அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், ஜனவரி 19, 2016

நம் குழந்தைகள் ....************

பெற்றோர்கள் அவசியம் படிக்கவும் 
அல்லாஹ்வின் திருபெயரால் .....................
பெருமானார் [ஸல்] அவர்கள் சொன்னார்கள்..  ''ஒரு தந்தை தமது பிள்ளைகளுக்கு வழங்கும் அன்பளிப்புகளில் சிறந்தது ஒழுக்கத்தைவிட மேலான அன்பளிப்பு இல்லை. '' ஆதாரம்.. திர்மிதி]

குழந்தை பாக்கியம் 
மனிதன் தான் பெற்ற சொத்து, சுகங்களில் குழந்தை பாக்கியம் தான் பெரும் பாக்கியம். ஒவ்வொரு குழந்தை பிறக்கும் பொழுதும் அல்லாஹ்வின் அருட்பாக்கியத்தை எண்ணி அகம் குளிர்ந்து, '' இரட்சகா!  நீ எனக்கு ஒரு குழந்தையை ஈந்து  உகந்து, அதை வளர்த்து உனக்கு சிரம் பணியும் நல்லடியாராக ஆளாக்க அருள்புரிந்தாயே, உனக்கே ஆயிரம் கோடி நன்றி'' என புகழ்பாட வேண்டியவனாக மனிதன் இருக்கிறான்.

குழந்தை இல்லாவிட்டால், அந்த பாக்கியத்தை பெற்றுவிட அல்லாஹ்விடம் கையேந்தி மன்றாடிக் கேட்கும்படி திருக் குர் ஆன் தூண்டுகிறது.

குழந்தை பாக்கியம் தாமதப் படக்கூடியவர்கள் தர்காக்களை வலம்  வருகின்றார்கள். விசேஷ வைத்தியர்களைத் தேடி ஆலாய்ப்  பறக்கிறார்கள். ஆனால் குழந்தை உருவாக்கி வெளியாக்கும் இறையோனை மறந்து  போகிறார்கள். அழுது  புலம்பி அப்பேற்றினை  அல்லாஹ்விடம் கேட்காமல் எங்கேயோ செல்கின்றார்கள். முழு ஈமானுடன், அந்தப் படைத்தாளும்  வல்லவனிடம் கேட்டாலல்வா  எண்ணியது ஈடேறும்?

இதோ நபி ஹஜ்ரத் ஜக்கரியா  [அலை] அவர்கள் அல்லாஹ்விடம் குழந்தையைக் கேட்டுப் பெற ஒரு துஆவைக் கற்றுத் தருகின்றார்கள். அவர்கள் அந்த துஆவின் மூலம் தமது 99- வது வயதில் குழந்தைச் செல்வதை பெற்று மகிழ்ந்ததை அல்லாஹ்  தனது இனிய மறையில் எடுத்துரைக்கின்றான். அவர்கள் துஆ இதுதான்..
''இரட்சகா! உனது புறத்திலிருந்து தூய்மையான குழந்தையை எனக்கு வழங்கியருல்வாயாக ! நீயே பிரார்த்தனையை ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றாய்.''[3..38]

இந்த துஆவை இன்றைய காலத்தில் ஆழியா  நெஞ்சத்துடன் கேட்டு வந்தவர்கள் குழந்தையும், குடித்தனமுமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது நடைமுறை சாட்சி.

கருவிலேயே  கொல்லலாமா ?
குழந்தை அல்லாஹ்விடமிருந்து மனிதன் பெரும் சிறந்த அருட்கொடை. குழந்தை உருவாகிய செய்தி பெற்றவருக்கும், மற்றவர்க்கும் என்றும் மகிழ்ச்சியானதாகவே இருக்க வேண்டும். ஒரு குழந்தை வருங்காலத்தில் எப்படிவேண்டுமானாலும் வரலாம்... இந்த எண்ணமும், நம்பிக்கையும் பெற்றவருக்கு இருந்தால்  குழந்தையை கருவில் கொல்லத்  துணிய மாட்டார்கள். ஒரு உயிரை அநியாயமாக  பலி கொடுக்க மாட்டார்கள். ஒரு உயிரின் உயர்வை உணராமல், அதன் வருங்காலம் பற்றி நல்ல எண்ணம் கொள்ளாமல் அதனை அழிக்க  நினைப்பது எவ்வளவு கொடிய பாவம்.

அல்லாஹ்  கூறுகின்றான்..  ''யார் தமது குழந்தைகளை மடமையினால் விபரமின்றி கொல்கிறார்களோ - அவர்கள் பெரும் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டார்கள்.
அல்குர் ஆன்..6..140]

எனவே குழந்தையை மொட்டிலேயே கசக்கி அழிக்க  எண்ணுவது பேதமை மட்டுமல்ல. அல்லாஹ்  வழங்கிய அரும்பெரும் அருட்கொடையை காலில் மிதித்து அவமதிப்பதற்கு சமம். ஒருவன் தந்த அன்பளிப்பை அவனுக்கு முன்னாலேயே அவமதிப்பதை பொறுத்துக் கொள்வானா? அல்லாஹ்  கடுங்கோபத்துடன் கேட்கிறான்..

'' அல்லாஹ்வினுடைய அருள்பாக்கியத்தையா அவர்கள் புறக்கணிக்கிறார்கள்... அவர்கள் வழிகெட்டவர்கள்'' [16..71] என்று அல்லாஹ்  தனது வெறுப்பை காட்டுகின்றான்.

குழந்தை பிறந்ததும் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை தாங்கள் நன்றாக அறிந்திர்பீர்கள்!  குழந்தை பிறந்தவுடன் ஒரு துஆ இருக்கிறது அந்த துஆவை ஓதி  , அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு அந்த குழந்தை காதில் வலது, இடது காதில் பாங்கும், இக்காமத்தும் சொல்ல வேண்டும் என்பது அறிந்த விடயம்!

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பெயர் சூட்டவேண்டும்!
''கியாமத் நாளில் உங்களின் பெயர் கொண்டுதான் அழைக்கப்படுவீர்கள் ... எனவே அழகான திருநாமங்களை சூடிக் கொள்ளுங்கள்'' என நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்..அபூதாவூது]

பின்னர் ஆண்  குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் பிள்ளையானால் ஒரு ஆடும் அறுத்து தர்மம் வழங்கி விட வேண்டும். குழந்தை பேச ஆரம்பித்ததும் முதல் வார்த்தையாக  ''லா இலாஹ இல்லல்லாஹூ என்ற திருக்கலிமாவை அதற்கு கற்றுத் தர வேண்டும். இந்த திருவாசகத்தை குழந்தை கற்றுக் கொண்டுவிட்டால் அதன் பரக்கத்தால் குழந்தை சுலபமாக பேசத் துவங்கிவிடும் என்று ஞான மேதைகள் குறிப்பிடுகின்றார்கள்.

ஹஜ்ரத் உமர்[ரலி] அவர்களைக் காண அப்போது ஒரு முக்கிய பதவியில் இருந்த ஹஜ்ரத் ஆமிர் [ரலி] அவர்கள் , உமர்[ரலி] அவர்களின் வீட்டுக்கு வருகின்றார்கள். உமர் [ரலி] அவர்கள் படுத்திருக்கின்றார்கள். குழந்தைகள் அவர்கள் மீது ஏறி விளையாடிக் கொண்டிருக்கின்றன. ஆமிருக்கு இந்த காட்சி பிரமிப்பு ஊட்டுவதாக இருந்தது. ஹஜ்ரத் ஆமிரின் முகம் சுருங்குவதைக் கண்டு விட்ட ஹஜ்ரத் உமர்[ரலி] அவரது எண்ண  ஓட்டத்தை அனுமானித்து, ''ஆமிர்! உமது பிள்ளைகளுடன் தாங்கள் எப்படி நடந்துக் கொள்வீர்கள்''? என்று வினவுகின்றார்கள். அதற்கு அன்னார் , ''கலீஃபா அவர்களே! நான் வீட்டுக்குள் நுழைந்து விட்டால் வீடே நிசப்தமாகிவிடும். எல்லோரும் ஒவ்வொரு திசைக்கு சென்று பயந்து பதுங்கி விடுவார்கள். என்னை கண்டால் அவ்வளவு பயம் '' என்று கூறுகின்றார் ஹஜ்ரத் ஆமிர் .

''ஆமிர்! நீங்கள் முஹம்மதின் உம்மத்துக்களில் ஒருவராக இருந்தும் அந்த முஹம்மது [ஸல்] அவர்கள் பிள்ளைகளுடன் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது கூட உமக்குத் தெரியாதா?'' என அதட்டுகின்றார்கள்.

குழைந்தைகளுடன் குலாவி மகிழ்வது பெருமானாரின் வழிமுறை. அதுதான் உரிமைப் பரிமாற்றம் என்பதை விளக்குகின்றார்கள் ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள்.

ஒழுக்கமுள்ள கல்வி
குழந்தைகளுக்கு செய்யும் உதவிகளில் அவர்களுக்கு ஒழுக்கம் கலந்த கல்வி புகட்டுவதே பேருதவியானதாகும்  . குழந்தையின் ஒழுக்க மேம்பாட்டுக்காக பெற்றோர் அல்லும் பகலும் அயராது பாடுபட வேண்டும். தமது குழந்தை சிறப்பும் , செல்வாக்கும் பெரும் வரை சிந்தனை கனவிலும் , நனவிலும் இருந்து கொண்டிருக்க வேண்டும்.

''ஈமான் கொண்டோரே! உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றுங்கள்.'' [66..6] அல்லாஹ்  எச்சரிக்கின்றான்.
நரகத்திலிருந்து நமது குழந்தை தப்பிக்க மார்க்க கல்விதான் பெருந்துணையாக அமையும்.

பெருமானார் [ஸல்] அவர்கள் தந்தை பிள்ளைக்கு வழங்கும் அன்புக் காணிக்கைகளில் சிறந்தது நல்லொழுக்கம் வாய்ந்த வாழ்க்கை எனக் குறிப்பிடுகின்றார்கள்.
தந்தை  குழந்தைக்கு வழங்கும் உலகக் கல்வியோ, மற்ற தொழில் கல்வியோ அதற்கு சேர்த்து வைக்கப்படும் திரண்ட சொத்துக்களோ அக்குழந்தையை தடம் புரள வைத்து விடலாம். அதனுடைய தலை விதியை மாற்றி, நரக விதியாக மாற வழிவகுத்து விடலாம். ஆனால் அக்குழந்தைக்கு கர்ப்பிக்கப்படும் ஒழுக்கம், பண்பாடு இவைகளால் ஈருலகிலும் அதற்கு வெற்றி நிச்சயம். கௌரவமும், வரவேற்ப்பும் உறுதி.

மேலும் ஹஜ்ரத் [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''மனிதன் இறந்துவிட்டால் மூன்று அமல்கள்  மற்றவை எல்லாம் துண்டித்துப் போகின்றன.  அந்த மூன்றின் நன்மைகள் தொடர்ந்து வண்ணமிருக்கின்றன.1. நிரந்தர தர்மம் 2.அவர் விட்டுச் செல்லும் நன்மை பயக்கும் கல்வி 3. அவருக்காக என்றும் துஆ செய்த வண்ணமிருக்கும் அவரது நன்மக்கள் .
ஒழுக்கமும், உயர் கல்வியும் போதிக்கப்பட்ட பிள்ளைகள் பெற்றோர் இருக்கும் பொழுதும், இறந்த பின்னும் அவர்களுக்காக புண்ணியம் சேர்ப்பர் . ஒழுக்கக் கேடான பிள்ளைகள் மூலம் இறந்தவருக்கு எந்த நன்மையும்  சேரப் போவதில்லை. ஏன்  பெற்றோரின் ஜனாஸா தொழுகையில் கூட கலந்து கொள்ள துணிவு இல்லாமலோ அல்லது கலந்தும் என்ன ஓதுவது என்று தெரியாமல் அவர்கள் நிற்கும் அவலம் நேரிடலாம்.

இதற்காகவா இந்தக் குழந்தைகளை பெற்றோம்,, வளர்த்தோம்,, ஆளாக்கினோம்,, மார்க்க அறிவின்றி, ஒழுக்கசீலமின்றி அப்பிள்ளையை வளர்த்ததன் மூலம் இறந்தபின் அவர்கள் மூலம் கிடைக்கப் பெரும் மறுஉலக பாக்கியத்தை இழக்கலாமா? பெற்றோர்களே ! நன்றாக சிந்திக்கவும்...
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!