அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, நவம்பர் 05, 2016

சொன்னதைச் செய்தவர் , செய்ததைச் சொன்னவர் ..

சொன்னதைச் செய்தவர் , செய்ததைச்  சொன்னவர் ..
இந்த வாசகம் அரசியல்வாதிகளுக்கு மனனமான ஒன்று. மக்களைத் தம் பக்கம் இழுப்பதற்குப் போடப் படும் கோஷம் . ஆனால் இதன்படி செயல்படுவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

பாலாறு ஓடும், குடிசை கோபுரமாக, பசி பட்டினி நீங்கும் என்று வாக்குறுதியை அள்ளி வீசுவார்கள் . ஆனால் வெற்றி பெற்றபின் .... தம் குடிசையைக்  கோபுரமாக மாற்றிக் கொள்வார்கள் . தம் வீட்டில் பாலாறை ஓடச் செய்வார்கள். தாம் பசி பட்டினி  இன்றி இன்பமாக இருப்பார்கள். இப்படி அடியோடு மக்களை மறந்து விடுவர் இன்றைய அரசியல்வாதிகள் [வியாதிகள், மக்களை பீடித்த நோயிகள் ]

ஆனால் நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் இதைச் சொன்னார்களோ , அதை அப்படியே செய்து காட்டினார்கள். ஊருக்கு உபதேசம்  தமக்கு இல்லை என்று அவர்கள் இருந்ததில்லை. தம் தோழர்களை உலகப் பற்றற்று இருக்கும்படி வலியுறுத்தினார்கள் . அதைப்போன்று தாமும் உலக ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல்  இருந்து கொண்டார்கள்.


மற்றவர்களுக்கு உதவும்படி ஏவினார்கள் . அதற்குமுன் தாமும் ஏழைகளுக்கு உதவுபவர்களாக இருந்தார்கள்.

இன்னல்களை சகித்துக் கொள்ளும்படி ஏவினார்கள். அம்மக்கள் தந்த எண்ணற்ற  சோதனைகளை அவர்களும் சகித்துக் கொண்டார்கள்.
நற்குணங்கள் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள் . அவர்கள் நற்குணத்தின் பிறப்பிடமாகத்  திகழ்ந்தார்கள் .

ஒழுக்கம் மனிதனின் உயிர்நாடி என்பதை வலியுறுத்தினார்கள் . தாமும் ஒழுக்கத்தின் சிகரமாகத் திகழ்ந்தார்கள்.
இறைவனை அதிகம் வணங்க வேண்டுமெனக் கட்டளையிட்டார்கள் . தாமும் கால்கள் வீங்கும் அளவுக்கு இறைவனை வணங்கினார்கள்.
இப்படி அவர்கள் எதை ஏவினாலும் அதைத் தமது வாழ்வில் கொண்டுவருபவர்களாகவும் தடுத்தவற்றைத் தம் வாழ்விலிருந்து முற்றிலும் நீக்கியவர்களாகவுமே  திகழ்ந்தார்கள்.

இதுவரையிலும் நாம் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கையை மேலோட்டமாகக் கண்டோம் . அவர்களின் வாழ்க்கையை ஆழமாக நாம் படிக்கும்போது இன்னும் அவர்களின் சிறப்பையும் மதிப்பையும்  உணர முடியும்.

இப்படிப்பட்ட மாபெரும் மாமனிதர், மனிதருள் மாணிக்கம் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கையை நாம் பின்பற்றக் கடமைப் பட்டுள்ளோம் . உலகத்தில் தோன்றிய எந்தத் தலைவரும் இவர்களை போன்று வாழ்ந்ததில்லை  ,, இவர்களை போன்று வாழ்க்கைத் திட்டத்தைத் தந்ததுமில்லை .

நம் வாழ்க்கை சிறக்க , ஒளிமயமாக , மனிதரில் புனிதராகத் திகழ , உலகில், நியாயம் நிலைபெற , நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கைத் திட்டத்தை தவிர வேறு எந்த நல்வழியும் கிடையாது.

நாம் முஸ்லிம்களாக இருக்கிறோம், ஆனால், முஸ்லிமாக வாழ்கிறோமா என்பது தான் சந்தேகமாக இருக்கிறது. முஸ்லிமாக பிறந்து , முஸ்லிமாக வாழவில்லை என்றால் எப்படி முஸ்லிமாக மரணிக்க முடியும்..? நீங்களே உங்களை பரிசோத்தித்துக் கொள்ளுங்கள்!
இது ஒரு அழகான உபதேசம் தான்! புத்திமதியல்ல !!! ஒரு நினைவூட்டுதல் ..
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!