புதன், செப்டம்பர் 28, 2016

எது உண்மையான அன்பு?

அல்லாஹ்வின் திருப்பெயரால்....
எது உண்மையான அன்பு?

''[நபியே!] நீர் கூறும் நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களாயின், என்னைப்  பின்பற்றுங்கள்,, அல்லாஹ் உங்களை நேசிப்பான்,, உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்,, மேலும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்கக்  கருணையுடையவனாகவும் இருக்கிறான்.
அல்குர்ஆன் .. 3..31]

ஒருமுறை ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் திருச்சமூத்தில்  ''அல்லாஹ்வின் தூதரே! நான் எனது உயிரைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் தங்களுக்காகத் தியாகம் செய்து விட்டேன்'' என்றார்கள். அப்பொழுது அண்ணல் நபி [ஸல்] அவர்கள்  உமர் [ரலி] அவர்களை நோக்கிக் கூறினார்கள்..  ''தமது பெற்றோர் , குழந்தை மற்றும் அனைத்து மனிதர்களையும் விட உங்களில் எவரும் மிகுதியாக என்னை அன்பு கொள்ளாதவரை எவரும் உண்மையான ஈமான் கொண்டவராக முடியாது'' என்று கூறினார்கள்.
 அதைக் கேட்ட ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் உயிரையும் தங்களுக்கு நான் அளித்து விட்டேன்'' என்றார்கள். அதை கேட்டு அண்ணல் நபி [ஸல்]  அவர்கள்  ''உமரே ! இப்பொழுதுதான் நீர் முழுமையான ஈமானைப் பெற்றுக் கொண்டீர் ,'' என்று புன்முறுவல் பூத்தவர்களாகக் கூறினார்கள்.


அறிவிப்பவர்.. அனஸ் [ரலி] நூல்.. புகாரி]


அன்பர்களே! மேற்கூறிய இறைவசனத்தையும், இறைத்தூதரின் அருள் மொழியையும் சற்று சிந்தித்து பாருங்கள்! நாம் நபி [ஸல்] அவர்கள் மீதும் அன்பிருப்பதாக, பற்று இருப்பதாக கூறி வருகின்றோம். ஆனால் நபி [ஸல்] அவர்கள் ஹஜ்ரத் உமர் [ரலி] அவர்கள் கூறியதைக் கேட்டு என்ன பதில் சொல்லியுள்ளார்கள் என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள்!

ஆனால் நாம் நபி [ஸல்] அவர்களின் மீது அன்பிருப்பதாக கூறி அதற்குச் சான்றாக நாம்  வருடத்தில் ஒருமுறை ஓதி வரும் மவ்லீது இன்னும் பல காரியங்கள்  இவைகளை மேற்கோள் காட்டி  வருகின்றோம். உண்மையான அன்பிற்கு இவைகள் எடுத்துக்காட்டுகளா ஆகிவிடுமா? இப்படித்தான் ஸஹாபாக்கள் செய்தார்களா? சிந்திக்க வேண்டாமா? இப்படியே எவ்வளவு காலம் தான் சொல்லிக் கொண்டே போவீர்கள்?

இதோ உண்மை அன்பின் வெளிப்பாடுகள் காணுங்கள்!

உஹது போரின் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் இறந்துவிட்டனர் என்னும் வதந்தியை காஃபிர்கள் பரப்பி விட்டனர்.  உண்மையில் நடந்தது என்ன?

போரில், அப்துல்லாஹ் பின் கமிய்யா என்பான் அண்ணலாரை வாளால் தாக்கினான். அண்ணலார் அணிந்திருந்த இரும்புத் தோப்பினியின் வளையங்கள் முகத்தில் பதிந்துவிட்டன ,, அதன் காரணமாக அவர்களின் பற்கள் ஷஹீதாயின,, அண்ணலார் பின்புறம் இருந்த ஒரு பள்ளத்தில் வீழ்ந்தனர்.

சாயலில் அண்ணலாரைப் போன்று தோற்றமளித்த மஸ்அப்  இப்னு உமைர் [ரலி] அவர்கள் போரில் இறந்துவிட்டார்கள். இவர்களின் இறப்பை வைத்தே முஷ்ரிக்கீன்கள் அண்ணலார் [ஸல்] இறந்துவிட்டதாக பொய்யைப் பரப்பினர்.

இப்பொய்ச் செய்தியைக் கேள்வியுற்ற உஹது போர்க்களம் நோக்கி ஓர் அன்சாரிப் பெண் விரைந்தோடி வருகிறாள். போர்க்களத்திலிருந்து திரும்பிக்கொண்டிருந்த இப்பெண்ணை மறித்து  ''உன் கணவர் போரில் கொல்லப்பட்டுவிட்டார்'' எனக் கூறுகின்றார்கள். இதைக் கேட்ட அப்பெண் ''அது பற்றி கவலையில்லை,, அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நலமுடன் இருக்கின்றார்களா? எனக் கேட்டு விட்டு விரைவாக நடக்கிறாள்.

வழியில் இன்னும் சிலர்  ''பெண்ணே! போரில் உன் தந்தை இறந்துவிட்டார்,  ''எனக் கூறுகின்றனர். ''நபி [ஸல்] நலமுடன் இருக்கின்றனரா? அதுவே எனக்குப் போதும்;; எனக்கூறி விட்டு விரைந்துச் செல்கிறார்.

மீண்டும் சிலர் வழி  மறித்து, பெண்ணே! உன் தமையன் போரில் இறந்துவிட்டார்'' என்றனர்  'அது பற்றி எனக்கு கவலையில்லை'' எனக்கூறி விட்டு நேரே போர்க்களம் வந்து அண்ணலாரை கண்டதும்  பகலவனைக் கண்ட  தாமரைபோல் அவர் முகம் ஆயிற்று. அண்ணலார் மீது அப்பெண்ணிற்கு அன்பு! இதுவன்றோ உண்மை அன்பு!

ஸஹாபாக்களும், ஸஹாபி பெண்களும்  அவர்களின் உயிரைவிட நேசித்து வந்தார்கள் என்பது நிறைய சம்பவங்கள்  வரலாறுகள் இருக்கின்றன!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!