திங்கள், அக்டோபர் 27, 2014

ஓ! என் இளைய சமுதாயமே!

ஓ! என் இளைய சமுதாயமே!




இன்றய நவநாகரீக அறிவார்ந்த உலகில், நாம் படிக்கும் பத்திரிக்கை செய்திகளானாலும், பரிமாறிக் கொள்ளப்படும் மின்னஞ்சல்களாக இருந்தாலும் பரவலாக நாம் கண்டு பதைக்கக் கூடிய ஒரு செய்தி தான் காதல் கல்யாணங்கள். குறிப்பாக நமது சமுதாய இளம் தலைமுறையினரின் நடவடிக்கைகள்.

சில வருடங்களுக்கு முன்பு வரை, இலைமறை காயாக இருந்த பருவ வயது காதல், சினிமா, தொலைக்காட்சித் தொடர் போன்ற சமூக சீர்கேடுகளால் இன்று மலிவு சரக்காகி விட்டது. கல்லூரிக் காதல் கரை கடந்து பள்ளிக்காதலாகிப் போனதற்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி.

உயர் கல்வியில், வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது. எனவே இயல்பாக அம்மக்களிடம் கல்வி ஆர்வம் குறைந்துள்ளது என்ற குமுறலோடு தங்களுக்கான உரிமைகோரி சமுதாயத் தலைவர்கள் போராடியதை இன்றய இளைய சமுதாயம் எந்த வகையில் பயன்படுத்துகின்றது என்பதனை எண்ணும் போது வேதனை அளிக்கக் கூடியதாக உள்ளது.


சென்னை புறநகர் பகுதியிலுள்ள ஒரு கல்லூரி. அதில் இறுதியாண்டு பயிலக் கூடிய ஒரு வகுப்பறையில் இரண்டு முஸ்லிம்கள். ஒரு மாணவன். ஒரு மாணவி. இருவருக்கும் ஒரே நோய். அதாவது காதல் நோய். ஒருவர் மீது ஒருவருக்கு அல்ல. மாறாக இருவரும் காதலிக்க தேர்வு செய்தது மாற்று மதத்தவரை. அதிலும் இந்த முஸ்லிம் மாணவி ஒருபடி முன்னே சென்று கல்லூரி இறுதித் தேர்வை புறக்கணித்து விட்டு தனது மாற்று மத காதலனை மணம் முடித்துக் கொண்டார்.

அடுத்ததாக,

சென்னையிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு தொழிற்நகரம்.

அங்கு கணவனுடன் கருத்து வேறுபாடு கொண்டு மனமுறிவு ஏற்பட்டும் மணமுறிவு செய்து கொள்ளாமல் தனது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்த ஒரு சகோதரி. உயர் கல்வி பெற்றதனால், நல்ல சம்பளத்துடன் பணிபுரிந்து வந்தவர், சமீபத்தில் அனைத்தையும், அனைவரையும் அந்தரத்தில் விட்டு விட்டு, வீட்டைவிட்டு வெளியேறி தான் விரும்பும் ஒரு மாற்று மதத்தவரை அவர்களது சடங்கு சம்பிரதாயப்படி மணந்து கொண்டார்.
பிறிதொரு சம்பவம்

டால்க் ஷோ (Talk Show) எனப்படும் கலந்துரையாடல் நடத்தி பிரபலமடைந்துள்ள ஒரு தொலைக்காட்சி சமீபத்தில் நடத்திய ஒரு டால்க் ஷோ (Talk Show) வின் கருப்பொருள்.

'காதலுக்காக பெற்றோரை கைவிட்டவர்கள் வைஸ் (V) பெற்றோருக்காக காதலை கைவிட்டவர்கள்'.

இந்த நிகழ்ச்சியில் காதலுக்காக பெற்றோரை கைவிட்டோர் வரிசையில் ஜம்மென்று அமர்ந்திருந்த ஒரு சகோதரி கூறினாள்: நான் பிறப்பால் முஸ்லிமாக இருந்தாலும் இவருக்காக நான் அனைத்தையும் உதறி விட்டேன்.

என்ன அன்பர்களே! இவற்றை கேட்கும் போதும், பார்க்கும் போதும், படிக்கும் போதும் உடைந்து போகின்றீர்களா. இவை வெறும் சாம்பிள்கள் தான்.
பதட்டமடையத் தேவையில்லை. ஆனால் இது கடலின் உள்ளே இருக்கும் பனிமலையின் ஊசி முனையாய் இல்லாமலிருக்க பிரார்த்தனை செய்வோம்.

தொலைக்காட்சியின் டால்க் ஷோ (Talk Show) வின் இறுதியில் வருகை தந்த விருந்தினர், இயக்குனர் தெரிவித்த ஒரு கருத்து எவருடைய கவனத்திலும் பதிவானதாகத் தெரியவில்லை.

அதாவது, தான் காதலித்த பெண்ணை கரம் பிடிப்பதற்காக தனது பெற்றோரின் சம்மதத்தைப் பெற 3 வருடங்கள் பொறுமையாக முயற்சி செய்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் போராடி தன் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றவர், எளிதாக பொறுமையில்லாமல் பெற்றோரை உதறித் தள்ளிய காதலர்களை ஆதரித்தது தான் முரண்பாடு.

இத்தகைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெற்றோரை புறக்கணிக்க இன்றய இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாகக் கூட இருக்கும்.

சரி. மலிந்து விட்ட இந்நிலைக்கு காரணம் என்ன? இதனை எவ்வாறு சீரமைப்பது? காரணம் சிம்பிள். பொறுமையின்மையும், பொறுப்பின்மையும் தான்.

கல்லூரி படிப்பு வரை தன்னை சீராட்டி, பாராட்டி வளர்த்த பெற்றோர் அதே கவலையோடும் கரிசனத்தோடும் தனக்கு திருமண ஏற்பாடுகள் செய்வார்கள் அதுவரை பொறுமையோடு இருக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வு இல்லாததால் தான் அவசரப்பட்டு இது போன்ற நிலை எடுக்கின்றனர்.

உணவு 'ஃபாஸ்ட் ஃபுட்' (Fast Food) ஆகலாம். உறவும் அவ்வாறு ஆக முடியுமா?

ஆனால் உறவுகளிலும் அவசரப்படுவதால் தான் குடும்ப நல நீதிமன்றங்களில் அதிகமான விவாகரத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்னுமொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் விவாகரத்து கோரும் தம்பதியரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் காதல் மணம் புரிந்தவர்களே.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதல் மணத்திற்கு ஆதரவளித்துப் பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், விருந்தினராக வருகை தந்த இயக்குனரும் வலியுறுத்திய ஒரு விஷயம் காதல் மணங்களின் மூலம் மட்டுமே ஜாதியை ஒழிக்க முடியும்.

உண்மை தான். ஜாதி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று தான்.

ஆனால் சக மாணவர்களோடு படிப்பிலும், திறமைகளிலும் போட்டியிட வேண்டிய இளம் முஸ்லிம் சமூகத்தவர் இஸ்லாத்தில் இல்லாத ஜாதியை ஒழிக்க?! மாற்று மதத்தவரை நாடுகின்றனரோ???

சரி, இதற்கான தீர்வு தான் என்ன?

முஸ்லிம் இயக்கங்கள் (அ) சமுதாய தலைவர்கள் என்ன செய்யலாம்.

பொதுவாகவே காதல் மணங்கள் ரிஜிஸ்டர் ஆபீஸ் (Register Office) களில் தான் நடைபெறுகின்றன. சாதாரண முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்த அலுவலகத்தின் திசை கூட தெரியாது என்பது தான் உண்மை. இந்நிலையில் இங்கு பதிவு செய்யப்படும் திருமணங்களைக் குறித்து எவ்வாறு அறிந்து கொள்ள முடியும். எனவே சில பத்திரிக்கைகள் தங்களது நிரூபர்களை கோர்ட், தலைமை செயலகம், டிஐஜி ஆபீஸ் (DIG Office) என்று முக்கிய இடங்களில் செய்தி சேகரிக்க நிறுத்துவது போல், ரிஜிஸ்டர் ஆபீஸில் ஏதாவது கண்காணிப்பு ஏற்பாடு செய்யலாம்.

இத்தகைய காதல் திருமணங்களில் குறிப்பாக மாற்று மதத்தவரை மணக்கும் இஸ்லாமியரைப் பொறுத்தவரை அது தற்கொலை தான்.

தற்கொலை எண்ணமுள்ள ஒருவரை குறைந்த பட்சம் அந்த கணத்தில் காப்பாற்றி விட்டால் பின்னர் தகுந்த ஆலோசனை மூலம் மீட்டெடுத்து விடலாம். அது போல் இவர்களையும் 'முர்தத்' ஆவதிலிருந்து காப்பாற்ற இது ஒரு சந்தர்ப்பமாக அமையலாம்.
பொதுவாக முஸ்லிம்கள் செயல்படுத்த வேண்டிய முக்கியமான ஒரு விஷயம் உண்டு. அது என்னவெனில், எந்த காரியத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து குர்ஆன் ஹதீஸ்களில் உள்ள வழிகாட்டுதல் என்னவென அறிந்து செயல்படுத்த முயற்சிப்பதாகும்.

இதனை நடைமுறைப்படுத்த துவங்கினால் தான், இளைய சமூகத்தாருக்கு இதன் அவசியத்தை உடனடியாக உணர்த்த முற்பட்டால் தான் அவர்களுடைய அவசரத்தை கட்டுப்படுத்த இயலும்.

உதாரணத்திற்கு, தானாகவே ஒரு வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுத்து காதலிக்கத் துவங்கும் ஒருவர் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் வழிகள் என்னென்னவென்று குர்ஆனில் தேடும் பொழுது, 'அல்பகரா அத்தியாயத்தின் 221' ஆவது வசனத்தை ஒருமுறை சிந்தித்தாலே தன்னை திருத்திக் கொள்ளலாம்.
பாதிக்கப்பட்டோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுபோன்ற இது போன்ற சம்பவங்களின் போது வன்முறையை நாடுகின்றனர். சிலர் அவர்களை இறந்தவர்களாக அறிவித்து விட்டு அமைதியாகி விடுகின்றனர்.

உண்மையில் இதுபோன்று மாற்று மதத்தவரை மணம் முடிப்பவர் இஸ்லாமியராக அக்கணமே மரணமடைவதை விட அதிக இழப்புக்கு உள்ளானவராகிறார் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமியராக மரணமடைந்த ஒருவருக்காக எவரும் பாவமன்னிப்பு கோரலாம். ஆனால் இஸ்லாமியரல்லாத ஒருவருக்கு எவரும் பாவமன்னிப்ப கோர முடியாது.

மறுமை நம்பிக்கை உறுதிப்படும் பொழுது தான் மனிதன் தன்னுடைய தவறுகளிலிருந்து திருந்த முற்படுவான்.

எனவே விளிம்பு நிலை ஈமான் கொண்டுள்ள இன்றய இளைய தலைமுறையினருக்கு உறுதியான நம்பிக்கையை ஏற்படுத்த உறுதி ஏற்போம். சமுதாய மானம் காப்போம்.
By Abu Hajar/Allah bless his.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!