அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, நவம்பர் 29, 2015

பெண்களின் பாதுகாப்புக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் [தொடர்ச்சி ]

பெண்களின் பாதுகாப்புக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் [தொடர்ச்சி ]
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
இன்ஷாஅல்லாஹ் சென்ற இதழின் தொடர்ச்சியைப் பார்ப்போம்..

குரலுக்கும் பர்தா


[அந்நியருடன் பேசும்போது] பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவனுடைய இதயத்தில் [பாவ] நோய் உள்ளதோ அவன் தவறான பாவங்களில் ஆசை கொள்வான்.
அல்குர் ஆன் ]


மேற்கண்ட ஆயத்தில் பெண்ணின் குரலும் மறைக்கப்பட வேண்டியதே என இறைவன் கூறுகிறான். அவசியமான சூழ்நிலைகளின்போது அந்நியருடன் பேச வேண்டியது ஏற்பட்டால், அவர்களிடம் மென்மையான குரலில் பேசக் கூடாது. அவ்வாறு நளினமான முறையில் ஒரு பெண் ஆணுடன் உரையாடும்போது, உடனிருக்கும் ஷைத்தான் அந்த ஆணுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்துகிறான். இன்று வீட்டுக்கு வரும் காய்கறி விற்பவர், பால்காரர் போன்றோரிடம் நமது சகோதரிகள் எந்த நாணமுமின்றி அருகில் நின்று உரையாடுகின்றனர். பொருட்களை வாங்குவதற்காக அவர்களிடம் பேரம் பேசுகின்றனர். இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும்.

பார்வைக்கு பர்தா

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''பார்ப்பவர்கள் மீதும் பார்க்கப்படுவார்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.''
நூல். பைகீ ]

மேற்கண்ட ஹதீஸில் அந்நிய பெண்களை பார்க்கும் ஆண்களையும், பிறர் பார்க்கும் விதத்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டு வெளியே வரும் பெண்களையும்  நபி [ஸல்] அவர்கள் சபித்துள்ளார்கள். ஆண்கள், பெண்களை பார்ப்பது எவ்வாறு குற்றமோ அதேபோல் பெண்கள், ஆண்களைப் பார்ப்பது குற்றமாகும்.
இக்காலத்தில்  பெருபாலான பெண்கள் பர்தாவின் மறைவில் இருந்து கொண்டு, அந்நிய ஆண்களை பார்க்கின்றனர். ஆண்கள் மட்டும் பெண்களை பார்க்கக் கூடாது என்று அவர்கள் கருதுகின்றனர். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அந்நிய ஆண்களின் மீது தாராளமாக பெண்களின் பார்வைபடுகிறது  . து குற்றம் என்ற உணர்வே அவர்களுக்கு ஏற்படுவதில்லை.

ஹஜ்ரத் உம்மு சல்மா [ரலி] கூறுகிறார்கள் ..
''நானும் , மைமூனா [ரலி] அவர்களும் நபி [ஸல்] அவர்களுடன் இருந்தபோது,  கண்பார்வையற்ற சஹாபியான அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் [ரலி] அவர்கள் அங்கு வந்தார்கள். உடனே நபி [ஸல்] அவர்கள் எங்கள் இருவரையும் மறைந்து  கொள்ளும்படி கூறினார்கள். நான் '' அல்லாஹ்வின் தூதரே! அவர் பார்வையற்றவர் தானே'' என்று கூறினேன்.
அதற்கு நபியவர்கள்,  '' நீங்களிருவரும் பார்வையற்றவர்களாகி விட்டீர்களா? நீங்களிருவரும் அவரை பார்க்க மாட்டீர்களா?  என்று கேட்டார்கள் .
நூல் திர்மிதி- அஹமத்]

வந்தவர் பார்வையற்றவாரக இருந்தாலும், தமது மனைவியர் அவரை பார்க்கக் கூடாது என்று நபி [ஸல்] அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே பெண்கள் அந்நிய ஆண்கள்  பார்க்க முடியாதவாறு தங்கள் உடலை மறைத்துக் கொள்வதோடு, அந்நிய ஆண்களை பார்க்காமல் தங்கள் பார்வைகளை தடுத்து கொள்வதும் அவசியமாகும்.

பார்வையை தாழ்த்துங்கள்
''[நபியே!] முஃமினான ஆண்களுக்கு, அவர்கள் தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்.  வெட்க தலங்களை  பேணிக் கொள்ள வேண்டும் என்று கூறுவீராக!''
''[நபியே!] முஃமினான பெண்களுக்கு, அவர்கள் தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்  . வெட்க தலங்களை  பேணிக் கொள்ள வேண்டும் என்று கூறுவீராக !''
அல்குர் ஆன் ]

மேற்கண்ட இறைவசனத்தின் ஆண் -பெண் இருபாலரும் ஒருவரையொருவர் பார்க்காது, தம் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்மென இறைவன் கட்டளையிடுகிறான். அதன் மூலம் அவர்களின் மானம் பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில் இது போன்ற மானக்கேடான செயல்களுக்கு பார்வைத்தான் மூல காரணமாக உள்ளது.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள் ..
''[தவறான] பார்வையாகிறது ஷைத்தானின் விஷம் தேய்க்கப்பட்ட அம்புகளில் ஓர் அம்பாகும். யார் என் மீதுள்ள அச்சத்தின் காரணமாக அதை தாழ்த்திக் கொள்வாரோ, அவருக்கு நான் இப்படிப்பட்ட ஈமானை [இறைநம்பிக்கை] தருவேன். அதன் சுவையை அவர் உள்ளத்தில் உணர்ந்து கொள்வார் என்று அல்லாஹ்  கூறியுள்ளான்''.
நூல்- தப்ரானி]

இஸ்லாம் கூறும் பெண்களின் பாதுகாப்புப் பற்றி இப்பொழுது நீங்கள் புரிந்துக் கொண்டிருப்பீர்கள் !
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!