புதன், ஆகஸ்ட் 17, 2016

எட்டுவகை சொர்க்கத்தில் எட்டுவகையினர் புகுவார்கள்..


அல்லாஹ்வின் திருப்பெயரால்..........
கண்ணியமிக்க இஸ்லாமியர்களே! இறைவன் மனிதனின் செயல்களனைத்தையும் உற்றுநோக்குகிறான். மனிதனின் எச்செயலும் இறைவனின் கண்காணிப்பை விட்டும் தூரமாகி விடாது. மனிதனின் வெளிக்கோலத்தை இறைவன் கவனிப்பது கிடையாது. அவனின் [மனிதன்] உள்ளத்தையே உற்று நோக்குகிறான். இதனாலேயே உள்ளத்தால் உயர்ந்தவனே  உங்களில் மிகச் சிறந்தவன் என்று பெருமானார் [ஸல்] அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஒவ்வொரு செயலும் அவனின் எண்ணத்தைப் பொறுத்தே சிறப்புறுகின்றது. என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இறைவன் தன்  திருமறையில்  நிச்சயமாக அந்தரங்க சுத்தியோடு இறைவனைப் பயந்து நடந்த நல்லடியார்களுக்கு  மன்னிப்பும் உயர்ந்த கூலியும் இருக்கிறது என்று குறிப்பிடுகிறான்.


எனவே, இவைகளையெல்லாம் கவனிக்கும்போது உள்ளன்போடும் பக்தியோடும் செய்கின்ற செயல்கள் மட்டுமே இறைவனிடம் உயர்வடைகிறது என்பது புலனாகிறத இல்லையா? அப்படிப்பட்ட அந்த நல்ல உள்ளம் இறைவன் தாங்கும் இல்லமாகும் அப்படிப்பட்ட உள்ளம் கொண்டவர்களை முஃமின் என்றும், வலியுல்லாஹ் இறைநேசர் என்றும் குறிப்பிடுகிறோம். இத்தகைய இறைநேசச் செல்வர்களுக்கு எத்தகைய பயமும் திடுக்கமும் இராது என இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான். நாளை மறுமையிலும் கூட அந்த நல்லடியார்கள் மிக நிம்மதியாளர்களாக இருப்பார்கள். அவர்களின் பட்டோலை வலது கையில் கொடுக்கப்படும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுற்று இருப்பார்கள். இதை இறைவன் தன்  திருமறையிலே மிக அழகாக குறிப்பிடுகிறான்.. இதோ....

எவரின்  பட்டோலை வலது கையில் கொடுக்கப்பட்டதோ  அவர் தனக்கு ஏற்பட்ட சந்தோஷ மிகுதியால் மற்றவர்களிடம் இதோ எனது பட்டோலையைப் படியுங்கள் என்று கூறுகிறார். நான் எனது கேள்வி  கணக்கை சந்திப்பது உறுதி என்று உண்மையாகவே நம்பியிருந்தேன். [என்றும் கூறுவார்] எனவே அவர் திருப்திகரமான சுகவாழ்க்கையில் இருக்கிறார். உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கிறார்.

மேலும் எவர் தனது  இறைவனின் திருசமுகத்தை  பயந்து மனோ இச்சையை விட்டும் [தன்னைத்] தடுத்துக் கொண்டாரோ [அவர் பாக்கியசாலி] அவர் மேலும் ஸ்தலம் சொர்க்கமாயிருக்கும். அல்குர் ஆன் ]

மேல்கண்ட நல்லடியார்களே  ஜெயசீலர்கள். அவர்களுக்காக இறைவன் சொர்க்கத்தை உயர்ந்த கூலியாக அளிக்கிறான்.
இறைவன் சொர்க்கத்தை எட்டு வகையாகப் படைத்து அதில் எட்டு வகையினரை பிரவேசிக்கச் செய்கிறான்.

எட்டுவகை சொர்க்கங்கள்!
1.தாருல் ஜலால் '' என்னும் சொர்க்கத்தில் நபிமார்கள் ரசூல்மார்கள் ஷூஹதாக்கள், கொடையாளிகள் முதலியோர்கள்  புகுவார்கள்.
2.''தாருஸ்ஸலாம்'' என்னும் சொர்க்கத்தில் முறைப்படி ஒளுச் செய்து பயபக்தியோடு தொழுத பக்திமான்கள் புகுவார்கள்.
3.''ஜன்னத்துல் மஃ வா '' என்னும் சொர்க்கத்தில் ஜக்காத் கொடுத்தவர்கள் புகுவார்கள்.
4.''ஜன்னத்துல் குல்து '' என்னும் சொர்க்கத்தில் நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கும் தியாகிகள் புகுவார்கள்.
5.''ஜன்னதுன்நயீம் '' என்னும் சொர்க்கத்தில் மனோ இச்சையை அடக்கி நேர்மையாக நடந்த ஜெயசீலர்கள் புகுவார்கள்.
6.''தாருல்கரார் '' என்னும் சொர்க்கத்தில் முறையாக ஹஜ்ஜூ உம்ராச்  செய்த சீதேவிகள் புகுவார்கள்.
7.''ஜன்னத்துல் பிர்தவுஸ் '' என்னும் சொர்க்கத்தில் இஸ்லாத்திற்காக போரிட்ட அறப்போர் வீரர்கள் புகுவார்கள்.
8.'' ஜன்னத்துல் அத்னு '' என்னும் சொர்க்கத்தில் இறைவனால் விலக்கப்பட்டவைகளை  விட்டும் விலகிக் கொண்டு அதைப்பற்றி கிஞ்சிற்றும் சிந்திக்காமல் நாயகம் [ஸல்] அவர்களின் சொல், செயல்படி நடந்த நல்லடியார்கள் புகுவார்கள்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!