புதன், ஏப்ரல் 08, 2015

எனதருமைச் சமுதாயமே !

அல்லாஹ்வின் திருபெயரால் .....

'' அல்லாஹ்வின் கயிற்றை [திருவேதம்] அனைவரும் இருக்கப் பிடியுங்கள், பிரிந்து விடாதீர்கள்.''

'சமுதாயம் உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. சமுதாயத்துக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்' என்று ஒரு அறிஞர் கூறினார்.  'சமுதாயம் வேறு , நீ வேறல்ல. சமுதாயமும்- நீயும் நன்கு இறுகிய கயிறு போன்றாகும். நீ செய்யும் ஒவ்வொன்றிலும் சமுதாயநோக்கை கருத்தில் கொள்ளப்பட வேண்டும். ' என்று இஸ்லாம் கூறுகிறது.

'' நீ உனக்காக வாழாதே சமுதாயத்துக்காக வாழு' என்று தத்துவத்தை நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் இப்படிக் காட்டுகிறார்கள்.  

'சக முஸ்லிமின் உலகத் துன்பங்களில் ஒன்றை அகற்றுபவருக்கு, மறுமையில் துன்பங்களில் ஒன்றை இறைவன் அகற்றுவான். வறியவருக்கு வசதி செய்து கொடுப்பவருக்கு, உலகிலும்- மறுமையிலும் இறைவன் வசதி செய்து கொடுப்பான். பிற முஸ்லிமின் குறையை மறைத்தவரின் குறையை உலகிலும்- மறுமையிலும் இறைவன் மறைப்பான். ஒரு மனிதன் தனது சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் இறைவன் அவனுக்கு உதவுவான். 
நூல்.. முஸ்லிம்]

கூட்டுப் பிரார்த்தனை 
'ஒருவர் தன் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யும்போது, சமுதாயத்துக்காகவும் கேட்கவில்லையாயின், அவரது துஆ கந்தை ஆடையைப் போன்று திருப்பி அனுப்பப்படுகிறது' என நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்று, சமுதாய நலனில் அக்கறை கொள்ளாதவனுக்கு அங்கீகாரம் இல்லை என்பதை உணர்த்துகிறார்கள்.

இதனால்தான் ஒரு மனிதன் ஊரெல்லாம் உறங்கிக் கிடக்கும் வேளையில் , தான் மட்டும் விழித்தெழுந்து இறையின்பத்தில் திளைத்திருப்பதர்காக தொழுகையில் ஈடுபட்டால்,  'இய்யாக்க நபுது வ இய்யாக்க நஸ்தயீன் ' [உன்னையே வணங்குகிறோம் , உன்னிடமே உதவி தேடுகிறோம்] என்று பன்மையாக கூறி உறங்கிக் கிடக்கும் சமுதாயத்தையும் தன்னுள் இணைத்துக் கொள்ள வேண்டுமென்று இறைமறை வழிகாட்டுகிறது. 

ஜமா அத் கட்டுப்பாடு 

ஒருவன் தனது சமுதாயத்துடன் எந்த அளவு இணைக்கிரானோ, அந்த நன்மை கிடைக்கப் பெறுகிறான் என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.  தனியாக ஒருவன் தொழுதால் ஒரு பங்கு நன்மையே அவனுக்கு கிட்டுகிறது. அதே தொழுகையை ஜமா அத்  தொழுகை நடைபெறாத கடைத்தெரு பள்ளிவாசலுக்கு வந்து, பிறருடன் தன்னை இணைத்து கூட்டுத் தொழுகையாக அவன் தொழுதால் பத்து மடங்கு நன்மை கிடைக்கிறது. ஜமாஅத் நடைபெறும் பள்ளிவாசலுக்கு வந்து  ஜமாஅத்துடன் அவன் கலந்து தொழுதால் 27 மடங்கு நன்மை கிடைக்கிறது. 

அவன் இன்னும் சற்று முன்னேறி மஸ்ஜிதும் நபவியில் தொழுதால் 10 ஆயிரம் மடங்கு நன்மைகளும், மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழுதால் 50 ஆயிரம் நன்மைகளும், கஅபத்துல்லாஹ்வில் தொழுதால் 1 லட்சம் நன்மைகளும் அவன் கிடைக்கப் பெறுவதற்கு அதிக கூட்டத்துடன் அவன் கலப்பது ஒரு காரணமன்றோ  !

'தனிமரம் தோப்பாகாது' என்று கூறுவர் . ஒருவர் எவ்வளவுதான் உயர்ந்தவராக, பண்பாடு மிக்கவராக, பக்தி சீலராக இருந்தாலும், சமுதாய சிந்தையின்றி தனியாக  வாழ்வது அவருக்கு நன்மை பயக்காது.

இன்பத்திலும்- துன்பத்திலும் கூட்டு 

சமுதாயத்தில் ஒட்டு மொத்தமாக மகிழ்ச்சி சம்பவிக்காத வரை, எந்த ஒரு தனி மனிதனும் மகிழ்ச்சியாக உலா வரலாகாது என்ற கருத்தை நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சரீரத்தைப் போன்ற வராவார்கள் எனக் குறி உவமை நயத்துடன் விளக்குகிறார்கள். கண் வலியெடுத்தால் சரீரமனைத்தும் நோவு கண்டுவிடுகிறது. காலில் முள் தைத்து விட்டால் அதற்காக கண் கண்ணீரைச் சிந்துகிறது. ஆ வென்று நாவு கூறுகிறது. கை அந்த முள்ளை  எடுக்க முனைகிறது . மற்றொரு கால் ஆசனமாக இருந்து உதவுகிறது. 

உறுப்புகளுக்கு மத்தியிலுள்ள இந்த பாசமும் சமுதாயத்தின் அனைத்து அங்கத்தினர் இடையேயும் இருக்க வேண்டுமென்பதையே நபி மொழி விளக்குகிறது. நூஹ் நபி [அலை] அவர்கள் 950 ஆண்டுகள் அயராது பொது மக்களை நேர்வழியின் பால்  அழைத்தும் இஸ்லாத்தை மிகச் சிலரே ஏற்கிறார்கள். அதனால் உலகளாவிய வெள்ளப் பிரளயம் ஏற்பட்டு இறையை மறுத்து அனைவரும் அழிக்கப்படுகிறார்கள். அவ்வாறு அழிக்கப்படுபவர்களில்   நபி நூஹ் [அலை] அவர்களின் மகனும் ஒருவர்.

தன் மகனை எவ்வளவு வருந்தி அழைத்தும், அவன் தன்னை உதாசீனப்படுத்தியத்தை அறிந்த  நபியவர்கள், 'இறைவா! என் மகன் என் குடும்பத்தைச் சார்ந்தவனல்லவா' என்று இறைவனிடம் முறையிட்டு அவனை காக்க வேண்டுகிறார்கள். உலகம் தழுவிய சமுதாயத்தின் அழிவு பற்றிக் கவலைப்படாமல், தன் மகனைப் பற்றி மட்டும் அவர்கள் கவலைப்பட்டதைக் கண்ணுற்ற இறைவன்  'இது தீதான செயல் ' என்று கூறி அவர்களை கண்டிக்கிறான். 

சமுதாயம் அழிவின் பாதையில் செல்லும் போது , நம்மை மட்டும் நாம் கருத்தில் எடுத்துக்  கொள்ளலாகாது. நமது வாழ்வு தாழ்வு அனைத்தும் சமுதாயத்தின் நன்மையுடன் இணைந்திருக்க வேண்டும். 

ஒரே இறைவன் ! ஒரே திருமறை! ஒரே இறுதி நபி! ஒரே கொள்கை!  ஆனால், இன்று  நம்மில் பல பிரிவுகள் , பல்வேறு கருத்துக்கள், கொள்கையில் வேறுபாடுகள்  ! ஏன் ........? இப்படி .....? பணம் , பதவி, செல்வாக்கு, பொறாமை, போட்டி, நீயா ? நானா? என்ற ஈகோ இப்படி சொல்லிக் கொண்டு போகலாம்........  பணம் , பதவி, போட்டி, பொறாமை, இல்லாத ஒரு ஜாமத்து இருக்கிறது என்றால் . அந்த ஒரு ஜமாத்து தப்லிக் ஜமாத்து மட்டும்தான் என்று உறுதியாக சொல்ல முடியும். 

நம்மில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிரிவும் , பிளவும் எதனால்  என்பதை நாம் ஒவ்வொருவரும்  சிந்திக்க வேண்டும்.       விடையும், விளக்கமும் நமக்கு  கிடைக்கும். சுயநலம் உள்ள ஜமாத்தையும், இயக்கத்தையும் நாம்  புரிந்துக்கொள்ளலாம். 
நன்றி.. மவ்லவீ. அல்ஹாஜ். O .M . அப்துல் காதிர் பாகவீ.
நன்றி.. நர்கிஸ் 
சத்திய பாதை இஸ்லாம்.
அல்லாஹ்  மிக்க அறிந்தவன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!