அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, அக்டோபர் 08, 2016

சோதிக்கப்பட்ட மூவர்

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
சோதிக்கப்பட்ட மூவர் ..............

நபி [ஸல்] நவின்றதாக ஹஜ்ரத் அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.. பனூ இஸ்ராயீல் கூட்டத்தாரில்  ஒரு வெண்தோல் நோயுடையவர், ஒரு வழுக்கைத் தலையுடையவர் , ஒரு குருடர் ஆகிய மூவர் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடி, அவர்களிடம் ஒரு மலக்கை அனுப்பி வைத்தான். அவர் [முதலில்] வெண்தோல் நோயுடையவரிடம் வந்து, உமக்கு மிக உவப்பானது எது என வினவினார். அதற்கவர் அழகிய நிறம், அழகிய தோல், மக்கள் அறுவருக்கும்  இந்நிறம் என்னை விட்டுப் போய்விடுவது ஆகியவை என்றார். அவரை அம்மலக்கு  தமது கரத்தால் தடவவே , அவரது அறுவறுப்பான  நிறம் போய்விட்டது அழகிய நிறம் கொடுக்கப்பட்டார். பின்னர் உமக்கு எச்செல்வம் மிக உவப்பானது? என அவரிடம் அம்மலக்கு  வினவினார். அவர் ஒட்டகை எனக் கூறவே, அவருக்கு ஒரு சின்ன ஒட்டகை வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி அருள்வானாக! என  [அவருக்கு] அம்மலக்கு  [வாழ்த்துக்] கூறினார்.


பின்னர் வழுக்கைத் தலையுடையவரிடம் அம்மலக்கு  வந்து , உமக்கு மிக உவப்பானது எது? என வினவினார். அதற்கவர் அழகிய தலைமுடி ,, மக்கள் என்னை வெறுக்கும் இவ்வழுக்கை  என்னை விட்டுப் போய்விட வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு  தமது கரத்தால் தடவவே, அவரது வழுக்கை அவரை விட்டுப் போய்விட்டது. அழகிய தலைமுடி அவருக்குக்  கொடுக்கப்பட்டது. பின்னர் அம்மலக்கு   அவரிடம் எச்செல்வம் உமக்கு மிக உவப்பானது? என வினவினார். அவர் பசுமாடு எனக் கூறவே அவருக்கு ஒரு சினைப் பசுமாடு வழங்கப்பட்டது. அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி அருள்வானாக! என அவருக்கு அம்மலக்கு  [வாழ்த்துக்] கூறினார்.

பின்னர் குருடரிடம் அம்மலக்கு  வந்து உமக்கு மிக உவப்பானது எது? என வினவினார். அதற்கவர் அல்லாஹ் எனக்கு கண்ணொளி வழங்கி அதன் மூலம் நான் மக்களைப்  பார்க்க வேண்டும் என்றார். அவரை அம்மலக்கு  தமது கரத்தால் தடவவே, அல்லாஹ் அவருக்கு கண்ணொளி வழங்கினான். பின்னர் அம்மலக்கு  அவரிடம் எச்செல்வம் உமக்கு மிக உவப்பானது? என வினவினார். அவர் ஆடு எனக் கூறவே, அவருக்கு ஒரு சினை  ஆடு வழங்கப்பட்டது.

மூவருக்கும் அருளிய அவர்கள் கால்நடைகள் குட்டி போட்டன.முதலாமவருக்கு ஒட்டக மந்தையும்  , இரண்டாமவருக்கு மாட்டுப் பண்ணையும், மூன்றாமவருக்கு ஆட்டு மந்தையும்  உருவாகியது .

பின்னர்  அம்மலக்கு , வெண்தோல் நோயுடையவராக இருந்தவரிடம், வெண்தோல் நோயுடையவரின் தோற்றத்தில் வந்து,  நான் ஓர் ஏழை மனிதன்,, என் பிரயாணத்தில் என் பொருள்கள் தீர்ந்துவிட்டன. இன்று அல்லாஹுத்தஆலாவை கொண்டும், பின்னர் உம்மைக் கொண்டுமேயல்லாமல் எனக்கு  போதுமாக்கிக் கொள்ளுதல் கிடையாது. [வேறு வழியில்லை] ஆகவே உமக்கு அழகிய நிறத்தையும், அழகிய தோலையும், பொருள் செல்வங்களையும் வழங்கிய அல்லாஹ்வைக் கொண்டு உம்மிடம் ஓர் ஒட்டகையைக் கேட்கிறேன். அதனைக் கொண்டு, என் பயணத்தில் போதுமாக்கிக் கொள்வேன் என்றார். அதற்கவர் ஏராளமான கடமைகள் உள்ளன,, [அவைகளை நிறைவேற்றவேண்டியிருப்பதால் உமக்கு ஒட்டகை தரமுடியாது ] அதற்கு அம்மலக்கு  நான் உம்மை அறிவேன் நீர் [ஒரு காலத்தில்] மக்கள் வெறுக்கும் வெண்தோல் நோயுடையவராகவும், ஏழையாகவும்  இருக்கவில்லையா! அல்லாஹ் உமக்கு [இவைகளை] வழங்கினான். அதற்கவர்  நான் இச்செல்வங்களை என் மூதாதையரிடமிருந்து பரம்பரை வாரிசுச்  சொத்தாகப்  பெற்றேன் எனக் கூறினார். அதற்கு அம்மலக்கு  இக் கூற்றில் நீ பொய் கூறுபவராக இருந்தால், முன்னர் நீர் எவ்வாறு இருந்தீரோ அவ்வாறே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக! எனக் கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு  வழுக்கைத் தலையுடையவரிடம், வழுக்கை தலைத்தோற்றத்தில் வந்து அவரிடம் [முன்னவரிடம்] கேட்டது போலக் கேட்டார். அவரும் அவர் பதிலளித்தது போன்றே பதிலளிக்கவே, நீர் உமது கூற்றில் பொய் கூறுபவராக இருந்தால், நீர் முன்னர் இருந்தது போன்றே அல்லாஹ் உம்மை ஆக்குவானாக! என அம்மலக்கு  கூறிச் சென்றார்.

பின்னர் அம்மலக்கு  குருடரிடம், குருடராக வந்து, நான் ஏழை வழிப்போக்கன். பிரயாணத்தில் என் பொருட்கள் தீர்ந்து  விட்டன. இன்று எனக்கு அல்லாஹ்வைக் கொண்டும், பின்னர் உம்மைக் கொண்டுமே  தவிர போதுமாக்கிக் கொள்ளுதல் கிடையாது. [வேறு வழியில்லை] உமக்கு உமது பார்வையை மீட்டித் தந்த அல்லாஹ்வைக் கொண்டு  , உம்மிடம் ஓர் ஆட்டைக் கேட்கிறேன். அதனைக் கொண்டு என் பயணத்தில் போதுமாக்கிக் கொள்வேன் என்றார். அதற்கவர், நான் குருடனாக இருந்தேன். அல்லாஹ் எனக்குப் பார்வையை மீட்டித் தந்தான். [எனது செல்வத்தில்] நீர் விரும்புபவைகளை  எடுத்துக் கொள்க! நீர் விரும்புபவைகளை  விட்டுச் செல்லும்! நீர் எடுத்துக் கொள்ளும் பொருளை அல்லாஹ்வுக்காக இன்று உமக்கு அளிக்கத்  தயங்க மாட்டேன் எனக் கூறினார்.

அதற்கு அம்மலக்கு , உம்  செல்வங்களை உம்மிடமே வைத்துக் கொள்வீராக! நீங்கள்  மூவரும் சோதிக்கப்படீர்கள். [அதில்] அல்லாஹ் உம்மைப் பொருந்திக் கொண்டான். உம்  மற்ற இரு தோழர்களும் மீதும் அல்லாஹ் கோபமடைந்து விட்டான் எனக் கூறினார் .
நூல்கள்.......புகாரி, முஸ்லிம் ]
அல்லாஹ் மிக்க அறிந்தவன் .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!