அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

ஞாயிறு, டிசம்பர் 20, 2015

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்...

நபிவழி ! நல்வழி ! இஸ்லாத்தில் பிறந்த நாள், இறந்த நாள், மற்றும் திருமண நாள்
இப்படி கொண்டாடுவது கூடாது!
அல்லாஹ்வின் திருபெயரால்....................

சிந்திக்க சில வரிகள்...

ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்...

ரபீஉல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமாகும், ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மவ்லிது ஷரிபுகளும்? வெகு கோலாகலமாக பல முஸ்லிம்களின் விடுகளிலும் பள்ளிகளிலும் நடைபெறும். இஸ்லாத்திற்கும் இச்செயலுக்கும் என்ன தொடர்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


நபி(ஸல்) அவர்களை நேசிப்பது வாஜிபாகும் (அவசியமாகும்)

நபி(ஸல்) அவர்களை நேசிப்பது இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றாகும். யார் தன் பிள்ளை பெற்றோர் மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வில்லையோ அவர் உண்மையான முஃமினாக முடியாது.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (அல்-குர்ஆன் 9: 24)

தன் பெற்றோர் இன்னும் பிள்ளை மற்றும் எல்லா மனிதர்களை விடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக தன் பெற்றோர் இன்னும் பிள்ளையைவிடவும் நான் நேசமுள்ளவராக ஆகும் வரை உங்களில் எவரும் உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

(ஒருநாள்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி;) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர மற்ற எல்லா வஸ்துக்களை விடவும் உங்களை நான் மிகவும் நேசிக்கின்றேன் என உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது ஆணையாக உன்னை விட நான் மிக நேசமுள்ளவராக ஆகும் வரை நீ உண்மையான முஃமினாக முடியாது என நபி(ஸல்)  அவர்கள் கூறினார்கள். அதற்கு உமர்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இப்போது நீங்கள் என் உயிரை விடவும் என்னிடத்தில் மிக நேசமானவர்கள் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இப்போதுதான் நீங்கள் உண்மையான முஃமீன் எனக்கூறினார்கள். (புகாரி)

ஆகவே ஒவ்வொரு முஸ்லிமும் நபி(ஸல்) அவர்களை உண்மையான முறையில் நேசிப்பது வாஜிபாகும் (கட்டாயமாகும்).

நபி(ஸல்)  அவர்களை நேசிப்பது எப்படி?

நபி(ஸல்) அவர்களை நேசிப்பதென்பது அல்லாஹ்வும் இன்னும் அவனின் தூதர் நபி(ஸல்)  அவர்களும் ஏவியவைகளை எடுத்தும் தடுத்தவைகளை தடுத்தும் நடப்பதுதான் உண்மை நேசமாகும். இப்படித்தான் நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்

(நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 3: 31)

யார் என்னுடைய இயற்கை பண்புகளை நேசிக்கின்றாரோ அவர் என் வழியை பின்பற்றட்டும், திருமணமும் என் வழியாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனன் ஸயீத் இப்னு மன்ஸுர், சுனனுல் குப்ரா லில் பைஹகி)

ஆகவே நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி அவர்களை உண்மையாக நேசித்த கூட்டத்தில் ஆகுவோம்.

நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களை எப்படி நேசித்தார்கள்?

கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் வாழ்க்கையை அடிதவறாமல் பின்பற்றினார்கள் என்று சொல்வதைவிட நபி(ஸல்) அவர்களின் அசைவுகளையும் பின்பற்றினார்கள் என்பதுதான் பொருத்தமாகும். அதைக் குறிப்பிடும் சில வரிகள் இதோ.

1. நீங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களை எப்படி நேசிக்கக்கூடியவர்களாக இருந்தீர்கள்? என அலி(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கள் எங்களின் பொருட்கள், பிள்ளைகள், தந்தை, தாய்மார்கள் மற்றும் தாகத்தின் போது குளிர் தண்ணீரை விடவும் எங்களிடம் மிகவும் நேசமுள்ளவர்களாக இருந்தார்கள் என விடை பகிர்ந்தார்கள்.

2. மக்கா முஷ்ரிக்கீன்களுக்கு அடிமையாக இருந்த ஜைத் இப்னு ததினா என்னும் நபித்தோழரை கொலை செய்வதற்காக மக்கா முஷ்ரிக்கீன்கள் ஹரத்தின் எல்லையை விட்டும் வெளியே எடுத்துச் சென்ற போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் (அப்போது அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை) கேட்டார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உன்னை உன் குடும்பத்தோடு வாழ விட்டுவிட்டு உன் இடத்தில் முஹம்மதை வைத்து அவரின் கழுத்து துண்டாடப்படுவதை நீ விரும்புவாயா? அல்லாஹ்வின் ஆணையாக நான் என் குடும்பத்தோடு இருந்து நபி(ஸல்) அவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே  நோவினை தரும் ஒரு முள் குத்துவதைக்கூட நான் விரும்பமாட்டேன் எனக் கூறினார்கள். அப்போது அபூ சுஃப்யான் இப்னு ஹர்பு(ரலி) அவர்கள் கூறினார்கள், முஹம்மதை அவரின் தோழர்கள் நேசிப்பது போன்று மனிதர்களில் யாரும் யாரை நேசிப்பதாக நான் பார்க்கவில்லை.

3. நபி(ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற வதந்தி உஹது யுத்தத்தில் பரவிய போது நபித்தோழர்கள் திகைத்துப் போனார்கள். அப்போது ஒரு நபித்தோழி திகைத்துப் போன நிலையில் நபி(ஸல்) அவர்களின் நிலையை அறிந்து கொள்வதற்காக உஹதுப் போர்களத்திற்கு வந்தபோது தன்னுடைய மகன், தந்தை, கணவன் இன்னும் சகோதரர் ஷஹீதாக்கப்பட்ட செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். அவர்களில் யாரை முதலில் பார்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது அந்த நபித்தோழி ஷஹீதாக்கப்பட்டவர்களை கடந்து செல்லும் போதெல்லாம் இவர் யார் என வினவிய போது இது உமது தந்தை, உமது சகோதரர், உமது கணவர், உமது மகன் என்று சொல்லப்பட்டது. அப்படி சொல்லப்படும் போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எங்கே? என்றுதான் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கொஞ்சம் முன்னால் நிற்கின்றார்கள் என நபித் தோழர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்த போது அன்னாரின் ஆடையின் ஓரத்தைப் பிடித்துவிட்டு, பின்பு கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என் தாயும், தந்தையும் அற்பணமாகட்டும், நீங்கள் நலமடைந்து விட்டால் நான் எந்த அழிவைப்பற்றியும் கவலைப்படமாட்டேன் எனக்கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ்(ரலி)  ஆதாரம்: தப்ராணி

இன்னும் ஒரு அறிவிப்பில்: உங்களின் நலத்திற்குப் பின் எல்லா கஷ்டங்களும் மிக லேசானதே என்றார்கள். (ஷீறா இப்னு ஹிஷாம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!