செவ்வாய், டிசம்பர் 23, 2014

ஆய்வாளர் வியக்கும் அழகிய பண்பாளர்

அல்லாஹ்வின் திருபெயரால் ......

பூமான் நபியின் அழகைப் பார்த்தால்
புன்னகை அதிலே பூத்துக் குலுங்கும் !

முஹம்மது நபியின் முழுமதி போல
திருமுகம் பார்த்தால் அதுவே போதும்!

அகிலம் கண்ட அண்ணல் நபியின்
அற்புத மேனி என்றும் கமழும்
கஸ்தூரி வாசம் ! அதுவே எந்தன்
சுவாசம் ஆனால் அதுவே போதும்!

இரவில் தோன்றும் நிலவின் ஒளியும்,
பகலில் தோன்றும் சூரியன் ஒளியும்,
வியக்கும் எங்கள் அண்ணல் நபியின்
ஒளியைப் பார்த்தால்! அதுவே பொதும் !

விண்ணில் மின்னும் தாரகை எல்லாம்
நீரில் வாழும் மீன்கள் எல்லாம்
போற்றும் எங்கள் தாஹா நபியை
கனவில் பார்த்தால் அதுவே போதும்!

மண்ணில் வாழும் மாந்தர் எல்லாம்
நெஞ்சில் சுமக்கும் ஏந்தல் நபியின்
அழகிய முகத்தை தினமும் காணும்
பாக்கியம் கிடைத்தால் அதுவே போதும்!

முஹம்மது நபியின் அழகிய முதுகில்
இறைவன் தந்த இறுதி நபியின்
 'நுபுவ்வத் ' என்னும் முத்திரை ஒளியை ,
முத்தம் இட்டால் அதுவே போதும்!

விண்ணும் மண்ணும் போற்றும் நபியை,
நாயகன் அல்லாஹ் வழங்கிய நபியை
நானிலம் போற்றும் கண்மணி நபியை,
ஒருமுறை பார்த்தால் அதுவே போதும் .......!
நன்றி .. ஹாபிழ்  எம் எஸ் முஹம்மது அலி உலவி -கயத்தாறு ]


வல்ல நாயனின் இறுதித் தூதராம் வள்ளல் நபி நாயகம்  [ஸல்] அவர்களின் வரலாறு , உலகம் கண்ணாரக் கண்டு வியந்து போற்றும் பொன்னான வரலாறு. வரலாறு காணாத வரலாறு! அந்தரங்கம் என்று எந்நிகழ்ச்சியும் அகிலத்தார்க்கு மறைக்கப்படாத  மாட்சிமையுடைய வரலாறு. வேறு எந்தத் தனி மனிதனுக்கும் இதுவரை வாய்க்காத  வீறு கொண்ட வரலாறு . வரலாற்றில் இடம் பெற, வளம் பெற விரும்பும் வல்லுநர், உலகின் எக்கோடியில் இருந்தாலும் படிக்காமல் இருக்க முடியாது செழுமையான வரலாறு . மனித அறிவும் , ஒழுக்கமும் முழு நிறைவு  அடைய வேண்டின் அதற்கு துணை நிற்கும் இணையில்லா வாழ்வின் வரலாறு. ஆமாம்! விழுமிய மனிதனைப் படைக்கும் மறுவிலா முழுமதியின் தண்ணொளி பரப்பும் தன்னிகரில்லா வரலாறு.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் தாயன்பு இன்னதென்று அறியாதவர்கள். தம் ஆறாம் வயதிலேயே தாயை இழந்தார்கள். செவிலித் தாயால் அமுதூட்டி வளர்க்கப்பட்டவர்கள். அத்தகைய நாயகம் [ஸல்] அவர்கள், 'தாயின் பாதங்களினடியின் சேயின்  சுவர்க்கமுள்ளது' என்று கூறியிருப்பது விந்தையிலும் விந்தையன்று.

தாயின் திருவயிற்றில் கருவாக அமைந்திருக்கும் காலத்திலிருந்து குழந்தையின் சொர்க்கவாழ்வு சமைக்கப்படுகிறது. நற்குணங்களாலும் , நற்சிந்தனைகளாலும்  கருவினைக் கண்ணும் கருத்துமாகப் பத்து மாதங்கள் பக்குவமாக வளர்க்கிறாள் தாய். குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்தில் அவள்  வேதனையைத் தாங்கிக் கொள்கிறாள் . குழந்தை பிறந்ததிலிருந்து ஈராண்டுகள் வரை அவள் தன்  பாலமுதினைச் சாலப் பரிந்து ஊட்டுகிறாள். பாலை மட்டுமா ஊட்டுகிறாள் ? தன் மழலைச் செல்வம் சுவன வாழ்வு, சுக வாழ்வு பெற வேண்டுமென்று கனவுகளுடன், கவனமாக நற்பண்புகளையும், நல்லொழுக்கங்களையும், நல்லறிவையும் சேர்த்து அணைத்துக் கொண்டே அமுதூட்டுகிறாள். தாயின் மடி என்னும் தொடக்கப்பள்ளியிலே, நற்றாய் என்னும் நல்லாசிரியரால் , இறைமறை ஒழுக்கமெனும் இன்றியமையாப் பாடங்களை இனிமையாகக் கற்றுக் கொள்ளும் குழந்தைதானே சொர்க்கத்தின் கதவுகளைத் தட்ட முடியும்  . எனவே இத்திருவாசகத்தினை ஆராயும்போது உருவாகும் விளக்கங்களைக் கண்டு பகுத்தறிவாளர்கள் வியப்படைவார்கள்.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் பள்ளி சென்று கல்வி கற்காதவர்கள். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்  . ஹிரா மலைக்குகையில் முஹம்மது [ஸல்] அவர்கள் முன் வானவர்  ஜிப்ரீல் [அலை] தோன்றி  'ஓதுவீராக' என்றபோது,  'நான் ஓதத் தெரிந்தவனல்லனே' என்று கூறியவர்கள்,  கதீஜா நாச்சியாரிடத்தில் பணியாளராக இருந்தபோது, வாணிபத்தின் பொருட்டு சிரியாவிற்கு செல்ல நேர்ந்தது. அப்பொழுது கணக்கு எழுதுவதற்கென்றே எழுதப்படிக்க தெரிந்த கணக்கர் ஒருவரைத் தம்முடன் அழைத்துச் சென்றவர்கள். அத்தகையவர் கல்வி கற்பது முஃமினான  ஆண் - பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்றும், பொதுவுடைமை என்றும் அறிவித்திருக்கிறார்கள். என்றால்  அதனை எண்ணிஎண்ணிக்  கல்வி மேதைகள் இன்புறுவதில் வியப்பேது?

நபிகள் நாயகத்தின் இவ்வாழ்க்கையை வைத்தும், வைதும் பகைவர்கள் பட்டி மன்றங்களையே நடத்தியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு இரகசியமில்லாத இல்லறமாக அவர்களுடைய இல்வாழ்வு அமைந்துள்ளது. மனைவியுடன் இல்லறத்தில் இறங்கிகின்றவர்கள் சிற்றின்பத்திலேயே மூழ்கித் திளைத்து, இறைப்பற்றினை மறந்து  , பேரின்ப வாழ்வினை இழந்து விடுவதைப் பார்க்கின்றோம். நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் பல மனைவியர்களை மணந்து வாழ்ந்தவர்கள். ஆனால் இல்லறத்தின் நடுவே , மனைவியின் மடியிலேயே துறவு நிலை கொண்டிருந்தவர்கள். கவியரசு இக்பால் அவர்கள் பாடுவார்  , ' இறைவனைக் காண மூஸா  நபி [அலை] அவர்கள் தூர்சீன மலைக்குச் செல்ல நேரிட்டது. ஆனால் எங்கள் நபி பெருமானார் [ஸல்] அவர்கள் ஆயிஷா சித்தீக்கா [ரலி] அவர்களின் அன்பு மடியிலே தலை சாய்த்துப் படுத்திருந்த நிலையிலேயே இறைவனைக் கண்டார்கள்' என்று. ஆமாம்! ஆயிஷா நாயகியின் மடியில் அண்ணலார் அறிதுயில் செய்து கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் திருவசனங்கள் அருளப்பட்ட செய்தியைத்தான் கவியேறு  இக்பால் இவ்வாறு வருணிக்கிறார். இறுதித் தூதரின்  இல்லறத் துறவு இவ்வாறு தாமரையிலைத் தண்ணீரைப் போல் இருந்ததை உணரும் உலகம்  எப்படி அதிசயிக்காமலிருக்க முடியுமா ?

இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும் ..............
அண்ணலார் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் மீது நாம் அதிகம் அதிகம் சலவாத் சொல்வோம்  ! அவர்களின் வாழ்வை நம் வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்வோம்  ! இன்ஷாஅல்லாஹ் அவர்களுடன் உயர்ந்த சுவனத்தில் இருக்க  எப்பொழுதும் துஆச் செய்வோம்! அல்லாஹ்  நம் அனைவருக்கும் அருள் செய்வானாக!!!!!!!!!!!!!! ஆமீன்                   ..........!!!!!!!!!!!!!!.............   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!