ஞாயிறு, நவம்பர் 22, 2015

நபி வழி! நல் வழி !

நபி வழி! நல் வழி !

அல்லாஹ்வின் திருபெயரால் .......
நன்றி..மௌலவி  A . முஹம்மது இஸ்மாயீல் பாஜில் பாகவி
நன்றி..நர்கிஸ் .

அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் அறிவிக்கின்றார்கள்  '' அண்ணல் நபியவர்கள்  நாகரிகமின்றி நடப்பவர்களாகவோ, வெளிவேஷம் போடுபவர்களாகவோ , தெருக்களில் இரைச்சல் இடுபவர்களாகவோ, இன்னா செய்தோருக்கு இடர் அளிப்பவர்களாகவோ நடந்து கொள்ளவில்லை  . மாறாக சகிப்புடனும் , பெருந்தன்மையுடனும் நடந்து கொள்வார்கள் .'' ஆதாரம்.. திர்மிதி]

இன்றைய நிலையில் தலைவர்களின் குணமும் , நடப்பும் நகைப்புக்கிடமாகவும் , விரசமானதாகவும் ஆகிக் கொண்டிருக்கின்றது .ஒரு தலைவன் என்றால் அறிவும் , விவேகமும் , தீட்சண்யமும் சிறப்பம்சங்களாக  இருக்க வேண்டும். தூய்மையும் , தன்னடக்கமும் , எதார்த்தமும் , பிறர் நலம் பேணுதலும் கண்டிப்பாக இருக்க வேண்டும் . சொன்னப்படி வாழ்வது, வாழ்ந்து காட்டுவதை சொல்வது இதையே சிறந்த அணிகலனாகக் கொண்டிருக்க வேண்டும் . இந்த லட்சணங்கள் இன்று எந்த தலைவனிடமும் ஒப்புக்கும் எண்ணிப் பார்க்க முடியாததாகும் .


பொய் , பித்தலாட்டம் , ஏமாற்று , அடாவடித்தனம் இவைதான் இன்றைய தலைவனின் முகவரிகள் . மக்கள் தமது தேவைகள் , கஷ்டங்களுக்காக ஒரு தலைவனை நெருங்க முடியாதவாறு , தன்னைச் சுற்றி ஒரு இறுக்கமான வளையத்தை உண்டாக்கிக் கொண்டு , ரவுடிகளையும் , தேச விரோதிகளையும்  , தமக்கு ஆதரவாக வளைத்துப் போட்டு கொண்டு, தம்மை நம்பி ஆதரவளித்த மக்களை நட்டாற்றில் நிறுத்துவதே , இன்றைய தலைவனின் சிறந்த பண்பாக இருக்கிறது .

பணத்தையும் , பந்தாவையும் , வெளிக் கவர்ச்சியையும் மட்டுமே சிறப்பம்சங்களாக பாவித்து, தலைவனைத் தேர்ந்தெடுத்து , பின்னர் ஏமாந்து ஏமாந்து , தன் தலையில் தாமே மண்ணை வாரித் தூற்றிக் கொள்ளும் பரிதாபமே இன்று சமுதாய மக்களிடம் நின்று நிலவுகின்றது . மக்களின் கோழைத் தனமும் , மடமையும் , ஏமாளித்தனமும் இன்றைய தலைவனுக்கு பலம் சேர்க்கும் சிறந்த வாக்குகளாகும் . உயர்ப்பதவி மீது அமர்த்தப்பட்ட தலைவனுக்கும்  சமுதாயப் பற்று இல்லை . அமர்த்திய மக்களிடமும் விழிப்புணர்ச்சி இல்லை.

இத்தகைய சுயநலப் பேய்  பிடித்த தலைவர்களுக்கு எதிர்மறையாகவே நபிகள் கோமான் நம் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் திகழ்கின்றார்கள் .6 வயது பாலகப் பருவத்திலிருந்து , 63 வயது முதுமைப் பருவம் வரை ' மகாரிமுல் அகலாக் ' எனும் ஒப்பற்ற உயர் பண்பாடுகளின்  சிகரமாக திகழ்ந்தவராவார்கள் . அவர்களின் தவம் , தகுதியைப் பார்த்துதான் ஏக இறைவன் அவர்களுக்கு நுபுவ்வத்தை வழங்கியதுடன் , ஈருலக பேரரசராக ஆக்கினான்  அதை அல்லாஹ் இப்படி கூறுகிறான் .
''நிச்சயமாக , நீர் மேலான குணங்களுடையவராக இருக்கின்றீர் ''
[அல்குர் ஆன் ]

உயர்ந்த சீலமிக்க குணமுடையார்தான், தலைமை வகிக்க தகுதியுடையார் என்ற உட்கருத்தை இவ்வசனம் போர்த்திக் கொண்டுள்ளது .
நபிகளாரின் அகமுக இலட்சணங்கள் எவ்வாறிருக்கும் என்ற அறிவிப்பு முந்தைய வேதங்களில் காணப்பட்டுள்ளது என்பதை சத்தியத் திருமறை சான்றுரைக்கின்றது . இந்த சிரப்பியல்புகலெல்லாம் அப்பெருமானரிடம் இருப்பதை வைத்தே அவர் தலைவராக்கப்படுவார் என்பதே அம்முன்னரிவிப்பின்  மூல அம்சமாகும் .

அல்குர் ஆனில் அல்லாஹ் கூறுகின்றான் ..
''அவர் தவ்ராத் இன்ஜீளில் எழுதப்பட்டவராவார். அவர் நன்மையை ஏவி அவர்களை தீயதை விட்டு விலக்குவார். தூய்மையான உணவுகளை [உண்ண] ஆகுமாக்குவார் . கெட்டவற்றை தடுத்து விடுவார் . அவர்களின் சுமைகளை இறக்கிடுவார் .''
ஒரு பெருந்தலைவனிடம் இருக்க வேண்டிய முக்கிய அம்சம்  பணிவும் , தாழ்மை உணர்வுமாகும் . எல்லாம் இருந்து ஒரு தலைவனிடம் இப்பண்பு இல்லையெனில் , அவனிடம் ஏதும் இல்லை- மூளையும் இல்லை - முகராசியும் இல்லை என்பது பொருளாகும்.

நபிகளார் அவர்களின் பணிவுக்கு ஒரு எடுத்துக் காட்டு என்னவென்றால் , தம்மை நேசம் கொள்ளும் ஆண்டான், அடிமை அனைவரின் குடும்பத்தார்களையும் ஒன்றுபோல் கருதுவதாகும். ஏழை பணக்காரன் என்ற பாரபட்சமின்றி, அவர்கள் ஒரு மிடர் பால் அன்பளிப்பு செய்தாலும், அவர்களின் வீட்டு விருந்தை ஏற்றுக் கொள்வதாகும் .
அவர்களின் ஒரு முத்தான பொன்மொழியை கேளுங்கள்..
''பணிவில் தலையானது , நீர் யாரை சந்திக்கின்றீரோ, அவருக்கு நீர் முதலில் சலாம் கூறுவதாகும். உமக்கு சலாம் கூறியவருக்கு உடன் பதிலளிப்பதாகும். எந்த இடத்துக்கு நீர் சென்றாலும், அதன் சாதாரண பகுதியையும் நீர் விரும்பி ஏற்று, அங்கு அமர்ந்து கொள்வதாகும். உம்மை புகழ்ந்து கொள்வதையோ, விளம்பரப்படுத்திக் கொள்வதையோ, பிறர் உதவுவதையோ நீர் எதிர்பாராதிருப்பதாகும்.

அருமை நபியவர்களின் குணம் , குர் ஆனா கவே அமைந்தது என அன்னை ஆயிஷா [ரலி] அவர்கள் தெரிவிப்பதால், குர் ஆன் கூறும் சகிப்பு, பொறுமை , இரக்கம் , தயாலம் , நீதி , வள்ளல் தன்மை , அர்ப்பணிப்பு , சொன்ன வாக்கை காப்பாற்றுதல் , நாகரீக பழக்க முறை , அமைதி தவழும் பேச்சு, புன்சிரிப்பு, போலியற்ற எதார்த்த நிலை, வெட்க உணர்ச்சி இவைகளெல்லாம் பெருமானாரிடம் பளீச்சிட்டவையாகும்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் மலரும் [தொடரும் ]
அல்லாஹ்வுக்காக மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும் இது அன்பான பணிவான வேண்டுகோள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக ...[ஆமீன்]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!