புதன், மே 13, 2015

இனிக்கும் நுனி நாக்கு !

அல்லாஹ்வின் திருபெயரால் ..............
இந்த உலகம் ஒரு மாய உலகம் . ஒவ்வொரு விடயமும் மாயமாகத்தான் இருக்கிறது. மாயமான உலகத்தில் , மனிதன் மயங்கி போய்விட்டான் . மாயக்காரன் ஷைத்தான் மயக்கிவிட்டான். இன்னும் மனிதன் மயக்கத்தில் தான் இருக்கிறான். அவனின் புறக் கண்கள் திறந்திருக்கின்றன. ஆனால் , அவனின் அகக் கண்கள் முடியிருகின்றன.

மனிதன் பறவைகளைப் போன்று விண்  முட்டப் பறக்கக் கற்றுக் கொண்டான். மீன்களைப் போன்று ஆழ்கடலில் நீந்தத் தெரிந்துக் கொண்டான். ஆனால் அவனுக்கு எதிரிலுள்ள மனித மனதுள் தோன்றும் எண்ண  ஓட்டங்களை மட்டும், அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது ஆழம் காண முடியாத பாதாளமாக அவனுக்குத் தோன்றுகிறது.


விருந்தாளி வருவதைக் கண்ணுற்ற வீட்டுக்காரன்,  'வாங்கோ! வாங்கோ! என்ன வெகு நாளாகக் காணோம்? எங்களையெல்லாம் மறந்துவிடீர்களா என நினைத்தேன். சுடுதண்ணீரைக் காலில் ஊற்றியது போல், வந்ததும் வராததுமாக திரும்ப எண்ணாமல், நான்கைந்து நாட்கள் தங்கிச் செல்ல வேண்டும் ' என்று மூச்சுவிடாமல் பேசி வாய்குளிர  வரவேற்கிறார். வரவேற்பு பலமாக இருப்பதைக் கண்ட விருந்தாளி அகங்குளிர்ந்து விடுகிறார். ஆனால் ,  'தெண்டம்! பணமில்லாத நேரத்தில் வந்திருக்கிறதே, சீக்கிரம் திரும்பித் தொலைக்காதே! சோறுகண்ட இடம் சுவர்க்கம் என்றல்லவா உட்கார்ந்துவிடும். சரியான கழுத்தறுப்பு! ' என்ற ரீதியில் சுழலும் வீட்டுக்காரரின் மன ஓட்டத்தை விருந்தாளி உணர்வதில்லை.

'வாருங்கள்! வாருங்கள்! நல்ல சரக்கு, நீங்கள் வந்தாலும் வருவீர்களென்று எடுத்து வைத்தேன். லாபமில்லாவிட்டாலும் பரவாயில்லை, உங்கள் போன்ற வாடிக்கையாளர்கள் கிடைப்பார்களா? என்று வியாபாரிகளின் நாவு, சரக்கு வாங்க வந்தவரைக் கண்டவுடன் கூவுகிறது. ஆனால்,  'இந்த மட்டமான சரக்கை தலையில் கட்டுவதற்கு சரியான ஏமாளி மாட்டினான். இந்த ஆளிடம் கணிசமாகக் கறந்துவிட வேண்டும்' என்று வியாபாரிகள் மனம் லாபக் கணக்குப் போடுவது வாங்க வந்தவருக்கு தெரிவதில்லை.



''எவ்வளவு அழகாக இருக்கிறாய்? ஊர், உலகத்தில் எத்தனையோ பெண்கள். ஆனால் உன்னைப் போன்று எவரும் இல்லையே! என்று கூறும் கணவனின் வார்த்தைகளைக் கேட்டு  மனம் நெகிழ்ந்து நிற்கிறாள் மனைவி. ஆனால்,  'என்ன செய்வது ? இவளை சரிக்கட்டுவதற்கு இப்படியெல்லாம் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது.  அழகாக இல்லை என்று இவளிடம் சொன்னால் , ஒரு பெரிய பூகம்பமே நிகழ்ந்து விடாதா, என்ன? என்று கணவனின் மனம் பேசுவது அந்த அபலையின் காதுகளுக்கு கேட்பதில்லை.

அகத்திலுள்ளதை  அறியும் ஆற்றல், அந்த  'அல்லாஹ் ' ஒருவனுக்கே உண்டு. இக்கருத்தை இறைவன் மட்டும் கூறவில்லை அணுவையும் பிளந்து அதியற்புத திறன்களை வெளிப்படுத்தும் அறிவியல் உலகமே ஒப்புக் கொள்கிறது.

நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் உள்ளத்து இயக்கம் பற்றிக் குறிப்பிடும்போது,  'ஆதமின் சந்ததியில் உள்ளங்கள் இறைவனின் விரல் களில்  நின்றும் இரு விரல்களுக்கிடையே இருக்கின்றன. அவன் விரும்பியவாறு அவைகளைத் திசை திருப்புகிறான் ' என்று கூறி மன இயக்கம் இறைவனின் பிடியிலுள்ளது என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். திறந்த வெளியில் பறந்து கொண்டிருக்கும் ஒரு துரும்பைப் போன்றது உள்ளம். அதைக் காற்று இப்பக்கம், அப்பக்கம் புரட்டிக் கொண்டேயிருக்கிறது என்று உவமை படைத்து, இறைக்காற்று எப்பக்கம் திரும்புகிறதோ, அப்பக்கம் அந்த உள்ளம் திரும்பிக் கொண்டேயிருக்கிறது என்று உணர்த்தினார்கள்.

கையில்  எவ்வித பிணைப்புமில்லாத ஒரு சிறு கருவியை வைத்துக் கொண்டு, டிவியில் தோன்றும் திரைக் காட்சியைத் திருப்பும் ஆற்றல் பெற்ற மனிதன், கண்ட்ரோல் அறையில் அமர்ந்து கொண்டு, கணக்கற்ற மைகளுக்கு அப்பால் விண்ணில் உலாவிவரும் விண்வெளி ஓட்டங்களையும் திசை திருப்பும் ஆற்றல் படைத்த மனிதனை, அவனைப் படைத்த இறைவனுக்கு அவன் மனதை திசை திருப்ப திறமை இருக்காதா?

எனவேதான்,  'உள்ளங்களை உருண்டோடச் செய்யும் எம் இறைவா! எண்களின் உள்ளங்களை உனது பணி  செய்வதில் நிலைப்படுத்தி அருள்வாயாக! என்று அடிக்கடி நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் பிரார்த்தனை புரிவார்கள். உள்ளும், புறமும் ஒன்றாக அமையப் பெறுவது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள், 'நன்றி பாராட்டும் நல்லுள்ளம், சதாவும் இறைவனை தியானிக்கும் நாவு, துன்பத்திலும் துவளாத உடல், தனது  கற்பு, கணவனின் உடமைகளில் மோசடி செய்யாத மனைவி ஆகிய நான்கு செல்வங்களும் வழங்கப் பெற்றவர் ஈருலக பாக்கியங்கள் அனைத்தும் பெற்றவராவார்' என்று நவின்றுள்ளார்கள்.

ஒரு  முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி போன்றவனாவான் என்று நபிகள் நாயகம்  [ஸல்] அவர்கள் நவின்று , உள்ளொன்று, புறமொன்று இல்லாதவரே உண்மை முஃமின் என்று உணர்த்தினார்கள். நாமும் ,நினைப்பும், நாவும் ஒன்றுபட்டவர்களாக வாழ முயலுவோமாக....
ஒரு சிறிய குறிப்பு  / தங்களின் பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்துக்கொள்ளவும் . மறக்க வேண்டாம்...
யா அல்லாஹ் ! உள்ளத்தைத் திருப்புவோனே எங்கள் உள்ளத்தை தீனுல் இஸ்லாத்திலே நிலைத்திருக்க செய்வாயாக!!!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
நன்றி.. நர்கிஸ்/ மௌலவி . அல்ஹாஜ் . O .M . அப்துல் காதிர் பாகவீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!