அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, மார்ச் 22, 2015

அமைதி பெற என்ன வழி ?

மன அமைதி நிம்மதி எதில் உள்ளது?
அல்லாஹ்வின் திருபெயரால் .........

செல்வந்தராக இருக்கட்டும் அல்லது நடுத்தரவாதியாக இருக்கட்டும் அல்லது ஏழையாக இருக்கட்டும் இன்று எல்லோரும் தேடுவது நிம்மதி எங்கே இருக்கிறது ? ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் நிம்மதியைத் தேடுகிறார்கள் . நிம்மதி அல்லாஹ்வை நினைவுக் கூறுவதில் தான் இருக்கிறது என்பதை மறந்து விட்டார்கள் .


பரபரப்பான வாழ்க்கை. மனிதர்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் . எதற்கு ஓடுகிறோம் என்று தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கிறார்கள் . ஓய்வு ஒழிச்சல் இல்லாத இயந்திரத்தனமான ஓட்டம்.

எதற்காக இந்த ஓட்டம்? வாழ்க்கைக்காக. ஆனால் இந்த ஓட்டத்தில் நாம் தொலைத்தது எதைத் தெரியுமா  ? அமைதியை ! காலையிலிருந்து இரவு வரை டென்ஷன் . கடுகடுப்பு. சிடுசிடுப்பு. எல்லார் மீதும் சுள்ளென்று எரிந்து விழுதல் . ''ச்சே '' இது என்ன வாழ்க்கை' என்று ஒரு சலிப்பு. வெறுப்பு.

அமைதியைத் தேடி மனித அலை பாய்கிறது. சிலர் மன அமைதிக்காக மதுவை நாடுகிறார்கள். போதை மருந்துகளிலும், போதை ஊசிகலிலும் சிலர் அமைதியைத் தேடுகிறார்கள். சிலர் தியான வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். சிலர் சாமியார்கலிம் ஆசிரமங்களில் அடைக்கலம் ஆகிவிடுகிறார்கள்  . இப்படியெல்லாம் செய்தும் கூட அவர்கள் தேடிய அமைதி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் சோகமான விடை.

மனம் அமைதி பெற  இஸ்லாம் அழகான வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது. இஸ்லாம் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உள்ளன. 1. கீழ்ப்படிதல் 2. அமைதி . அதாவது, தூய்மையான உள்ளத்துடன் இறைவனுக்கு கீழ்படிந்து நடந்தால் அமைதி கிட்டும் என்பது இதன்கருத்து. யாருக்கு சாந்தி உண்டாகும், யாருக்கு அமைதி கிட்டும் என்பதைக் குர்ஆன் இரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் சொல்லிவிடுகிறது.

''சாந்தி உண்டாகும் , [இறைவனின் ] நேர்வழியைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு''  [திருக்குர்ஆன்  20-40]

இறைவன் கூறியப்படி, அவன் காட்டிய வழிப்படி நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், நம்முடைய மனங்களில் ஆயிரமாயிரம் அமைதிப் பூக்கள் மலரும்.  மன அமைதி பெறுவதற்கு மாகிச் சிறந்த வழிகளில் ஒன்று தொழுகையை முறைப்படி நிறைவேற்றுவதாகும். ஆம்! ஐவேளைத் தொழுகை இறைவன் நமக்கு அளித்த ஓர் அருட்கொடை. இஸ்லாத்தை வாய்மையாகப் பின்பற்றும் ஒரு நல்ல முஸ்லிமின் அன்றாட வாழ்க்கை தொழுகையில் தொடங்கி  தொழுகையில் முடிகிறது என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும்.

ஒரு முஸ்லிம் அதிகாலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுகிறார். காலைக் கடன்களை முடித்துவிட்டு , 'ஒளு ' உடல் தூய்மை செய்த பிறகு பள்ளிவாசலை நோக்கி விரைகிறார். எதற்க்காக? சுப்ஹூ எனும் வைகறைத் தொழுகையை நிறைவேற்றுவதற்காக . விடிந்தும் விடியாத  அந்தக் காலைப் பொழுதில்  இறைவனிடம் மனமுருகி இறைஞ்சுகிறார். அன்றையப் பொழுதை நல்ல பொழுதாக்கி தரும்படியும் , செய்யும் வணிகத்தில், தொழிலில் இறைவனின் அருள்வளம் [  பரக்கத் ] பொழிய வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார்.

பள்ளிவாசலை விட்டு வெளியே வரும்போது சில்லென்று காலைத் தென்றல் அவருடைய முகத்தைத் தழுவிச் செல்லும் போது  இனம் புரியாத ஓர் அமைதி அவருடைய உள்ளத்தில் குடிகொள்கிறது. அதற்குப் பிறகு தம்முடைய அன்றாட அலுவல்களில் ஈடுபடுகிறார். அலுவலகத்தில் , தொழிலில், வணிகத்தில் , கொடுக்கல்- வாங்கல் முழு முனைப்புடன் கவனம் செலுத்துகிறார். பல சிக்கல்களையும் சிரமங்களையும் எதிர்கொள்கிறார். இப்படி முனைப்புடன் வேலைகளில்  ஈடுப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, நண்பகல் தொழுகைக்கான அழைப்போசை பள்ளிவாசலில் இருந்து கேட்கிறது.

அவ்வளவுதான். அத்தனைப் பணிகளையும், அத்தனை டென்ஷன் களையும் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டுப் பள்ளிவாசல் நோக்கிச் செல்கிறார். ஒளு செய்கிறார், பிறகு, இறைவனின் முன்னால் அமைதியாகக் கைகளைக் கட்டி நின்று   விடுகிறார். வைகறைத் தொழுகைக்குப் பிறகு நண்பகல் வரை உலக விவகாரங்களில் ஈடுப்பட்டிருக்கும் போது  சிந்தனையிலும், செயல்களிலும் அறிந்தோ, அறியாமலோ சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம். இப்பொழுது தொழுகையில் அவற்றையெல்லாம் இறைவனிடம் முறையிட்டு பாவமன்னிப்பு கோருகிறார். நேர்வழி காட்டும்படி மன்றாடுகிறார். சிரமங்களை நீக்கி அருளும்படி இரு கையேந்தி இறைஞ்சுகிறார். மனம் இலேசான நிலையில் இறையில்லத்தை  விட்டு வெளியே வருகிறார். மீண்டும் உலக வாழ்வில் ஈடுபடுகிறார்.

சிறிது நேரத்தில்  'அசர் ' எனப்படும் மாலை நேரத் தொழுகையையும், அதைத் தொடர்ந்து  'மக்ரிப்' எனப்படும் அந்திநேரத் தொழுகையையும் நிறைவேற்றுகிறார். உலக விவகாரங்களில் எல்லாம் முடித்த பிறகு , தூங்கச் செல்வதற்கு முன்பு  'இஷா ' எனும் இரவுத் தொழுகையில் இறைவனிடம் கையேந்தி மீண்டும் பிரார்த்திக்கிறார். தம்முடைய மனச்சுமைகளை எல்லாம் இறைவனின் திருமுன் சமர்ப்பிக்கிறார். பிறகு அதே அமைதியான உள்ளத்துடன் உறங்கச் செல்கிறார்.

இப்பொழுது நீங்களே சொல்லுங்கள்! ஐவேளைத் தொழுகையை முறையாகக் கடைபிடிக்கும் ஒரு முஸ்லிம் அமைதியின்மைக்கோ டென்ஷனுக்கொ  ஆளாவாரா? அதற்கு வாய்ப்பே இல்லை. தொழுகை மூலம் கிடைக்கும் அமைதி குறித்து குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது..

'அறிந்து கொள்ளுங்கள் . இறைவனை நினைவு கூறுவதால்தான் உள்ளங்கள் அமைதி அடைகின்றன.   திருக்குர்ஆன்

தூய்மையான மனதில்தான் அமைதி பிறக்கும். இதை ஓர் எடுத்துகாட்டு மூலம் நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் விளக்கினார்கள்..

உங்கள் வீட்டுக்கு அருகில் ஓர் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் அந்த ஆற்றில்  ஒரு நாளைக்கு ஐந்து தடவை குளிக்கிறீர்கள் என்றால் உங்கள் உடலில்  அழுக்கு இருக்குமா? அதுபோல் ஐவேளைத் தொழுகையை முறைப்படி தொழுபவர்களின் உள்ளங்கள் மாசு மருவின்றி ஒளிரும்.

ஒளி குடியிருக்கும் இடத்தில் இருளுக்கு என்ன வேலை?

அன்றாட வாழ்வில் இஸ்லாம் கற்றுத் தரும் இந்தப் பண்பாட்டின் காரணமாகத்தான் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு முஸ்லிம்கள் அத்தனைச் சீக்கிரம் நிராசையோ , சோர்வோ அடைவதில்லை. அல்லாஹ் ஒரு வழி  காட்டுவான் என்ற நம்பிக்கையோடு அடுத்தக் கட்டப் பணியில் ஈடுபடுகிறார்கள். அதனால்தான் இதர சமுதாயத்தினர்களை விட முஸ்லிம்களிடையே தற்கொலை செய்து கொள்ளும் விகிதாச்சாரம் மிக மகக் குறைவாகக் காணப்படுகிறது.

தனிப்பட்ட வாழ்வில் , சமூகத்தில் அமைதியின்மை தோன்றுவதற்குரிய எல்லா வழிகளையும் இஸ்லாம் அடைத்துவிடுகிறது. வீட்டிலும் நாட்டிலும் அமைதியை மலர்ச் செய்வதே இஸ்லாத்தின் நோக்கமாகும். அமைதி நிறைந்த வாழ்வு என்பது, இஸ்லாம் கற்றுத் தரும் இனிய பண்பாடுகளில் ஒன்றாகும்.
நன்றி.. சிராஜூல் ஹசன்
நன்றி.. நர்கிஸ்
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!