திங்கள், ஜனவரி 25, 2016

நல்லதே பேசுக!

நல்லதே பேசுக!
அல்லாஹ்வின் திருபெயரால் ...
பள்ளிவாசல் நல்லடக்கம் செய்வதற்காக 'மையத்து' [ஜனாஸா] ஒன்று கொண்டு வரப்பட்டிருந்தது. அதைச் சூழ்ந்து நின்ற நாயகத்தின் தோழர்கள் பலவாறு பேசலாயினர்.

இறந்துவிட்ட இந்த மனிதன் மகா அயோக்கியன்'' என்றார் ஒருவர். ''இவன் செய்த அநியாயங்களுக்கு அளவே கிடையாது'' என்றார் இரண்டாமவர். மூன்றாமவரோ, ''இவன் செய்த பாவங்களுக்கு நரகத்தில் கடுந்தண்டனை காத்திருக்கிறது '' என்றார்.


அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்த நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் , தோழர்களின் உரையாடலைக் கேட்டு வேதனை அடைந்தார்கள். அவர்களை அழைத்து  ''ஏன்  இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் '' என்று கேட்டார்கள்.

''அண்ணலாரே! இவன் செய்த பாவங்களும், அநியாயங்களுக்கும் அளவே இல்லை'' என்றார் ஒரு தோழர் . '' சரி! நல்ல செயல் எதையுமே இந்த மனிதன் செய்யவில்லையா? '' என்று பெருமானார் வினவினார்கள் .

''எங்களுக்குத் தெரிந்து எந்த ஒரு நல்ல செயலையும் இந்த மனிதன் செய்தது கிடையாது'' என்றார்கள் சிலர் . அப்போது முதியவர் ஒருவர் எழுந்து சொல்லலானார்..

''அண்ணலே ! அது நல்லதா , கெட்டதா  என்பது எனக்குத் தெரியாது. ஒரு முறை மதீனா நகரை , எதிரிகள் தாக்கும் அபாயம் இருந்தது. அப்போது நகர எல்லைகளுக்குக் காவல் போட்டோம் . பகைவர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த வடக்கு எல்லையைக் காவல் காக்க யாரும் முன் வரவில்லை. அந்தச் சூழ்நிலையில் இதோ இறந்து கிடக்கும் இந்த மனிதன் ,  ''நான் வடக் எல்லைக்குப் போகிறேன்'' என்று கூறிக் கையிலே வாளேந்தி, குதிரையின் மீது பாய்ந்தேறிச் சென்று வடக்கு எல்லையைக் காத்தான்.''

இந்தச் செய்தியைக் கேட்ட நபிகள் நாயகம் [ஸல்] அவர்களின் திருமுகம் மலர்ந்தது. '' நண்பர்களே! இதுவன்றோ சொர்க்கவாதியின் செயல்! மதீனா நகரத்தின்  மற்ற வீரர்களெல்லாம் அஞ்சி நடுங்கிய வேளையிலே, தனது உயிரைத் துச்சமென மதித்துத் தாய் நாட்டிற்காகப் போராடிய இந்தத் தியாகி சொர்க்கவாசியே ஆவார்'' என்று பெருமானார் [ஸல்] அவர்கள் சொன்னார்கள்.

மேலும் அவர்கள் தொடர்ந்து கூறுகையில், '' ஆராய்ந்து அறியாமல் பிறர் மீது குறை கூறிக் கொண்டிருப்பது நல்லவர்களின் செயலாகாது  . அதிலும் இறந்து விட்டவர்களின் குறைகளைக் கூறாதீர்கள்! அவர்களின் நல்ல செயல்களை மட்டுமே  பேசுங்கள்! இறைவனது சித்தத்திற்கு முன் நமது சிற்றறிவு மிகவும் அற்பமானது என்பதை உணர வேண்டும்'' என்று விளக்கிக் கூறினார்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இரண்டு திரை இருக்கிறது. அதில் ஒன்று வெளிப்படையான  திரை இது எல்லோருக்கும் தெரியும்! இன்னொன்று மறைவான திரை அது இறைவன் ஒருவன் மட்டுமே அறிந்தவன். மற்றவர்களுக்கு தெரியக் கூடாது, பார்க்க கூடாது என்று இரகட்சியமாக சிலர் நல்ல அமல்களை செய்வார்கள். தான தர்மங்கள் கொடுப்பார்கள். ஆகவே யாரையும் வெளிதோற்றத்தை வைத்து ஒரு முடிவுக்கு வரக் கூடாது.

அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!