சனி, ஏப்ரல் 11, 2015

மீண்டும் சுனாமி வரும்

இன்றையக் காலத்துக்கு ஏற்ற கட்டுரை 
அல்லாஹ்வின் திருபெயரால் .............

சுமார் 100 ஆண்டு காலத்தில் பேரழிவுகளால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் . பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அழிந்துள்ளன. சுமார் 7-8 ஆண்டுகளாக , உலகில் பரவலாக பூகம்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.பூகம்பம், நிலநடுக்கம் ஏற்படுவது போல், கடலுக்கடியிலும் இது போல் ஏற்படும். நிலப்பகுதியில் எரிமலைகள் இஉர்ப்பதுபொல் கடலுக்கடியிலும் எரிமலைகள் இருக்கிறது. இவை வெடிப்பதால் அலைகள் பயங்கரமாக எழுந்து பல ஊர்கள் விழுங்கிக் கொண்டு சேதங்களையும், சோகங்களையும் ஏற்படுத்துகிறது.


இந்த பேரழிவுகள் முன்னாள் பல இறைத் தூதர்களின் காலத்திலும் நடைப் பெற்றிருக்கிறது. குர்ஆன் ஷெரீபில்  கடல்களைப் பற்றி 37 இடங்களிலும், மலைகளைப் பற்றி 33 இடங்களிலும், வானம், பூமி பற்றி 200க்கு மேற்பட்ட இடங்களிலும், காற்றைப் பற்றி, மழையைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

இவைகள் மூலம் அழிவுகள் ஏற்பட்ட விபரமும் ஏன் அழிவுகள் ஏற்படுகிறது என்பதை பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அழிவுகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதையும் குர்ஆனில் காணலாம்...

பிரபஞ்சம் இதில்தான் எழு வானங்களும், பூமியும் இருக்கிறது. எழு வானங்கள், கிரகங்கள் நட்சத்திரங்கள் சந்திரன் சூரியன் இப்படி பல்வேறு படைப்புகள் கொண்ட பிரபஞ்சத்தில் , இந்த பூமி ஒரு புள்ளி அளவு என்று கூட கூற முடியாது . ஆனால் நமக்கு இந்த பூமி எவ்வளவு பெரியதாகத் தெரிகிறது பார்த்தீர்களா? அப்படியானால் கோடிக்கணக்கான படைப்புகளுக்கு உரியவனான அல்லாஹ்வி ஆற்றல் எத்தகையது என்பதை எண்ணிப் பாருங்கள். இவ்வளவு ஆற்றல் மிக்க அல்லாஹ்வின் ஆக்கத்தை எண்ணி அவனைப் போற்றிப் புகழ கடமைப்பட்டுள்ளோம்.

இன்று நடக்கும் லேசான பூமி அதிர்ச்சியைக் கண்டு வீட்டை விட்டு வெளியில் ஓடும் மக்கள், அந்த வெட்ட வெளி ஆடாது, அசையாது, பிளக்காது என்று எண்ணிக் கொண்டார்களா? பூமி வெடிக்கிறதே, அது மிகப்பெரிய வெடிப்பாகப் பிளக்கலாம். அப்போது அந்தப் பிளவுக்குள் மனிதன் சிக்கிக் கொள்வானே, என்ன செய்ய இயலும்? எப்படித் தப்பிக்க முடியும்? யார் காப்பாற்றுவார்கள்?

அநியாயம் செய்ததால், அழிவு நிகழ்ந்தது

''மனிதர்களுக்கு இக்குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் விவரித்துள்ளோம். ஆனால் மனிதனோ தர்க்கம் செய்து கொண்டு இருக்கிறான் .'' [18..53]

வாழும் வழிமுறைகளைக் காட்டியுள்ள வல்ல அல்லாஹ்   தீமைகளை விவரித்து, நரகம் சுவனத்தைப் பற்றி சொல்லி ஆசைகளையும், பயத்தையும் காட்டி, நடந்தவைகளைக் கூறி எச்சரித்து, நாளை நடக்க இருப்பதையும் எச்சரித்து, குழந்தையிடம் கூறுவதைப் போல் நளினமாகக் கூறுகிறான் அல்லாஹ் . எதையும் எடுத்துக் கொள்ளாத மனிதன் வேதனை வந்தபின் வருத்தப்படுகிறான்.

நூஹ்,ஹூத், சாலிஹ், லூத் ஆகிய இறைத் தூதர்களின் கூட்டத்தார் அநியாயம் செய்ததால் தண்டிக்கப்பட்டார்கள். அவர்கள் தண்டிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகவில்லை. அவர்களின் அழிவை நினைத்துப் பாருங்கள். உண்மையை உணருங்கள். நீங்கள் அளந்து கொடுப்பதில் மாறு செய்யாதீர்கள் என்று ஷூஐப்  நபியின் கூட்டத்தாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அந்த மக்கள் அந்த  எச்சரிக்கையை எள்ளி நகையாடினார்கள். அதனால் அநியாயம் செய்தவர்களை இடி முழக்கம் பிடித்துக் கொண்டது.    

அவர்கள்  அவர்களுடைய வீட்டில் தலைகுப்புற வீழ்ந்தவர்கலாகக் கிடந்தார்கள். இவ்வாறெல்லாம் முன்பு நிகழ்ந்த பல நிகழ்வுகளை அல்லாஹ்  நினைவுப் படுத்துவது மனிதன் திருந்தி வாழ்வதற்குத்தான்.

''எத்தனையோ ஊரார்கள் மிக்க பலசாலிகளாக இருந்தும், அவர்களை நாம் அழித்து விட்டோம். அவர்களுக்கு உதவி செய்வோர் ஒருவரும் இருக்கவில்லை.''  [அல்குர்ஆன்  47..13]

ஆக எந்த ஊரும் வீடும் , பூகம்பத்தாலோ, புயலாலோ, கடல் அலைகலாலோ, அழிக்கப்பட்டதென்றால் , அங்கே அநியாயங்கள் நடந்திருக்கிறது. அது எல்லையை கடந்து விட்டது. அல்லாஹ்வின் கோபம் ஏற்படும் அளவிற்கு நடந்திருக்கிறது என்பதுதான் உண்மை.

'' அக்கிரமக்காரர்கள் வாழ்ந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்  . அதனுடைய முகடுகள் இடிந்து குட்டிச் சுவராகிக் கிடக்கின்றன. எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன. எத்தனையோ  மாடமாளிகைகள் பாழாய்க்கிடக்கின்றன .'' [அல்குர்ஆன்  22..88]

'' நீர் காணும் மலைகளை அவை உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள் . அவை மேகத்தைப் போல் பறந்தோடும்.'' அல்குர்ஆன்  27..88

பூகம்பமாவது, பூமி அசைவதாவது என்று எண்ணி இறைவன் மறந்து வாழ்வோருக்கு எச்சரிக்கையே இவ்வசனங்கள். ஆங்காங்கே நடைபெறும் பூகம்பங்களும், கடல் கொந்தளிப்புகளும் அந்த எச்சரிக்கையின் எடுத்துக்காட்டுகளே.  கடல் அரிப்பு என்று சுவர் எழுப்புகிறார்கள். இன்று கடல் அலைகள் பல ஊர்களை கடலுக்குள் இழுத்துக் கொண்டு விட்டது  . ஆம்! ஊர்களில் கடல் நீர்  நிரம்பி ஊர் கடல்நீராகி விட்டது.

குர்ஆனில் அற்புத வசனத்தை ஆராய்ச்சி செய்தால், நடக்கும் நிகழ்வுகள் குர்ஆன் வசனங்களுடன் ஒத்துப் போவதை அறியலாம். மனிதன் கடலுக்கு சுவர் எழுப்புவதை விட, தன்  தவறுகளுக்கும், அட்டூழியங்களுக்கும், அநியாயங்களுக்கும், பாவங்களுக்கும், ரவுடித்தனங்களுக்கும் சுவர் எழுப்புவதுதான் அறிவுடைமை ஆகும்.

'' மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட வினையின் காரணமாக, கடலிலும், தரையிலும், தீமைகள் தோன்றி விட்டன . அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் வினைகளில் சிலவற்றை, அவர்கள் அனுபவிக்கும்படி செய்கிறான்.''       [அல்குர்ஆன்  -30..41]

வானங்களும், பூமியிலுமுள்ள எல்லாவற்றையுமே இறைவன் தன்னுடைய அருளால் உங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறான். சிந்தித்து ஆராயும் மக்களுக்கு நிச்சயமாக இதில் படிப்பினைகள் இருக்கின்றன.
அல்குர்ஆன்  -45..13]

நடந்தவை நமது சிந்தனைக்கு.......  இன்ஷாஅல்லாஹ்  இன்னும் தொடரும்
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ்  மிக விரைவில் தொடர்ச்சி......................        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!