அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், ஏப்ரல் 13, 2015

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார்

அழைப்புப் பணி ஒரு சிறந்த பணியாகும்!
அல்லாஹ்வின் திருபெயரால் .............................
நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீது கடமை .

அல்லாஹ்வின்பால் அழைப்பதன் அவசியப் பணிகளில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் ஒன்றாகும். அழைப்பாளர் அறிவுடனும், நிதானத்துடனும் அழகிய முறையில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பார். கரத்தால் தடுப்பதில் கடுமையான குழப்பங்கள் எதுவும் ஏற்படாது என்றால் அத்தீமையை தனது கரத்தால் மாற்றுவார். அது இயலவில்லையென்றால் தனது நாவின் மூலம் சத்தியத்தை எடுத்துரைத்து தீமையை நன்மையாக மாற்றப் போராடுவார்.


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..  ''உங்களில் ஒருவர் வெறுக்கத் தகுந்தவைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அதற்கு சக்தி பெறவில்லையெனில் தனது நாவால் மாற்றட்டும். அதற்கும் சக்தி பெறவில்லையெனில் தனது மனத்தால் வெறுத்துவிடட்டும் .இது ஈமானின் பலவீனமான நிலையாகும்.
ஆதாரம்.. முஸ்லிம்]

ஒரு முஸ்லிம் பிற முஸ்லிம்களின் நலம் நாடி நல்லதை ஏவி தீமையைத் தடுப்பார். ஏனெனில், மார்க்கம் என்பது பிறர் நலம் நாடுவதுதான். இதை உண்மைப்படுத்த வேண்டுமெனில் அவர் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தேயாக வேண்டும்.

நபி [ஸல்] அவர்கள்,  '' மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுவது'' என்று கூறியபோது நாங்கள் கேட்டோம்  ''யாருக்கு ?'' நபி [ஸல்] அவர்கள் ''அல்லாஹ்வுக்கும், அவனது வேதத்துக்கும், அவனது தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், பொது மக்கள் அனைவருக்கும்'' என பதிலளித்தார்கள்.
ஆதாரம்.. முஸ்லிம்]

பிறர் நலம் நாடுவதும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதும் அநீதி இழைப்பவனின்  முகத்துக்கு நேராக சத்தியத்தை உரக்கச் சொல்வதற்கான துணிவை முஸ்லிமுக்கு ஏற்படுத்தித் தரும்.

சுதந்திரமாகவும், கண்ணியமாகவும், கௌரவத்துடனும் இச்சமூகம் நிலைபெருவதென்பது  அநியாயக்காரனுக்கு முன் 'நீ அநியாயக்காரன்' என்று அச்சமின்றி சொல்லும் ஆற்றல் பெற்ற வீரர்களால் மட்டுமே சாத்தியமாகும். இச்சமூகத்தில் எப்போது அச்சமின்றி சத்தியத்தை எடுத்துரைக்கும் ஒரு கூட்டம் இல்லையோ அப்போது ஒட்டுமொத்த சமுதாயமும் வீழ்ச்சியை சந்திக்கும்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''அநியாயக்காரனிடம் 'நீ அநியாயக்காரன்' என்று சொல்ல அஞ்சுபவர்களாக எனது உம்மத்தினரை கண்டால் நீர் அவர்களிடமிருந்து விலகிக்கொள் . '' [ஆதாரம்.. அஹ்மத்]

அச்சத்தியத்தை எதிர்ப்பதில் வீரத்தை கடைபிடிக்க வேண்டும். அநியாயக்காரனை எதிர்ப்பது உணவையோ வாழ்வையோ குறைத்துவிட முடியாது என்று அறிவுறுத்தும் அதிகமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''மனிதரைப் பற்றிய அச்சம் நீங்கள் சத்தியத்தைக் கூருவதிலிருந்தோ , மகத்தானதை [அல்லாஹ்  மறுமைநாளை] நினைவுபடுத்துவதிலிருந்தோ உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில் அவ்வாறு செய்வது நிச்சயமாக உங்களது ஆயுளைக் குறைத்துவிடவோ, உணவு தூரமாக்கிவிடவோ முடியாது.  [ஆதாரம்.. திர்மிதி ]

நபி [ஸல்] அவர்கள் மிம்பரில் இருந்தபோது ஒரு மனிதர் எழுந்து வினவினார்..  'அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்? நபி [ஸல்] அவர்கள்  ''மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சமுடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்தபந்துக்களோடு இணைந்திருப்பவர்'' என்று கூறினார்கள்.
ஆதாரம்.. அஹ்மத்]

இஸ்லாமிய சமூகத்தில் நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது முஸ்லிம்களின் வீரத்தையும், துணிச்சலையும் அடிப்படையாகக் கொண்டதாகும். தீமைகளை எதிர்கொள்வதிலும், அநீதி இழைக்கப்பட்டோருக்கு  உதவி புரிவதிலும் , வீரத்தை வெளிப்படுத்த வேண்டும். சத்தியத்தை பாதுகாக்கும் வீரர்களுக்கு அல்லாஹ்வின் உதவி உள்ளதென்றும், சத்தியத்தை எடுத்துரைக்காமல் வாய் மூடியிருக்கும் கோழைகளுக்கு  இழிவு உள்ளதென்றும் விவரிக்கும் ஏராளமான நபிமொழிகள் காணக் கிடைக்கின்றன.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  '' ஒரு முஸ்லிமை கேவலப் படுத்துகிறார்கள்,, அவனுடைய கண்ணியத்தைத் தாக்குகிறார்கள்,, அந்த இடத்தில் ஒருவன் அந்த முஸ்லிமைக் காப்பாற்றவில்லையென்றால்  அல்லாஹ்வுடைய உதவி அவனுக்குத் தேவைப்படும் ஒரு இக்கட்டான தருணத்தில் அல்லாஹ்  அவனை கைவிட்டு விடுவான். ஒரு முஸ்லிம் கேவலப்படுத்தப்ப்படும்போது, அவனுடைய கண்ணியம் தாக்கப்படும்போது யாராவது அவனுக்கு உதவி செய்தால் அவன்  'அல்லாஹ்வுடைய உதவி கிடைக்காதா'  என்று ஏங்கும் தருணத்தில் அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான்.
ஆதாரம்.. அபூதாவூத் ]

முஸ்லிம் அசத்தியத்தை சகித்துக்கொள்ள மாட்டார், சத்தியத்திற்கு உதவி செய்வதில் சோர்வடைய மாட்டார். தனது சமூகத்தில் அநீதம் பரவுவதையும், சபைகளில் தீமைகள் பரவுவதையும் ஒருபோதும் விரும்பமாட்டார். எப்போதும் தீமைகளை தடுத்துக் கொண்டேயிருப்பார். ஏனெனில் தீமையைத் தடுக்காதிருந்தால் அல்லாஹ்வின் வேதனை வாய்மூடி கோழையாக இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும்.

ஒரு முஸ்லிமின் மார்க்கப் பற்று உண்மையாக இருந்து,அவரது ஈமான் உயிரோட்டமுடையதாக இருந்தால் நன்மையை ஏவுவதில் தீவிரமாகவும், தீமையை எதிர்கொள்வதில் வீரத்துடனும் இருப்பார். தீமைகளை அகற்ற முடிந்தளவு போராடுவார். ஏனெனில் மார்க்கத்தின் எல்லா அம்சங்களும் முக்கியமானவைதான். அதன் எந்தப் பகுதியிலும் அலட்சியம் கூடாது. அத கொள்கைகள் அனைத்தும் உறுதியானவை சந்தேகமற்றவை.

தங்களது மார்க்க விஷயங்களில் யூதர்கள் அலட்சியம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இலக்கானதுபோல், முஸ்லிம்களும் பலியாகிவிடக் கூடாது என நபி [ஸல்] அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  '' உங்களுக்கு முன் வாழ்ந்த சமூகமான பனூ இஸ்ராயீல்களில் ஒருவர் தவறு செய்தால் அதைத் தடுத்து கண்டிக்க வேண்டியவர் தடுப்பார். அதற்கு அடுத்த நாள் அந்த நபருடன் அமர்ந்து சாப்பிடவும், குடிக்கவும் செய்வார். அவர் நேற்று எந்த தவறுமே செய்யாதது போன்று நடந்துகொள்வார். இதை அல்லாஹ் அவர்களிடையே கண்டபோது அவர்கள் மாறுசெய்து, வரம்பு மீறியதன் காரணமாக தாவூது [அலை] ஈஸா  [அலை] அவர்களின் நாவினால் சபித்து அம்மனிதர்கள் சிலரின் உள்ளங்களை வேறு சிலரின் உள்ளங்களோடு கலந்துவிட்டான்.

எவனது கைவசம் எனது ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவுங்கள், தீமையைத் தடுத்துக் கொள்ளுங்கள். தவறிழைப்பவனின் கரங்களைக் பிடித்து அவனை சத்தியத்தின்பால் திருப்பிவிடுங்கள். அவ்வாறு செய்யவில்லையானால் அல்லாஹ் உங்களது இதயங்களை ஒன்றோடொன்று இணைத்து விடுவான். [தீமைகளோடு  போய்  விடுவீர்கள்] அந்த இஸ்ரவேலர்களை சபித்ததுபோல உங்களையும் சபித்து விடுவான்.
ஆதாரம்.. முஃஜமுத் தப்ரானி]

அல்லாஹ் மிக்க அறிந்தவன் .
நம் அனைவரையும் நல்லதை ஏவி தீமையைத் தடுக்கும் கூட்டத்தில் அல்லாஹ் சேர்ப்பானாக ........... ஆமீன்................. 

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!