அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், டிசம்பர் 07, 2016

இவ்வுலகம் முதல் மறுமை வரை

👨🌍🌔மனிதன் இவ்வுலகில் தோன்றியதிலிருந்து தான் முக்கியமாக கருதும் அனைத்தையும் எழுதி வைக்கும் பழக்கம் அவனிடத்தில் இருந்தது. தான் பேசும் மொழியை எழுதி வைத்து மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். நிலங்கள் மற்றும் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதை ஆரம்ப காலத்தில் கற்களிலும் பின் தோல்களிலும் பிறகு பேப்பரிலும் எழுதிவைத்தார்கள்.
இவ்வாறு ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் பழக்கம் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துவிட்ட இக்காலத்தில் எல்லா விஷயங்களும் மிக இலகுவாக கம்யூட்டர் மூலம் மற்றும் சிப்பிலும் (ஸ்ரீட்ண்ல்) லும் பதியப்படுகின்றன . அதிலும் குறிப்பாக குற்றச்செயல்கள் புரிபவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு பதியப்படுகிறது.
இதை கொண்டு குற்றம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். இது இவ்வுலகில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கண்காணிக்கும் வழிமுறைகளாகும்! ஆனால் (முஸ்லிம்களுக்கு) இறைவன் மனிதன் செய்யும் அனைத்தையும் பதிவு செய்ய ஒரு இனத்தையே படைத்துள்ளான். அவர்கள் மலக்குமார்கள் எனும் வானவர்கள் ஆவர் .


நன்மை தீமைகளை பதிவாக்குதல்
அல்லாஹ்வை வணங்குவது மட்டுமல்லாமல் மனிதனோடு தொடர்புள்ள பல பொருப்புகளை வானவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அதிலே மனிதர்களை கண்கானித்து நன்மை தீமைகளை பதிவு செய்வதும் ஒன்றாகும்.
ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.
அல் குர்ஆன் 86 :4
வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.
அல்குர்ஆன் 50:17,18
அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.
(அல் குர்ஆன் 43 : 80)
உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.
(அல் குர்ஆன் 82 :10, 11 ,12)

இல்லிய்யீன் ஸிஜ்ஜீன்
இவ்வாறு மனிதனின் செயல்கள் உலகில் வாழும்போது ஒன்றுவிடாமல் வானவர்களால் பதியப்படுகின்றது . இப்படி அவனுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் கணக்கெடுத்து இவன் நல்லவனா? கெட்டவனா? என்று இறந்த பின் மீண்டும் ஒரு முறை வானத்திற்கு அவனுடைய ரூஹ் எடுத்துச் செல்லப்பட்டு பதிவாகிறது. இதோ அதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் .
ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளரிக்கொண்டிருந்தார்கள் .
எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்த கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம் .(திடீரென) நபி (ஸல்) அவர்கள் தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையி-லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார்.
இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத்தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் (சக்கராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள் இவர்கள் தங்களது சுவர்க்கத்துக்கு கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும் சுவர்க்கத்தின் நறுமணத்திலிருந்து நறுமணத்தையும் வைத்து கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரை கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார்.
அவரை நோக்கி நல்ல ஆத்மாவே! ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு என கூறுவார். தோல்பையி-லிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும் .
அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல் அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள். (பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார்
என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர் கூறுவார். வானம் திறக்கப்படும். இப்படி ஏழு வானம் திறக்கப்படும். அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்லியீனிலே பதிவு செய்யுங்கள், அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான்.
(ஹதீஸ் சுருக்கம், நூல் : அஹ்மத் 17803)
நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்துவிடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார்.
அப்பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஒட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல் அவனுடைய உடலிலிருந்து உயிர் கைப்பற்றப்டும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்க மாட்டார். உடனே கம்பளிதுணியில் வைத்துவிடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத் திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமாக துர்நாற்றம் அதிலி-ருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்டார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஒதிக் காட்டினார்கள்.
நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது . ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
அல் குர்ஆன் 7:40
ஏக இறைவன் உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஸிஜ்ஜீன் என்ற இடத்திற்கு எறியப்படும். பிறகு பின்வரும் வசனத்தை ஒதிக்காட்டினார்கள் .
அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலி-ருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.
அல்குர்ஆன் 22:31
இவ்வாறு (கெட்டவர்களின் ஏடான) ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்படும் (ஹதீஸ் சுருக்கம்)
நூல் : அஹ்மத் 17803)

மறுமையில் வரும் பதிவேடு
மண்ணறை வாழ்க்கையை தொடர்ந்து மீண்டும் விசாரணைச் செய்யப்படும் நாளில் அனைவரும் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்படுவார்கள். எந்தளவிற்கென்றால் ஆதம் (அலை) அவர்களிலி-ருந்து நூஹ் (அலை), ஸாலி-ஹ் (அலை), இப்ராஹிம் (அலை), இஸ்ஹாக் (அலை), யஃகூப் (அலை), யூசுஃப் (அலை), சுலைமான் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை உள்ள அனைத்து சமுதாயங்களும் இறைவன் முன் குழுமியிருப்பார்கள். இத்தனை சமுதாயங்களும் அவரவர் காலத்தில் என்னென்ன காரியங்கள் செய்தார்களோ அத்தனையும் அடங்கிய கிதாபை ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்படும். அதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் .
ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.
(அல்குர்ஆன் 39:68)
பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 30 :68,69)
ஒவ்வொரு சமுதாயத்தையும் மண்டியிட்டவர்களாக நீர் காண்பீர்! ஒவ்வொரு சமுதாயமும் தனது (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படும். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கு இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள்.
(அல் குர்ஆன் 45:28)

உண்மையை மட்டும் பேசும் உத்தம ஏடு
நம்மால் பதியப்படும் எண்ணற்ற செய்திகளை நாமே அழித்துவிடலாம், மாற்றிவிடலாம். குற்றம் செய்தவனை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பெரிய குற்றவாளி என்று பதியப்படுகின்றது. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அந்த அறிக்கையில் சாதாரண குற்றச்செயல் செய்தவர் என்று மாற்றிவிடுகின்றனர். ஒருவருடைய சொத்தை மற்றொருவர் சர்வ சாதாரணமாக மாற்றி எழுதிவிடுகின்றனர். இப்படி பல்வேறு விஷயங்களுக்காக பதியப்படுகின்ற அனைத்தும் பொய்யாய் போவதைப் பார்க்கலாம். ஆனால் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர்கள் மூலம் எழுதப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையில் உண்மை மட்டுமே இருக்கும். அதில் உள்ளதை யாராலும் மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது. உள்ளது உள்ளபடி இருக்கும்.
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 23 :62)
இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம்.
(அல்குர்ஆன் 45:29)

பதிவேட்டை பார்த்து பயம் கொள்ளும் மனிதன்
உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்).
அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
(அல்குர்ஆன் 18 :48,49)
மனிதன் தனக்கு வழங்கப்பட்டதை பார்த்து ஏன் பயப்படுகிறான்? அவன் இவ்வுலகில் நல்லவனாக வாழவில்லை. அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், கொலை, கொள்ளை, மது, சூது, விபச்சாரம், மோசடி, அவதூறு, புறம், கேலிகூத்துகள், கோள் இப்படி சிறிய பாவங்கள் முதல் பெரிய பாவங்கள் வரை அனைத்தையும் ஒன்று விடாமல் செய்தான். அதனால் தான் இந்த இழிநிலை. நாம் நம்மிடம் கொடுக்கப்படும் கிதாபை பார்த்து பயப்படக்கூடியவராக ஒருக்காலும் இருக்கக்கூடாது.

கழுத்தில் மாட்டப்படும் புத்தகம்
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான்.
(அல் குர்ஆன் 17:13)

செயல்களை கணக்கெடுக்க நீயே போதுமானவன்
“உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்” (என்று கூறப்படும்).
அல் குர்ஆன் 17 :14

இடது கையில் வழங்கப்பட்டால் :
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் “எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
அல் குர்ஆன் 69:25 -37

முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டால் :
முதுகுக்குப் பின் புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான். நரகிலும் கருகுவான். அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான். “தான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்” என்று அவன் எண்ணினான்.
அல்குர்ஆன் 84:10-14

வலது கையில் கொடுக்கப்பட்டால் :
யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார். அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.
(அல்குர்ஆன் 84: 7,8,9)
அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் “வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்” எனக் கூறுவார்.
அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)
அல் குர்ஆன் 69 :18 -24
ஒவ்வொரு மனிதனின் செயல்கள் அனைத்தும் கண்காணித்து எழுதப்படுகின்றது. அவ்வாறு எழுதப்பட்ட ஏடானது மறுமை வரை தொடர்கிறது. வலது கையில் கொடுக்கப்பட்டால் விசாரணை எளிதாகி சொர்க்கம் செல்கிறார். இடது கையில் கொடுக்கப்பட்டால் விசாரணை கடுமையாகி நரகம் செல்கிறார் .மறுமையில் இந்த இரண்டில் ஒன்றை கண்டிப்பாக அடைந்தே தீருவார். எனவே நாம் செய்யக்கூடிய ஒவ்வொன்றும் வலப்பக்கம் கொடுக்கக்கூடிய கிதாபில் பதியக்கூடிய வகையில் நல்அமல்களை அதிகமாக செய்து மறுமையின் வெற்றியைப் பெறுவோம் .


இவ்வுலகம் முதல் மறுமை வரை
எம். சல்மான் கான், மேட்டுப்பாளையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!