ஞாயிறு, அக்டோபர் 09, 2016

தவ்பாச் செய்து மீளுதல் ...

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தவ்பாச்  செய்து மீளுதல் ...

அனைத்துப் பாவங்களிலிருந்தும் தவ்பா - பாவமீட்சி பெறுவது அவசியமாகும் என மார்க்க மேதைகள் கூறுகிறார்கள்.

மனிதர்களின் உரிமைகள் சம்மந்தப்படாது, அல்லாஹு தஆலாவின்  கட்டளைகள் விஷயத்தில் ஒருவர், மாறு செய்து பாவம் இழைத்திருப்பாராயின் , அவர் அதனை விட்டுத் தவ்பா செய்து மீளுவதற்கு பின்வரும் மூன்று நிபந்தனைகள் உள்ளன. 1] தாம் இதுவரை செய்து வந்த பாவத்தைவிட்டு முற்றிலும் நீங்கி விடுவது [2] தமது பாவம் குறித்து உண்மையில் வருந்திக் கைசேதமுறுவது [3] இனிமேல் எப்பொழுதும் அப்பாவத்தைச் செய்வதில்லை என உறுதி பூணுவது.


மனிதர்களின் உரிமைகள் சம்மந்தப்பட்டிருப்பதுடன் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து அவர் பாவம் இழைத்திருப்பராயின் , மேற்கூறப்  பெற்ற  மூன்று நிபந்தனைகளுடன் நான்காவதொரு நிபந்தனையும் உள்ளது . அதாவது, மனிதர்களின் உரிமைகளை அவரவர்களிடம் சேர்ப்பித்தல் வேண்டும். [உதாரணமாக] பிறரது பொருளை அவர் அபகரித்திருந்தால், அதனை அவரிடம் ஒப்படைப்பார். பிறரை அவதூறு கூறுதல் போன்றவைகளில் அவர் ஈடுபட்டு அவர் மீது தண்டனை விதியாகுமானால்  அதற்குரிய தண்டனையைப் பெறுவார். அல்லது உரியவரிடம் மன்னிப்பைக் கோரிப்  பெறுவார். பிறரைப் புறம் கூறியிருந்தால் அவரிடம் மன்னிப்புத் தேடிக்  கொள்வார்.

அனைத்துப் பாவங்களிலிருந்தும் தவ்பாச்  செய்து மீளுவது அவசியமாகும். சில பாவங்களிலிருந்து மட்டும் தவ்பாச்  செய்வாரேயானால் அவரது தவ்பா கூடிவிடும். மீதியுள்ள பாவங்களில் விட்டும் தவ்பாச்  செய்வது அவர்மீது கடமையாகும். இது ''அஹ்லுல் ஹக்'' எனும் சாத்தியவாதிகளின் கருத்தாகும்.
பாவங்களை விட்டு தவ்பாச்  செய்வது வாஜிபு ஆகும் என்பதற்கு குர்ஆன் , ஹதீஸ்  ஆதாரங்கள் தெளிவாக உள்ளன.

அல்லாஹு தஆலா  கூறுகிறான்..

நன்நம்பிக்கையாளர்களே ! நீங்கள் வெற்றி பெறுவதற்காக நீங்கள் அனைவரும் தவ்பா செய்து அல்லாஹ்வின் பால் மீளுங்கள்!
அல்குர்ஆன் .. 24..31]

மேலும் உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்பு தேடுங்கள். பின்னர் அவன் பக்கமே [பாவத்தை விட்டும்] தவ்பா செய்து மீட்சி பெறுங்கள்!......
[அல்குர்ஆன்..11..3]

நன்நம்பிக்கையாளர்களே ! நீங்கள் அல்லாஹ்வின் பால் கலப்பற்ற தவ்பாவாக  [தூய்மையான பாவ மீட்சியாக] தவ்பாச்  செய்து கொள்ளுங்கள்!
அல்குர்ஆன்..66..8]

முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அண்ணல் நபி [ஸல்] அவர்களே ஒரு நாளைக்கு பல தடவைகள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினார்கள், பிழை பொருத்திட வேண்டினார்கள் என்பது ஹதீஸின் கருத்து. அப்போ நாம் ஒரு நாளைக்கு  எத்தனை முறை பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவில தாம் செவிமடுத்ததாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நான் ஒரு நாளில் எழுபது தடவைகளுக்கும்  அதிகமாக அல்லாஹு தஆலாவிடம் பிழை பொருத்திட வேண்டுகிறேன்,, அவனளவில் தவ்பாச்  செய்து மீளுகிறேன்.
நூல்.. புகாரி]

ஒரு மனிதனுக்கு ஓர் நல்ல விடயம் தடைபடுவதற்கு அவர் செய்த பாவம்தான்! ஒரு மனிதனுக்கு கிடைக்கும் ஓர் நல்ல விடயம் அவர் செய்த ஒரு நல்ல அமல்தான்! அல்லாஹ்விடம் ! நம் பாவங்களை சொல்லி அழுது  புலம்பி நம் பாவங்களை கழுவ வேண்டும்!  மரணம் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்  . அதற்க்கு முன்னே நாம் அல்லாஹ்விடம் தவ்பாச்  செய்து மீள வேண்டும்.
அல்லாஹ்வை மறுமைநாளில் சந்திக்கும்போது , எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டவர்களாக  சுத்தமான [தூய்மையான ]இதயத்துடன்  சந்திக்க வேண்டும்! அந்த பாக்கியத்தை நம் எல்லோருக்கும் அல்லாஹ் தரவேண்டும்!
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!