அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

சனி, ஏப்ரல் 04, 2015

துருப் பிடித்த இதயங்களைத் துலக்கவது எப்படி...?

 துருப் துருப் பிடித்த இதயங்களைத் துலக்குவது எப்படி..? அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்......
மனித நேயம் செத்துவிட்டதா என்று நினைக்கும் அளவுக்கு இப்பொழுது எங்குப் பார்த்தாலும் நடக்கும் காட்சிகள் பார்க்கும்போது அப்படி தோன்றுகிறது.

சாலையோரத்தில் பிணமாகக் கிடக்கும் அந்த மூதாட்டிக்கு என்ன வயதிருக்கும்? எழுபது, எழுபத்தைந்து இருக்குமா? தன் வாழ்க்கை பற்றியோ, தன் வாழ்வில் படிந்துவிட்ட நிலையான வறுமை பற்றியோ இனி கவலைப்படுவதற்கு அவளிடம் உயிர் இல்லை. பாவம்! யாரும் இல்லாத அநாதை போலிருக்கிறது. வெகுநேரமாக அவளுடைய பிணம் அப்படியே கிடக்கிறது. பரபரப்பான அந்தச் சாலையில் நிமிடத்திற்கு நூறு பேர் பறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். போனால் போகிறதென்று ஓர் அனுதாபப் பார்வையை மட்டும் அந்தப் பிணத்தின் மீது வீசிவிட்டுப் போய்கொண்டே இருக்கிறார்கள். யாரும் அருகில் கூட வரவில்லை .


'மனிதர்கள் வராவிட்டால் என்ன? நாங்கள் இல்லையா?' என்று சொல்வது போல், இரண்டு மூன்று நாய்கள் அந்தப் பிணத்தைச் சுற்றிச் சுற்றி வருகின்றன.அக்கம் பக்கத்துக் விசாரித்ததில் , அந்தக் கிழவி அப்பகுதியில் பிச்சை எடுத்து கொண்டிருந்தவள் என்று தெரிய வந்தது. அந்த அனாதைப் பிணத்தின் மீது யார் அக்கறை காட்டப் போகிறார்கள்?

காவல்துறையினர் வரும்வரை அந்தப் பிணம் அங்கேதான் கிடக்கும். இதோ, இன்னொரு அவலக்காட்சி! அந்த வீட்டிலிருந்து விடாமல் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வீட்டைச் சேர்ந்த ஓர் இளைஞ்சன் , திடீரென மாரடைப்பால் இறந்து விட்டான் . வசந்தங்களின் முகவரி தேடி வாழ்வைத் தொடங்க வேண்டியவன், இப்படி மரணத்தின் மடியில் தலைசாய்த்து விட்டானே என எண்ணியெண்ணி பெற்றவர்கள் வாய்விட்டு அழுகின்றார்கள். ஆனால், அண்டை வீட்டுக்காரர்கள் பண்பலையில் சினிமா பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டின் பரிதாபங்கள் இவர்களை கொஞ்சமும் பாதிக்கவில்லையே, ஏன் ?

மற்றொரு காட்சியைப் பார்ப்போம். அந்தப் பெண்ணின் கணவன் திடீரென்று இறந்துவிடவே, அவள் விதவையாகிறாள். கட்டிய கணவன் இருக்கும்போதே, கொடுமைப்படுத்தும் மாமியார், நாத்தனார்கள்...! இப்பொழுது எப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்லத் தேவையில்லை. தனது மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு- உடன்பிறந்த சகோதரன் வீட்டிற்கு, அந்த விதவைத் தங்கை வருகிறாள். தங்கையின் வருகையைக் கண்டதும் அண்ணனின் முகம் எட்டுக் கோணலாகி விடுகிறது. கணவனை இழந்து கண்ணீரோடு வந்திருக்கும் தங்கையை வா என்று சொல்லக்கூட அவனுக்கு மனம் வரவில்லை. அண்ணியோ ஒருபடி மேலே. புகலிடம் தேடித் பிறந்த வீட்டுக்கு வந்தவளை, வேலைக்காரி போல் நடத்தத் தொடங்கினாள் அண்ணி . நாள் முழுக்க வேலை வாங்கிக் கொண்டு ஒருவேளை உணவு கூட வயிறாப் போடா மாட்டாள். குழந்தைகள் பாலுக்காகக் கதறியழும் . எட்டுத் தெருவுக்குக் கேட்கும் அந்த அழுகை, அண்ணன்-அண்ணியின் காதுகளுக்கு மட்டும் எட்டாது.

பாவம் , அந்த விதவைத் தங்கை என்ன செய்வாள்? தனக்குக் கிடைக்கும் ஓரிரண்டு ரொட்டிகளையும் தண்ணீரில் கரைத்து அழுகின்ற குழந்தைகளுக்கு பாலாகப் புகட்டுவாள் . தன்னுடைய பசியைப் போலவே, பொங்கிப் பெருகிவரும் துயரத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டு விம்முவாள்.

விதவைத் தங்கையின் துயரங்களைக் கண்டு, அண்ணனும், அண்ணியும் கொஞ்சமும் அலட்டிக் கொள்வதில்லை. கூடப்பிறந்த தங்கையை எதோ பிச்சைக்காரியைப் போல- ஏன் அதைவிடக் கேவலமாக நடத்துகிறான் அண்ணன்.

இந்த அண்ணனைப் போல இன்னொரு பணக்கார அண்ணன். இவன் தன் தங்கையை ஒரு வேலைக்காரியாகக் கூட  தன் வீட்டில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இவன் என்ன செய்தான் தெரியுமா? அடைக்கலம் தேடிவந்த அன்புத் தங்கையை கையேடு அழைத்துச் சென்று ஆதரவற்ற பெண்கள் காப்பகத்தில் விட்டுவிட்டு  'நிம்மதியாக' வீடு திரும்பிவிட்டான்.

இவையெல்லாம் கட்டுக்கதைகளோ, கற்பனைச் சரக்கோ அல்ல. அத்தனையும் நடந்த உண்மைகள். இக்கொடுமைகளை என்னும்போது, நம் உள்ளங்களில் உதிரம் கொட்டுகிறது. நினைவுகளில் நெருப்பு எரிகிறது. ஏழைகளுக்கும்,விதவைகளுக்கும், அனாதைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், உறவினர்களுக்கும் உள்ள உரிமைகளை இறைவன் திருமறையில் தெளிவாகச் சொல்லியுள்ளான். அவற்றை நிறைவேற்ற வேண்டுமென ஆணையிட்டுல்லான். ஆனால், நம்மில் எத்தனை பேர் அக்கட்டளைகளை நிறைவேற்றுக்கிறோம்?

மனித  இனத்தைச் சேர்ந்த ஓர் பெண், தெருவில் பிணமாகக் கிடக்கும்போதும்,அதைப் பார்த்தும் பார்க்காதது போல் செல்வதற்கு நமக்கு எப்படி மனம் வருகிறது?  பக்கத்து வீட்டில் சாவு நடந்திருக்கும்போது, கொஞ்சமும் கூட வருத்தமில்லாமல் நம்மால் எப்படி வானொலியை- அதுவும் சினிமா பாடலைக் கேட்க முடிகிறது?

அடுத்தவருக்கு உதவும் எனும் அறிய பண்பு இந்த நூற்றாண்டு மனிதனிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டதோ? சுயநலமும்,சொகுசு வாழ்வுதான் மனிதனை இப்படி மாற்றிவிட்டனவா? மனித இதயங்கள் இப்படி மரித்துப் போனதற்குக் காரணம்தான் என்ன? நற்செயல்களின் ஊற்று தடைப்பட்டுவிட்டதே? அது ஏன் ? பரஸ்பர அன்பும், தொடர்ப்பும் ஏன் பாழாகிவிட்டன? மனித இனம் என்ற மாபெரும் கடலில் ஒவ்வொரு மனிதனும் ஏன் தனித்தனித் தீவாய்  இருக்கின்றன?

இந்த  அத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே பதில், மனிதன் இறைச்சட்டங்களை மீறி வாழ்கிறான்.  ஆம்! நற்செயல் , மறுமை, நற்கூலி போன்ற எண்ணங்கள் மனித மனங்களில் இன்னும் ஆழமாகப்  பதியவில்லை. 'உறவுகளை முறிக்காதீர்கள்' எனும் இறைவனின் ஆணையை மனிதன் முறித்து எரிந்து விட்டான். 'அனாதைகளின் சொத்துக்களை அபகரிக்காதீர்கள்' எனும் அல்லாஹ்வின் கட்டளையை இவன் அனாதையாக்கி விட்டான்.

'ஏழைகளுக்கு உதவுங்கள்' எனும் ஏக இறைவனின் கட்டளையை இவன் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.  'வழிப்போக்கரின் உரிமையை நிறைவேற்றுங்கள்! ' எனும் வல்லோனின் கட்டளையை இவன் வழியிலேயே தொலைத்து விட்டான். 'விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுங்கள்' எனும் விவேகம் நிறைந்த  இறைச்சட்டம் இவனைப் போருத்தவரி விதவையாகவே நிற்கிறது.

இன்று மனிதனின் கண் முன்னால்  தெரிவதெல்லாம் பணம் மட்டும்தான். அது கிடைப்பதாக இருந்தால் இறைச்சட்டங்களைத் தூக்கி எறியவும் இவன் தயங்குவதில்லை. இதயத்தைத் துருபிடிக்க வைத்து, இரும்புப் பெட்டியை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறான். சொந்த பந்தங்கள், இரத்த உறவுகள் எல்லாமே பணத்துக்கு முன்பாக இரண்டாம் பட்சம்தான் . இத்தகையத் துருபிடித்த இதயக்காரர்களைக் குறித்து அல்லாஹ்  திருமறையில் கூறுகிறான்..

''[இறைச் சட்டங்களைப் பேணாத] இவர்களுக்கு, இதயங்கள் இருக்கின்றன,, ஆனால் அவற்றால் அவர்கள் சிந்தித்து உணர்வதில்லை. அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன,, ஆயினும் அவர்கள் அவற்றால் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் இருக்கின்றன,, ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள். ஏன் , அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள் .''
அல்குர்ஆன் 7..179]

ஆம் இறைச்சட்டங்களைப் பேணி நடந்து மனித உறவகளை- உரிமைகளை மலரச் செய்யாதவர்கள் விலங்குகளை விடக் கீழானவர்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. *****
நன்றி.. சிராஜூல் ஹசன் /நர்கிஸ்
அல்லாஹ் மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!