புதன், டிசம்பர் 17, 2014

உன்னால் முடியும் தம்பி ! [தொடர்ச்சி ]

அல்லாஹ்வின் திருபெயரால் ......

இன்ஷாஅல்லாஹ்  நாம் தொடர்ச்சியைப் பார்ப்போம்................

ஆபத்து சூழ்ந்த நிலையில்  'தவ்ரு ' என்ற குகையில் அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்களும் , அவர்களின் ஆருயிர் நண்பர் ஹஜ்ரத் அபூபக்ர் [ரலி] அவர்களும் மறைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் எதிரிகள் அடையாளம் கண்டு அங்கேயும் வந்துவிட்டார்கள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஹஜ்ரத் அபூபக்ர் [ரலி] அவர்கள் கலங்கி நிற்கும் வேளையில் , பெருமானார் [ஸல்] அவர்கள்  'அஞ்சற்க! அல்லாஹ் நம்மோடிருக்கிறான் ' என்று தனது நண்பருக்கு ஆறுதல் மொழி கூறினார்கள். [அல்குர் ஆன் 9..40] அவர்கள் சிறிதும் கலக்கமடையாமல் எதற்கும் தயாரானார்கள். இந்த வீர வரலாறு அவர்களின் இறைபக்தி கலந்த தன்னம்பிக்கைக்கு சிறந்த எடுத்துக்காட்டன்றோ !


'பத்ரு' என்ற பெருவெளியில் உடல் வளத்திலும் , ஆயுத பலத்திலும் எண்ணிக்கையிலும் தமது  விட மும்மடங்கு அதிகமாகிய எதிரிப்படையைப் பெருமானார் [ஸல்] அவர்கள் எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது . வீரத்தோடும் , ஆர்வத்தோடும் அப்போரை வழி நடத்தி வெற்றி கொண்ட அவர்களுக்கு எந்த அளவு தன்னம்பிக்கை இருந்திருக்க வேண்டும் . '' அல்லாஹ்  நமக்கு உதவுதாக வாக்களித்துள்ளான்' [அல்குர் ஆன்] என்ற எண்ணமே அவர்களுக்கு  ஏற்பட்டிருந்த தன்னம்பிக்கை அடிப்படையாகும் என்பதை  நாம் மறந்து விடலாகாது .

ஒரு  சமயம் , மதீனாவை பெரும் படையொன்று தாக்க வந்து விட்டதாக பொய் செய்தியொன்று , நள்ளிரவில் மதீனா வீதிகளில் பரவி விட்டது. அனைவரும் குலைநடுக்கம் கொண்டு விட்டனர் . அவ்வேளையில் அருமை நாயகம் [ஸல்] அவர்கள் மட்டும் தன்னந்தனியாக, நண்பர்கள் கருத்தையும் பொருட்படுத்தாமல் , மதீனாவில் எல்லை வரை சுற்றிப்பார்த்து வந்து குடிமக்களின் பீதியை போக்கினார்கள். 'உம்மை மக்களிடமிருந்து அல்லாஹ் காக்கிறான்' [அல்குர் ஆன் 5..67]  என்ற இறைவாக்கின் மீது அவர்களுக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை  ' நாயனின் துணையிருக்க நாம் யாருக்கும் அஞ்சோம் ' என்ற தன்னம்பிக்கையை அவர்களுக்கு உண்டாக்கியிருகிறது. 

மற்றொரு சமயம் , மதீனா நகர் மீது எதிரிகள் படையெடுத்து போது அந்தப் படையெடுப்பிலிருந்து மதீனாவைக் காப்பதற்காக பெருமானார் [ஸல்] அவர்கள் மாநகரைச் சுற்றி அகழி தோண்ட ஆணையிடுகிறார்கள். அந்த பணியில் சுமார் 3000 வீரர்கள் ஈடுபட்டார்கள்.

அப்போது பெரும் பாறை  ஒன்று குறுக்கிடுகிறது. வீரர்கள் அதைத் தகர்க்க முயற்சித்து தோல்வி காணவே  பெருமானார் [ஸல்] அவர்களிடம் ஆலோசனை கேட்கிறார்கள். பெருமானார் [ஸல்] அவர்கள் குறிப்பிட்ட பாறை அருகில் சென்றதும் சம்மட்டியை கையிலெடுக்கிறார்கள். மூன்று நாட்களாக உணவேதும் உண்ணாததால், வயிற்றில் கல்லைக் கட்டியிருந்தாலும் அவர்களின் தன்னம்பிக்கை சோர்வடையவில்லை. வீர வேசத்துடன்  ''அல்லாஹூ அக்பர்'  என்ற முழங்கிக் கொண்டு சம்மட்டியால் அப்பாறையைத் தாக்கினார்கள். மூவாயிரம் வீரர்களுக்கு போக்குக் காட்டிய அந்தப் பாறை பெருமானார் [ஸல்] அவர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் வெடித்துச் சிதறியது.

அவர்கள் திருவாயிலிருந்து புறப்பட்ட அந்த முழக்கம் அவர்களின் நாடி நரம்புகளிலெல்லாம் உற்சாகத்தை கரை புரண்டோடச் செய்தது.  'ஷாம் நாட்டின் திறவு கோள்கள் என் கைவசமாயின. அந்நாட்டின் தலைநகரின் செங்கோட்டையை இதோ  நான் காணுகிறேன் என்று கூறினார்கள்.

மீண்டும் அல்லாஹூ  அக்பர் ' என்ற சங்க நாதத்துடன் சம்மட்டியால் ஓங்கி அடித்தார்கள். பாறை மேலும் வெடித்துச் சிதறியது. 'பாரசீக நாட்டின் திறவு கோள்கள் என் கைக்கு  வந்து விட்டன . அந்நாட்டு மன்னரின் வெள்ளை மாளிகையை இதோ நான் காணுகிறேன்' என்று அவர்கள் கூறினார்கள். மீண்டும் 'அல்லாஹூ அக்பர்'  என்ற கர்ஜனையுடன் சம்மட்டி பாய்ந்தது. பாறை தூள் தூளாக மாறியது. ''யமன் நாட்டின் திறவு கோள்கள் என் ஆதிக்கத்தில் வந்து விட்டது  , அந்நாட்டின் ஸன் ஆ என்ற எல்லைப் புற வாயிலை இதோ நான் காணுகிறேன்' என்று அவர்கள் நற்செய்தி கூறினார்கள்.

அக்காலத்தில் வல்லரசுகளாகத் திகழ்ந்த ஷாம் , பாரசீக , யமன் ஆகிய நாடுகளையும் , இஸ்லாமிய கொடியின் கீழ் கொண்டு வருவேன் என்ற தன்னம்பிக்கை பெருமானாரிடமிருந்தது  அன்று முன்னறிவிப்பாக வெளிப்பட்டது.  'அல்லாஹூ அக்பர்' என்ற சங்கநாதம் அந்த தன்னம்பிக்கைக்கு உரமளித்து. ஒரு சில ஆண்டுகளிலேயே அந்நாடுகளில் இஸ்லாமியக் கொடி பறந்ததை உலகம்  கண்டது.

பெருமானாரின் வீர வரலாற்றில் வெளிப்பட்ட தன்னம்பிக்கை அகிலத்தார் அனைவர்களுக்கும் சிறந்த பாடமாக அமைய வேண்டும். தன்னம்பிக்கையுடன் , இறை நம்பிக்கையும் சேர்ந்து கொண்டால் , நாம் இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம். ஒவ்வொருவரும் ஒரு சரித்திரமே படைக்கலாம் . வருகிறீர்களா? 
நன்றி ..நர்கிஸ் 
மவ்லவி அல்ஹாஜ் o .m . அப்துல் காதிர் பாகவீ 
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக!!!!!!
முற்றும்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்........ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!