சனி, ஏப்ரல் 23, 2016

பேணுதலான வாழ்க்கை !

பேணுதலான வாழ்க்கை !
அல்லாஹ்வின் திருபெயரால் ........

ஓர் ஊரில் ஒரு வாலிப வயதுடைய மௌலவி ரொம்பவும் பேணுதலுடன் வாழ்க்கை நடத்தி வந்தார்கள். ஒரு நாள் அவருடைய தாயார் அவர்கள் தம்முடைய மகனிடம் ''எனக்கு நூறு ரூபாய் அவசியம் தேவைப்படுகின்றது,, எனவே, நகையை அடகு வைத்து விட்டு பணத்தை வாங்கி அத்தேவையை பூர்த்தி செய்யலாமென்று எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள். இச் செய்தியைக் கேட்ட மௌலவி அவர்கள்  ''என்னுடைய அருமை தாயார் அவர்களே! நகையை அடகு வைத்து பணம் வாங்கினால்  வட்டி கொடுக்கும்படி ஏற்படும் .


நமது மார்க்கத்தில் வட்டி வாங்குவதும் வட்டி கொடுப்பதும் ஹராமாக்கப்பட்டிருகிறது.  அது மாபெரும் குற்றமாகும். குர்ஆன் ஷரீபிலும் ஹதீதுகளிலும் இக்குற்றத்தைக் குறித்து கடுமையாகக் கண்டிக்கப்பட்டிருகிறது. இக்குற்றத்தை எவர் செய்தாரோ அவர் இம்மையிலும் மறுமையிலும் கடும் தண்டனைக்கு ஆளாவார் என்றும் நமது மார்க்கம் தீர்ப்புக் கூறுகின்றது. எனவே இம் மாபெரும் குற்றம் செய்வதை விட்டு அல்லாஹ்  நம்மை பாதுகாப்பானாக! '' என்று தனது தாயார் அவர்களிடம் அழுத்தமாகவும் நளிமையாகவும்  கூறி விட்டு  ''உங்களுக்கு அவசியம் பணம் தேவையென்றால் அந்த நகையை விற்று விடுங்கள். அல்லாஹ்  நாடினால் இதைவிட மேலானதைத் தரப் போதுமானவன் '' என்று அவ்வாலிப மௌலவி கூறினார்கள்.

எனவே தம்முடைய மகன் சொன்னப்படி அந்நகையை விற்றுவிட்டு அந்த தேவையை நிறைவேற்றினார்கள். அந்நகையை ரூபாய் 260-க்கு விற்று நூறு ரூபாய் தேவையை நிறைவேற்றி பாக்கி ரூபாய் 160- கைவசம் வைத்துக் கொண்டார்கள். சிறிது நேரத்திற்குப் பின்  மௌலவி  அவர்களின் வீட்டிற்கு ஒரு பெண் ஒரு நகையை கொண்டு வந்து  ''இதை விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? '' என்று கேட்டாள் . அந்நகையின் விலை ரூபாய் நூற்றி நாற்பது என்றும் சொன்னாள் . மௌலவி அவர்களின் தாயார் அவர்கள் அந்நகையை வாங்கிக் கொண்டார்கள். அவர்கள் 260- ரூபாய்க்கு விற்று நகையைப் போன்றுதான் அந்தப் பெண் கொண்டுவந்த நகையும் இருந்தது. ஆனால், அதைவிட கொஞ்சம் சிறியதாக இருந்தது,, பார்ப்பதற்கு அவ்வளவு வித்தியசாமாகத் தெரியவில்லை.

நகையை அடகு வைத்தால் வட்டி கொடுக்கும் பாவம் உண்டாகுமே என்று பயந்து நகையையே விற்று விட்டதால் தேவைப் பூர்த்தியானது மட்டுமல்ல நகைக்கு நகையும் கிடைத்து விட்டது. மேலும் 20/- ரூபாய் மீதம் ஆகிவிட்டது. எவனொருவன் அல்லாஹ்வை பயந்து நடந்தானோ அவனுக்கு அல்லாஹ்  மறைமுகமான உதவிகளைச் செய்வான் என்பதில் சந்தேகம் உண்டா?
நகைகளை பேங்கில் அடகு வைத்து வட்டிக்கு பணம் வாங்குபவர்கள் மேற்கண்ட சம்பவத்திலிருந்து படிப்பினை பெறட்டும். !
அல்லாஹ்  மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!