சனி, நவம்பர் 22, 2014

ஏழ்மையை விரட்டிடுவீர் !

அல்லாஹ்வின் திருபெயரால்........


''நீங்கள் செலவிட்ட சிறிய அளவிற்கும் , அவன் பகரமளிக்கிறான். செல்வமளிப்பவர்களில் அவன் சிறந்தவன்.''-அல்குர் ஆன்  34..39

இஸ்லாமிய ஐம்பெருங் கடமைகளுள் தொழுகையை அடுத்து முக்கியமான கடமை ஜக்காத் ஆகும். அருள் மறையில் தொழுகையைப் பற்றிக் குறிப்பிடப்படும் போதெல்லாம் , ஜக்காத்தையும் குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இறைவனை  வழிபடுவதற்காக தொழுகை கடமையாக்கப்பட்டுள்ளது என்றால், இறை அடியார்களுக்கு ஆதரவு அளித்து,  அதன் மூலம் இறையன்பைப் பெறுவதற்காக ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.


காலில்  முள் தைத்தால் கண்ணில் நீர் வழிகிறது, உடம்பில் எங்கேனும் அடிப்பட்டால், கரம் உடனே அவ்விடத்தைத் தேய்த்துக் கொடுக்கிறது. ஒரு காலில் தைத்த முள்ளை எடுபதற்கு மறுகால் ஆசனமாக இருந்து உதவுகிறது. விரலில் பட்ட காயத்துக்காக இரவெல்லாம் கண் தூங்க மறுக்கிறது. இதுபோன்று, சமுதாயத்தில் ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை மற்றவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வறுமையால் வாடும் சகோதரனுக்கு வாழ்வளிக்க இஸ்லாம் ஜக்காத் என்ற கடமையின் மூலம் வழி வகை செய்கிறது.

பிறரின் ஏழ்மையை விரட்ட 

ஜக்காத் என்பது ஏழ்மையை வளர்க்கும் கருவியல்ல, ஜக்காத் என்பது ஏழ்மையை விரட்டியடிக்க உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
பத்து பைசா , இருபத்தைந்து பைசா  நாணயங்களாக அல்லது ஆடைகளாக ஜக்காத்தின் பணத்தை செலவிடுவதால் , ஜக்காத் நிறைவேறி விடுமென்ற போதிலும் , அதனால் ஜக்காத்தின் லட்சியம் கை கூடுவதில்லை.

ஒரு தனவந்தர் தனது ஆண்டு ஜக்காத்தின் மூலம் , வாழத் துடிக்கும் ஒருவருக்கு ஒரு தொழில் துவங்க ஒத்துழைப்புத் தந்தாள், அவர் தனது செல்வத்தைப் பெருக்கி , அவரும் பலருக்கு ஒத்துழைப்புத் தரும் சாத்தியக் கூறு ஏற்படலாம். அல்லது பல தனவந்தர்கள் தங்கள் ஜக்காத்தை ஒன்று திரட்டி , பல ஏழைகளுக்கு கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் துவங்க வழிவகை செய்யலாம். சமுதாயத்திலுள்ள ஒவ்வொரு தனவந்தரும் ஆண்டொன்றுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், ஏழ்மை வெருண்டோடிவிடும்  என்பதில் ஐயமில்லை .

இக்கருத்தை நபிகள்  நாயகம் [ஸல்] அவர்கள் அருமையாக சித்தரிக்கிறார்கள்..

'ஓரிரு கவல உணவு அல்லது ஓரிரு பேரீத்தம் பழம் பெறுவதற்காக மக்களின் மத்தியில் சுற்றித் திரிபவர் ஏழையல்ல. வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வசதியைப் பெறாதவரே ஏழை. தர்மம் கொடுப்பதற்காக அவரை யாரும் எளிதில் இனம் கண்டு கொள்ள இயலாது. யாசகம் பெறுவதற்காக அவர் மக்களின் மத்தியில்  நிற்கவும் மாட்டார்.'

திருக்குர் ஆன்  கூறுகிறது.. ''அல்லாஹ்வின் பாதையில் சிறைப்பட்டுவிட்ட ஏழைகளுக்கு ...அவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவும் சக்தி பெற மாட்டார்கள். அவர்களின் முகவாட்டத்தைக் கொண்டு நீர் அவர்களை இனங் கண்டு கொள்வீர்!  அவர்கள் மக்களிடம் வற்புறுத்தி யாசகம் கேட்கவும் மாட்டார்கள்  .''         [2.. 273]

ஏழ்மையை விரட்ட 

ஜக்காத்  கடமையாக்கப்பட்டிருப்பதற்கு சமுதாய நோக்கு மட்டும்  காரணமல்ல. ஒருவரின்  செல்வம் அவரை விட்டு அகலாமல் நீடித்திருப்பதற்கும், செல்வத்தை அழிவின் பாதைகளிலிருந்து காப்பதற்காகவும் ஜக்காத் கடமையாக்கப்படுகிறது.
நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாக தேவையான சக்திகள் உடலுள்  செல்வத்தைப் போன்று  , ஊறுவிளைவிக்கும் சில குணங்களும் புகுந்து விடுகின்றன. நோன்பின் மூலமாக அக்குணங்களிலிருந்து உடலை சுத்தப்படுத்த முயற்சி மேற்கொள்ள இறைவன் ஆணையிடுகின்றான்.  அது போன்றே நாம் செல்வத்தைத் தேடும் போது  , அழிவைத் தேடி தரும் சில பகுதிகள் செல்வத்தில் புகுந்து விடுகின்றன. தேடிய செல்வத்திலிருந்து அழிக்கும்  பகுதியை அப்புறப்படுத்துவதற்கான ஒரே வழி ஜக்காத்தாகும்.

இக்கருத்தை திருக்குர் ஆன் கூறுகிறது..  '' அவர்களை தூய்மைப்படுத்தி சுத்தப்படுத்தும் தருமத்தை அவர்களின் செல்வங்களிலிருந்து வசூலியுங்கள்.''
அல்குர் ஆன் 9..103]

நபிகள் நாயகம் [ஸல்] விளக்குகிறார்கள்..

'நோன்பு  உடலை சுத்தம் செய்வதைப் போன்று, ஜக்காத்து செல்வத்தை சுத்தம் செய்ய வல்லதாகும்.

ஜக்காத் செலுத்துவதால் செல்வத்தின் ஒரு பகுதி செலவிடப்பட்டு, குறைந்து விட்டதாகத் தோன்றினாலும், உண்மையில் அதனால் செல்வம் வளர்ச்சியே அடைகிறது.

ஒருவருக்கு நிறைய செல்வம் இருக்கிறது, அவருக்கு அது எப்படி வந்தது? அந்த செல்வத்தை யார் கொடுத்தது  , அல்லாஹ்தானே! அப்படி இருக்க , செல்வம் இன்னும் அவருக்கு வளர்ச்சி அடையும்  , பெருகும்  பல நன்மைகள் அவரை வந்து சேரும்  எனபதில் ஒரு துளிகூட சந்தேகம் இல்லை.

கோடைகாலத்தில் இலைகள் காய்ந்து உதிருவது மரத்துக்கு வறட்சியான தோற்றத்தை தந்தாலும், அடுத்து அவரும் வசந்த காலத்தில் புதுத்தளிர் விட்டு மரம் பசுமையடையப் போவதற்கு அது அறிகுறியாகும். நோன்பு நோற்பதால், உடல் மெலிவதைப்  போன்றிருந்தாலும் , பின்னர் நல்ல சக்திகள் சேகரமாகி உடல் திடகாத்திரமடைவதற்கு அது முன்னேற்பாடாகும்.

''அல்லாஹ்வின் திருப்தியை நாடி , நீங்கள் ஜக்காத் கொடுத்ததை பன்மடங்காகப் பெறுவீர்கள்.'' [30..39]

அல்லாஹ் மிக அறிந்தவன்.
நன்றி நர்கீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!