங்கி கொண்டே இருக்கும் சில தர்மங்களைச் சார்ந்த காரியங்களாகும் அவைகளை பொது மக்களுக்கு பயன்படக்கூடிய இறையில்லம், மதரஸா , கல்விக்கூடம், மருத்துவமனை, தண்ணீர் விநியோகம் போன்றவைகளுக்கு வாரி வழங்குதல் அல்லது தாமே நிறுவி பொதுமக்களின் உபயோகத்துக்கு தர்மம் [வக்பு] செய்து விடுவதாகும்.


ஒருவர் இறந்தபின் அவரை தொடர்ந்து மூன்று விஷயங்கள் மட்டும் நன்மைகள் வந்துகொண்டே இருக்கும் . அதில் ஒன்றுதான் இந்த சதகத்துல் ஜாரிய எனும் தர்மம் ஆகும் . இந்த விடயத்தை நம் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள்ள வேண்டும் . நம் வாழ்வின் காலங்களில் சில சதகத்துல் ஜாரிய எனும் தர்மம் அவசியம் ஏதாவது ஒன்று செய்ய வேண்டும் . நல்ல ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்க வேண்டும், கல்வி பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும் , எத்தி வைப்பதிலும்  நாம் அவசியம் செய்ய வேண்டும்.

இதற்கோர் முன்மாதரியாக உஸ்மான் [ரலி] அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த ஓர் அற்புதாமான நிகழ்ச்சியை கூறலாம். அவர்களுடைய காலத்தில் ஒரு சமயத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது ஒரு யூதருக்குச் சொந்தமான ஒரு கிணறு மட்டும் வற்றாமல் நீரூற்று சுரந்து கொண்டே இருந்தது. அவன் சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு தண்ணீரை நல்ல விலைக்கு விற்றுக்கொண்டிருந்தான்.

அப்போது உஸ்மான் [ரலி] அவர்கள் அந்த யூதநிடத்தில் அந்த கிணற்றை விலைக்கு கொடுக்கும்படி கேட்டார்கள். அவன் தர மறுத்து விட்டான் , உஸ்மான் [ரலி] அவர்கள் அதோடு விட்டுவிடவில்லை மீண்டும் அவனிடம் சென்று , அன்பரே! ஒரு பகுதியையாவது விலைக்கு கொடு , மறு பகுதியை நீ வைத்துக்கொள் ஆளுக்கொருநாள் வீதம் முறை வைத்து பயன் படுத்திக்கொள்ளலாம் . உன்னுடைய முறை அன்று நீ என்ன விலைக்கு வேண்டுமானாலும் விற்றுக்கோள் என்று யோசனையை கூறினார்கள்.

யூதனும் சற்று யோசித்து விட்டு , ஆகா இது நல்ல யோசனையாகவல்லவா தெரிகிறது . இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடக்கூடாது நல்ல விலைக்கு விற்று பெரும் பணத்தை பெற்று விடலாம், அதோடு தமது முறையன்று தண்ணீரை விற்றும் பணம் சம்பாதிக்கலாம். ஆக இருவகையில் தமக்கு பெரும் பணம் கிடைத்து விடும் என்ற பேராசையில் விற்றுவிட சம்மதித்தான்.

உஸ்மான் [ரலி] அவர்கள் இக்கிணற்றின் ஒரு பகுதியை வாங்கி மக்களுக்கு தர்மம் செய்து விட்டார்கள்  . மக்களும் மன மகிழ்வோடு தண்ணீரை எடுத்துச்சென்றனர் . நாளா வட்டத்தில் நிலைமை வேறு விதமாக மாறிவிட்டது. அதாவது தமது முறையன்று தண்ணீரை எடுப்பவர்கள் மறுநாளைக்கும் தேவையான தண்ணீரை சேர்த்து எடுத்து செல்லலாயினர்  .

அதன் பிறகு யூதனுடைய வியாபாரம் படுத்துவிட்டது. பணமா கொடுத்து வாங்குவோர் யாருமில்லை . இத்தகைய நிலையை சற்றும் எதிர்பாராத யூதன்  வேறு வழியின்றி தம்மிடமிருந்த மற்றொரு பகுதி கிணற்றையும் உஸ்மான் [ரலி] அவர்களிடமே விற்று விட்டான் அவர்கள் அதனையும் வாங்கி பொது மக்களின் உபயோகத்திற்கு தர்மமாக கொடுத்து விட்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இத்தகைய நிகழ்ச்சிகள் ஏராளமாக இருக்கின்றன.

இந்த அடிப்படையிலே தான் முன்னோர்கள் பொது மக்களின் தேவைக்காக , வழிப்போக்கர்களின் தேவைக்காக, சிற்சில இடங்களில் தண்ணீரை தேக்கிவைத்து விநியோகித்து வந்தார்கள். இன்னும்சில இடங்களில் தலைசுமையை தானாகாவே இறக்கி வைக்கவும் பிறகு தாமாகவே  தூக்கி தலையில் வைத்துக்கொள்ளவும் வசதியாக  சுமைதாங்கி என்ற பெயரில் உயரமான ஓர் இடத்தை ஏற்படுத்தி வைத்திருந்தார்கள்  இன்னும் சிலர் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வைத்து வளர்த்திருந்தார்கள் . மேலும்  பொது மக்களுக்குத் தேவையான பல நல்ல காரியங்களையும் செய்து வந்தார்கள். இத்தகைய காட்சிகளை இன்றும் கூட கிராமங்களில் காணலாம். இப்படிப்பட்ட காரியங்கள்தான் சதகத்துல் ஜாரிய எனும் தர்மமாகும்.

எது தர்மம்

தர்மம் என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் . இருப்பினும் எது உண்மையான  தர்மம் , எதை தர்மம் செய்தால் முழுமையான நன்மை கிடைக்கும் என்பதை புரிந்து  கொள்ள வேண்டும் அல்லவா?

இதைப்பற்றி அல்லாஹ் தனது திருமறையில் ..

''நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதிலிருந்து [அல்லாஹ்வுக்காக] நீங்கள் செலவு செய்யாத வரை நன்மையை பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்.. எந்த பொருளை  [அவ்வாறு] நீங்கள் செலவு செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ்  அதனை  முற்றிலும் அறிந்தவனாக இருக்கிறான்'' என்று கூறுகிறான்.
அல்குர் ஆன் .. 3-92]

இந்த வசனம் அருளப்பட்ட போது  நபி [ஸல்] அவர்களுடன் இருந்த அவர்களின் நண்பர் அபூதல்ஹா [ரலி] அவர்கள் இறைதூதர் அவர்களே! என்னுடைய சொத்துக்களில் எனக்கு மிகவும் பிரியமானது  என்னுடைய பைரஹா எனும் தோட்டமாகும் அல்லாஹ்வின்  பொருத்தத்தை பெறுவதற்காக அதனை தர்மம்  செய்து விட விரும்புகிறேன் என்று கூறுகிறார்கள்.

நண்பரின் நன்நோக்கத்தை புரிந்துகொண்ட நபி [ஸல்] அவர்  நண்பரே! அந்த தோட்டம்  நல்ல பலன் தரக்கூடிய தோட்டமாக இருக்கிறது. எனவே அதனை உங்களுடைய உறவினர்களில் இருக்கக்கூடிய ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுப்பது நலமாகத் தெரிகிறது  . என யோசனைக் கூறினார்கள் நண்பரும் அவ்வாறே செய்து முடித்தார். இதைப்போன்ற எத்தனையோ சம்பவங்கள் வரலாற்றில் குவிந்து கிடக்கின்றன.

மேற்கூறப்பட்ட இறை வசனத்தையும் அந்த நிகழ்ச்சியையும் நன்கு சிந்தித்துப் பாருங்கள்! தர்மம் என்பது , நமக்குப்பயன் படாத பொருட்கள் மிச்சம் மீதி இருக்கும் உணவுப்பொருட்கள், உபயோகமற்ற ஆடைகள் , தேவையின்றி ஒதுக்கி வைக்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை கொடுப்பது உண்மையான தர்மம் அல்ல  என்பதையும், நாம் எதை  உண்ண  உடுத்த உபயோகிக்க விரும்புகிறோமோ அவற்றையோ அல்லது அவற்றில் சிலதையோ கொடுப்பது தான் உண்மையான  தர்மம் என்பதையும் மிக அழகான முறையில் விளக்கிக்காட்டுகின்றன.

அல்லாஹ் மிக அறிந்தவன் .
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!