சனி, நவம்பர் 01, 2014

செல்வத்தை சுத்திகரித்து சீர் செய்யும் ஜகாத்தை தெரிந்து கொள்ளுங்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் .......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக !


ஜகாத் என்றால் என்ன ?

ஜகாத்துடைய நிஸாப் என்னும் தகுதியைப் பெற்றிருப்பவர் , அவரிடம் இருக்கும் பொருள்களில் நாற்பதில் ஒரு பகுதியை, தகுதியுடைய ஏழைக்குக் கொடுத்து உரிமைப்படுத்துவது ஜகாத் எனப்படும்.

ஜகாத்தின் பயன்கள் யாவை?

ஜகாத் அளிப்பதின் மூலம் ஐம்பெருங்கடமைகளில் ஒன்று நிறைவேறுகிறது. ஜகாத் நிறைவேற்றப்பட்ட செல்வங்கள் தூய்மை பெறுகின்றன,, பரக்கத் பெற்று வளர்ச்சி அடைகின்றன. அதுமட்டுமின்றி, மறு உலகில் அதனுடைய நன்மைகள் பெரிதாகி, அதிகரித்து, அதை அளித்தவர் இவ்வுலகில் செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட காரணமாக அமைகின்றது.


ஜகாத் கடமையாகும் பொருட்கள் யாவை?

தங்கம், வெள்ளி, இவற்றிருகுச் சமமாக உள்ள பணம் , வியாபார சரக்குகள், கால்நடைகள், தானியங்கள், காய்கறிகள் ஆகிய பொருட்கள் ஜகாத் அளிக்கக் கடமையாகும் பொருள்களாகும்.

எவ்வளவு பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும்?

பணத்தை பொருத்தவரை குறிப்பிட்ட அளவு நிர்ணயம் செய்ய முடியாது. தங்கம், வெள்ளியின் விலை அவ்வப்பொழுது ஏற்றத் தாழ்வுக்கு உட்படக் கூடியது. எனவே அப்போதைய இவற்றின் சந்தை நிலவரப்படி ரூபாயில் ஜகாத்தின் நிஸாப் ஏற்படுத்தப்படும் .

வியாபார சரக்குகளில் எவ்வளவு இருந்தால், அவற்றின் மீது ஜகாத் கடமையாகும் ?

வியாபாரச் சரக்குகளின் மதிப்பு 612.5 கிராம் வெள்ளியின் விலைக்குச் சமமாகவோ, அதைவிடக் கூடுதலாகவோ இருப்பின் அந்த வியாபாரச் சரக்குகளின் மீது ஜகாத் கடமையாகும் .

கால்நடைகள் எத்தனை இருந்தால் ஜகாத் கடமையாகும்?

5 அல்லது அதைவிட கூடுதலாக உள்ள ஒட்டகங்கள் மீதும் 30 அல்லது அதைவிடக் கூடுதலான மாடுகள் மீதும் 40 அல்லது அதைவிடக் கூடுதலான ஆடுகள்  மீதும் ஜகாத் கடமையாகும். இவை கால்நடைகளுக்கான நிஸாபா கும்  .

ஆண்டு முடிவில் அனைத்துச் செல்வத்தையும் ஒருவர் தான தர்மம் செய்துவிடின், அவருடைய ஜகாத் கடமை நீங்கிவிடுமா?

ஜகாத் கடமையானவர் அவரின் அனைத்து செல்வங்களையும் ஆண்டு முடிந்தபின் தான தர்மங்கள் செய்து  விடின் , அவர்மீது கடமையான ஜகாத் மன்னிக்கப்பட்டு விடுகிறது.

மாறாக , அவர் செல்வத்தில் பாதியை தர்மம் செய்து விட்டு, மறுபாதியை தம்மிடம் வைத்துக் கொண்டால், தர்மம் கொடுத்த செல்வத்தின் ஜகாத் மட்டும் மன்னிக்கப்படும். அவரிடம் இருக்கும் செல்வத்திற்கான ஜகாத்தைக் கணக்கிட்டு, அவர் நிறைவேற்றுவது அவசியம்.

வாடகை வீட்டின் மீது ஜகாத் கடமையாகுமா?

வாடகை வீட்டின் மீது ஜகாத் கடமையாகாது. அந்த வாடகை வீட்டிலிருந்து வரும் வருமானம் ஜகாத்தின் நிஸாபை  அடைந்திருந்தால், அந்த வருமானத்தின் மீது ஜகாத் கடமையாகும்.

காஃபிர்களுக்கு ஜகாத் கொடுக்கலாமா?

காஃபிர்களுக்கு ஜகாத் தொகையைக் கொடுக்ககூடாது. முஸ்லிம்களில் உள்ள ஏழைகளுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும்  . இதனைப் போன்ற சதக்கத்துல் பித்ர் , நேர்ச்சை , காஃப்ஃ பாராவின் தொகைகளையும் காஃபிர்களுக்கு கொடுப்பது கூடாது. இவை நீங்கலாக மற்றுமுள்ள தான தர்மங்கள் முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கும் அளிக்கலாம்.

பெற்றோர்களுக்கு ஜகாத் கொடுக்கலாமா?

தாய், தந்தை , பாட்டன் ,பாட்டி போன்ற முன்னோர்களுக்கும், மகன், மகள், பேரன், பேத்தி  போன்ற சந்ததியினருக்கும் ஜகாத் பொருளைக் கொடுக்கக் கூடாது . இதைப் போலவே கணவன் மனைவிக்கும் , மனைவி கணவனுக்கும் ஜகாத் பொருளை செலவு செய்யலாகாது. மாறாக இவர்களைக் காப்பாற்றுவது, பராமரிப்பது எப்பொழுதும் கடமையானதாகும்.

எவ்வுறவினர்களுக்கு ஜகாத் கொடுப்பது ஆகுமானதாகும்?

பெற்றோர்கள், பிள்ளைகள், கணவன், மனைவி நீங்கலாக உள்ள மற்ற உறவினர்கள் ஏழைகளாக இருந்தால், ஜகாத்தை அவர்களுக்கு அளிக்கலாம். இவர்களுக்கு கொடுப்பதே மிகவும் நல்லது.

ஒருவர் அவரின் ஜகாத்துப் பொருளை பிறரிடம் அல்லது ஒரு அமைப்பினிடம் [சங்கம் போன்றவை] கொடுத்து அதனைச் சரியான முறையில் விநியோகிப்பதற்கு ஏற்பாடு செய்யலாமா?

தாராளமாக இவ்வாறு ஏற்பாடு செய்யலாம். ஆனால் அதில் இரண்டு விஷயங்களை முக்கியமாக கவனித்தல் வேண்டும்.

முதலாவதாக , அவர் தனக்குப் பிரதிநிதியாக நியமித்தவர் அல்லது ஜகாத் வசூலித்த  அமைப்பு அதை நியாயமான முறையில் உரிமையாளரிடம் சேர்த்து விடுவார் என்று முழு நம்பிக்கை இருத்தல் வேண்டும்.

இரண்டாவது, யாரிடம் அவர் ஜகாத் பொருளை விநியோகிக்க ஒப்படைத்தாரோ, அவர் கைவசம் அந்தப் பொருள் இருப்பது, ஒப்படைத்தவர் வசம்  இருப்பதர்க்குச் சமமாகும். அல்லது அந்தப் பொருளை உரிமையாளர்களிடம் விநியோகித்தால்தான் ஜகாத்  நிறைவேறும், இல்லை என்றால் நிறைவேறாது. சில அமைப்பினர் ஜகாத் பொருளை வசூலித்துப பல வருடங்கள் வரை அதைக் கைவசம் வைத்துக் கொள்கின்றனர். இது பெருந்தவறு என்பதை உணர வேண்டும்.

ஏழை மாணவர்களுக்கு ஜகாத் நிதியிலிருந்து உபகாரச் சம்பளம் வழங்கலாமா?

வழங்கலாம்...

ரமலான் மாதம் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதாக ஏதாவது கடமை உண்டா?

ரமலான் மாதம்தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதான கடமை ஒன்றுமில்லை . எந்த அரபி மாதத்தில், ஒரு வருடம் முழுமை அடைந்து விடுகிறதோ, அந்த மாதத்திலேயே ஜகாத் பணத்தைத் தனியாக எடுத்து வைத்து விட வேண்டும்  . ரமலான் மாதத்தில் நன்மை அதிகம் என்பதாலும், வசதியற்றவர்களின் தேவை நிறைவேறும் என்ற நோக்கத்தாலும் ரமலான் மாதத்தில் ஜகாத் கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

ஜகாத் கொடுக்கும் செல்வந்தர்கள் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது யாது?

ஜகாத் வழங்கும் செல்வந்தர்களின் நெருங்கிய உறவினர்கள் ஜகாத் பெற தகுதி பெற்றிருந்து, ஏழைகலாளவோ , கடன்பட்டவற்க்லாகவோ , தொழில் செய்து பிழைக்க வழி இல்லாதவர்களோ, குமருகளுக்கு மணம் முடிக்க இயலாதவர்கலாகவோ , நீண்ட கால நோயாளிகளாகவோ, ஊனமுற்றவர்கலாகவொ இன்னும் இதுபோன்ற அவசியத் தேவையுடையோராகவோ இருப்பின், அத்தகையோரின் தேவை நிறைவேறும் வண்ணம் ஜகாத் தொகையைக் கொடுத்து அவர்களின் கண்ணீரைத் துடைப்பது மிகவும் ஏற்றமானது.

அல்லாஹ்விடம் அருள் இறைஞ்சுதல்

யா அல்லாஹ் ! எங்கள் சமுதாயச் செல்வந்தர்களின் உள்ளங்களில் ஈகை உணர்வை, சிந்தனையை உருவாக்கி, நீ அவர்களுக்கு வழங்கிய செல்வதிலிருந்து உனது கட்டளைப்படி உரியவர்களுக்கு உரிய முறையில் ஜகாத் வழங்கும் நற்பேறு பெற்றவர்களாக அவர்களை ஆக்கி வைப்பாயாக! ஆமீன்.

நன்றி நர்கிஸ்
v .s . முஹம்மது யாஃகூப்
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!