ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

நியாயங்களுக்காக அநியாயங்களா ?

அல்லாஹ்வின் திருபெயரால் ........

நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே  என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

'நான் செய்வது தவறாக இருப்பினும், அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதச்சணை  வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்'  .என்கிறார்கள்.


'லாட்டரி தவறுதான் . ஆனால் அரசுக்கு வருமானம் வருகிறதே. விழுந்தால் வீட்டுக்கு, இல்லையேல் நாட்டுக்கு இதில் என்ன தவறு?  சிலர்  வினா எழுப்புகின்றனர்.

'மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஏழைகளுக்கு சத்துணவு அழிப்பது தவறா? என்று மதுவை நியாயப்படுகின்றனர் சிலர்.

மக்களைக் கொள்ளையடிப்பவர்கள் கூட,  'நாங்கள் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்குதானே  வழங்குகிறோம். வயிறு புடைத்தவன் தரமாட்டான் . வயிறு பசித்தவன் விடமாட்டான் என்ற பொன்மொழிகளை உதிர்த்து தமது செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

தனிமனிதர்களைவிட  இலட்சியங்களுக்காகப் பாடுபடும் குழுக்களிடம் இந்த எண்ணம் அதிகம் காணப்படுகிறது.

மதம், மொழி , இனம், வட்டாரம், நாடு ஆகியவற்றுக்காகப் போராடும் குழுக்களிடையே இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட செயலாகவே ஆகிவிட்டது.

அப்பாவிகளைக் கடத்திச் செல்லுதல் , விமானங்களைக் கடத்துதல் , வெடிகுண்டு வைத்தல் , ரயிலைக் கவிழ்த்தல், வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், போதைப் பொருட்களைக் கடத்துதல் போன்ற பல செயல்களைச் செய்து விட்டு, 'இதில் தவறொன்றும் இல்லையே' என்று வாதிடுகின்றனர் இந்த இலட்சியக் குழுக்கள்.

நோயைவிட நோயிக்குத்  தரப்படும் சிகிச்சை மோசமாக உள்ளதே! சிகிச்சையே நோயாளியைக் கொன்று  விடும் போலிருக்கிறதே!

'இத்தனை நாட்களாக அறவழியில் போராடியும் எந்த வெற்றியும் கிட்டவில்லை, மக்கள் ஆதரவும் எங்களுக்கு இல்லை, எங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்ததே தவிர, பிரச்சனைகள் எதுவும் தீர்ந்தபாடில்லை. எனவேதான் இந்த வழிமுறைகளைக் கையாளுகிறோம்.... இப்போது பாருங்கள் நாடே  எங்களைப் பற்றி விவாதிக்கிறது . மக்களின் கவனத்தை எங்கள்  பக்கம் திருப்பியிருக்கின்றோம்' என்று கூறி அநியாயங்களை நியாயப்படுத்த முயல்கின்றன தீவிரவாதக் குழுக்கள். ஆனால் வினை விதைத்தவன் தினையை அறுக்க முடியாது, வினையைத்தான் அறுப்பான் என்ற உண்மையை இவர்கள் மறந்து விடுகின்றார்கள்.

ஒரு அநீதியை , இன்னொரு அநீதியால் அழித்திட முடியாது. இவர்கள் விதைத்த வினையின் விளைவுகள் பினால் வெளிப்படும். ஒவ்வொரு வன்முறையும், அநீதியும் இன்னொரு அநீதிக்கு வழிவகுக்கும். பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்குமே தவிர, பிரச்சனைகளைத் தீர்க்காது. நீண்ட காலமாக வன்முறைப் பாதையில் சென்ற பல இயக்கங்கள் இதனைப் புரிந்து கொண்டு வன்முறைகளைக் கைவிட்டு,  மக்கள் இயக்கமாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளன. எந்த மக்களின் பிரச்சனைகளைத் தீர்பதற்காக வன்முறையில் ஈடுப்பட்டார்களோ, அந்த மக்களே கூட அதனை விரும்பவில்லை என்பதை காலம் கடந்து உணர்ந்து  , தமது நிலைகளை மாற்றிக் கொண்டன பல தீவிரவாதக் குழுக்கள்.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ,  'இறைவன் , தீமையின் வாயிலாக தீமைகளை அழிப்பதில்லை . மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான் . ஓர் அழுக்கு இன்னொரு அழுக்கை அகற்றுவதில்லை.'  [மிஷ்காத்]

இறைவன் கூறுகின்றான்..  ''[நபியே] நன்மையையும் , தீமையும் சமமாக மாட்டா. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக! அப்போது உம்முடன்  கடும்பகை கொண்டவர்கள் கூட, உற்ற நண்பர்களாகிவிடுவதை  காண்பீர்.  பொறுமை  மேற்கொள்வோரைத் தவிர, வேறெவருக்கும் இந்தக் குணம் வாய்க்கப்   பெறுவதில்லை. பெரும்பேறு பெற்றவர்களைத் தவிர  , வேறு எவருக்கும் இந்த உயர் தகுதி கிட்டுவதில்லை.
குர் ஆன்  41..34,35]

நபிகள்  நாயகம் [ஸல்] அவர்களுக்கும் , தோழர்களுக்கும் சொல்லொண்ணாத் துயரங்கள் இழைக்கப்பட்டன. அவதூறுகள் அள்ளி வீசப்பட்டன. அடி, உதைகள் அன்றாட  நடவடிக்கையாக இருந்தன. இத்தகைய சூழ்நிலையில்தான் அவருக்கு இந்த போதனை இறைவனால்  வழங்கப்பட்டது.

ஒரு கொடுமைக்கு, இன்னொரு கொடுமை தீர்வாகாது. ஒரு அநீதிக்கு, இன்னொரு அநீதி  தீர்வாகாது. தீமைகளை நன்மையைக் கொண்டே தடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அநீதி எப்போதும் அநீதிதான். ஒரு நெருக்கடியைச் சுட்டிக்காட்டி அதனை நியாயப்படுத்த முடியாது.

தீமையின் பேயாட்டத்தின் முன், நன்மை பலவீனமாகத்தான் தென்படும். ஆனால் இறுதியில் நன்மையே வெற்றி பெரும். சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும் என்கிறது இறைமறை குர்ஆன் . எனவே நன்மையைக் கொண்டே தீமையை  அழிப்பதில்தான் உண்மையான வெற்றி உள்ளது. ஆனால் இத்தகைய சிந்தனைகளை தீவிரவாதிகளிடம் காண்பது அரிது. பெரும்பேறு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த அறிய பண்பு கிட்டும். நோக்கம் எவ்வளவு உயர்வாக இருப்பினும், வழிமுறைகள் தீமையானவையாக இருந்தால், அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 'ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் , அந்த தர்மம் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது' என்கிறார்கள் நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள்.

ஒரு அநீதிக்கு இன்னொரு அநீதி தீர்வல்ல. அநீதிக்கு அறமே தீர்வு.****
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி .. அன்பு சகோதரர்  D.r. k.v.s. habeeb muhammad.
நன்றி.. நர்கிஸ் .
அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்வானாக ........******

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!