திங்கள், மே 11, 2015

வெற்றிகரமான கணவர்

கணவனும், மனைவியும் ஒன்றாக சுவனம்
நுழைய வேண்டும் ! 
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்.........

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிமே சமூகத்தின் வெற்றிகரமான கணவராகவும் நல்ல மனைவியின் நேசத்திற்குரியவராகவும் திகழமுடியும். இஸ்லாமின் நேரிய வழிகாட்டுதலின் காரணமாக மனைவியிடம் மென்மையாகவும், மிருதுவாகவும் நடந்துகொள்வார். நற்குணங்களால் பின்னப்பட்டுள்ள இஸ்லாமிய வாழ்வியல் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார். மனைவியின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து, அவளது நியாயமான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அதை நிறைவேற்றுவதில் தனது முழு ஆற்றலையையும் வெளிப்படுத்துவார். இதற்கிடையில் பெண் கோணலான எழும்பினால் படைக்கப்பட்டவள். அவளை முழுமையாக சீர்படுத்துவது அறவே சாத்தியமற்றது என்பதையும் மறந்துவிடமாட்டார்.


மனைவியிடம் விவேகத்துடன் நடந்துகொள்வார் 

உண்மை முஸ்லிம், மனைவியிடம் அறிவுப்பூர்வமாகவும் கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டும். மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவளது குடும்பத்தார் எவரையும் அவளுக்கு முன் தவறாகப் பேசக்கூடாது. அவளது உறவினர் பற்றி அவளது இதயத்தைக் காயப்படுத்தும்படியான எந்த வார்த்தையையும் பேசிடக்கூடாது என்பதில் கணவன் கவனமாக இருக்க வேண்டும். அம்மனைவியும் கணவனின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவருக்கு நோவினைதரும் எந்தக் காரியத்தையும் செய்துவிடாமல், அவரது குடும்பத்தாருக்கு எவ்வகையிலும் தீங்கிழைத்து விடாமல் நடந்துக் கொள்ள வேண்டும்.

கணவர் தன்னிடம் மனைவி வெளிப்படுத்திய ரகசியங்கள் எதையும் பகிரங்கப்படுத்தக் கூடாது. இதில் ஏற்படும் கவனக்குறைவும் அலட்சியமும் பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே பிரச்சனைகளின் எரிமலையை வெடிக்கச் செய்து அவர்களிடையே நிலவும் அன்பொளியை  அணைத்துவிடுகிறது . புத்திசாலியான முஸ்லிம் இவ்வாறான சூழல்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். எல்லா நிலையிலும் இஸ்லாமின் தூய ஒழுக்கங்களை பின்பற்ற வேண்டும்.

மனைவியின் குறைகளை சீராக்குவார்

மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம் தனது மனைவியின் கல்வியறிவிலோ நடத்தையிலோ ஏதேனும் குறைகளைக் கண்டால் அவளிடம் அறிவார்ந்த முறையில் மென்மையாக நடந்து,  அவளது குறைகளைக் களைந்து, அவளைப் செம்மைப்படுத்துவதில் ஆர்வம் கொள்ள வேண்டும். அவளைப் பண்படுத்தும் முயற்சியில் அவளிடம் ஆர்வக்குறைவோ வெறுப்போ வெளிப்பட்டால் அதை மென்மையாகவும் புத்திக் கூர்மையுடனும் எதிர்கொள்ள வேண்டும்.

எக்காரணத்தை முன்னிட்டும் பிறருக்கு மத்தியில் அவளைக் கண்டிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்ணை கடுமையாகப் பாதிக்கும் விஷயம் என்னவெனில், அவளைத் தண்டிப்பதை பிறர் பார்ப்பதும், அவளைக் கண்டிப்பதை பிறர் கேட்பதும்தான். இறையச்சம் உள்ள முஸ்லிம் பிற மனிதர்களைவிட உணர்வால் மிக நுட்பமானவர். அவ்வாறே மற்றவர்களின் உணர்வுகளையும் மிக அதிகமாக மதிப்பார்.

பெற்றோர், மனைவிக்கிடையே சமத்துவம் பேணுவார் 

நற்பண்புள்ள முஸ்லிம் தனது பெற்றோர் மற்றும் மனைவிக்கிடையே சமநிலை பேணுவதை நன்கறிவார். இருவரில் எவருக்கும் அநீதி இழைத்துவிடாமல் , அவ்விருவருடனான உறவில் சமநிலை பேணி, பெற்றோருக்கு நோவினை அளிக்காமலும்  , மனைவிக்கு அநீதி இழைத்து விடாமலும் விவேகத்துடன் நடந்துகொள்வார்.

பெற்றோர்களிடம் நல்ல முறையில் நடந்து , உபகாரம் புரிந்து அவர்களது கடமையை நிறைவேற்றுவார். அவ்வாறே மனைவியின் கடமைகளையும் பூரணமாக நிறைவேற்றுவார். பெற்றோருக்கு உபகாரம் செய்வதாலும் அவர்களைப் பேணுவதாலும்  மனைவியை புறக்கணித்துவிட கூடாது .

உண்மை முஸ்லிம் இறையச்சமுடையவராக இருப்பதால் இவ்வாறு சமநிலை மேற்கொள்வதில் அவருக்கு சிரமம் ஏதுமில்லை. மேலும் அவர் இஸ்லாமின் மேன்மையான  நற்பண்புகளைக் கொண்டிருப்பார். அவரது மார்க்கம் பெற்றோர், மனைவியிடையே எவ்வாறு நீதமாக நடந்து அவர்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு குரிய சரியான அந்தஸ்தை அளிக்க வேண்டும் என்பதை அவருக்குப் போதித்துள்ளது. எனவே அதைப் பேணி நடப்பார்.

மனைவியை செம்மையாக நிர்வக்கிப்பார் 

இவ்வாறான உயரிய பண்புகள் மற்றும் நல்லுறவின் மூலம் முஸ்லிம் மனைவியின் இதயத்தில் ஆட்சி செய்வார்.  அவளும் அவருக்குப் பணிந்து, அவரது எந்தக்  கட்டளைக்கும் மாறு செய்யமாட்டாள் . முஸ்லிமான கணவருக்கு மார்க்கம் நற்பண்புகளை கற்றுக் கொடுத்து பல தகுதிகளையும் அளித்து, பல சட்டங்களையும் வகுத்துக் கொடுத்திருப்பதினால் அவரே பெண்ணை நிர்வகிப்பவராக இருக்கிறார்.

[ஆண் , பெண் , இரு பாலாரில் ] ஆண் பாலாரை [பெண் பாலார் மீது] அல்லாஹ்  மேன்மையாக்கி வைத்திருப்பதுடன், [ஆண் பாலார்] தங்கள் பொருள்களை [பெண் பாலாருக்கு ]ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்..........
அல்குர் ஆன் 4..34]

இந்த நிர்வகிக்கும் அதிகாரத்திற்கென சில கடமைகள் உள்ளன. கணவர் அந்தக் கடமைகள் குறித்து விசாரிக்கப்படுவார்..

அப்துல்லாஹ் இப்னு உமர் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் மகன் [குடும்ப தலைவன்] தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் [மனைவி] தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்க்கப்படுவாள். அடிமை தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.
ஆதாரம்.. புகாரீ , முஸ்லிம்]

இவ்வாறு சமுதாயத்தில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியாக இருக்கிறார். ஒவ்வொருவரும் சமுதாயத்தைப் பற்றி ஏதேனும் ஒரு வகையில் விசாரிக்கப்படுவார். ஏனெனில் இஸ்லாமியப் பார்வையில் வாழ்க்கை என்பது உயர்வான அடிப்படையும், நற்செயலும் இணைந்து ஆக்கப்பூர்வமான ஒன்றாகும். அது வீண்விளையாட்டும் , பரிகாசத்திற்குரியதுமல்ல. மனித வாழ்வின் ஒவ்வொரு வினாடியும் இறைவனின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயமாகும்.

இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும் .................**************************
அல்லாஹ் மிக்க அறிந்தவன்....  
இது சமாதான புறா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!