அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

திங்கள், டிசம்பர் 19, 2016

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகை

நயவஞ்சகரின் அடையாளம்

சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (657)
(ஜமாஅத்திற்குப் போகாமல்) தன் வீட்டிலேயே தங்கியிருந்து இன்னார் தொழுவது போல் உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் உங்கள் நபிவழியை விட்டவராவீர்கள். உங்கள் நபிவழியை விட்டீர்களானால் நீங்கள் வழிகெட்டுப் போய் விடுவீர்கள். எந்த ஒரு மனிதரும் அழகுற உலூச் செய்து இந்தப் பள்ளிகள் ஏதேனும் ஒன்றை நோக்கி வருகின்ற போது, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதி ஓர் அந்தஸ்தை உயர்த்தி அதன் மூலம் ஒரு தீமையை அழிக்காமல் இருப்பதில்லை. நன்கு அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர இந்த ஜமாஅத் தொழுகைக்கு வேறு யாரும் வராமல் இருப்பது கிடையாது. ஒருவர், இரண்டு பேரின் கைத்தாங்கலாக (பள்ளிக்கு) கொண்டு வரப்பட்டு வரிசையில் நிறுத்தப் படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : முஸ்லிம்இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் அவர் பிரகடனப் படுத்தப் பட்ட ஒரு நயவஞ்சகர் என்பது தெளிவாகின்றது. நாம் இந்த நயவஞ்சகத் தன்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையானவர்களாக இருந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, கள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 644, 7224ஜமாஅத் தொழுகை விஷயத்தில் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

பாங்கு சப்தம் கேட்டு விட்டால் உடனே பள்ளிக்கு வந்து விடவேண்டும். பாங்கு சப்தம் கேட்ட பின் வீட்டில் தொழுவதற்கு அனுமதி கிடையாது. இந்தக் காலத்தில் பாங்கு சப்தம் கேட்காத பகுதியே இல்லை என்று சொல்லும் வண்ணம் எங்கு பார்த்தாலும் ஒலி பெருக்கி வசதிகள் உள்ளன. அப்படியிருந்தும் நாம் பள்ளிக்குச் செல்ல முன்வருவதில்லை.அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸைப் பாருங்கள் :
கண் தெரியாத ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! பள்ளிக்கு அழைத்து வரும் வழிகாட்டி எனக்கு இல்லை” என்று குறிப்பிட்டு, தனக்கு வீட்டில் தொழ அனுமதி வழங்கும் படி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். அவர் திரும்பிச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூப்பிட்டு, “நீ தொழுகைக்கான அழைப்பைச் செவியுறுகின்றாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நீ பள்ளிக்கு வந்து விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல் : முஸ்லிம்)

கண் தெரியாத நபித்தோழருக்கே நபி (ஸல்) அவர்கள் வீட்டில் தொழுவதற்கு அனுமதிக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பாங்கு சப்தம் கேட்டு விட்டால் பள்ளிக்கு வந்தாக வேண்டும் என்ற கட்டளையை நாம் தெளிவாக உணர முடிகின்றது. இந்தக் கட்டளையைத் தெரிந்த பின்பும் நாம் பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றோம் என்று தான் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!27 மடங்கு நன்மைகள்

“தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி),  நூல் : புகாரி (645)

ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாச-ல் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.ஷைத்தானின் ஆதிக்கம்

“ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் தொழுகை நிலை நாட்டப் படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), நூல் : அபூதாவூத்ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள்

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ, கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப் படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப் படுகின்றது.

மேலும் உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக துஆ செய்கின்றனர். அங்கே அவரது காற்று பிரிந்து, உளூ நீங்கி விடாமல் இருக்கும் வரை, (பிறருக்கு) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும் வரை. “இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!” என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (2119)

எவர் தன்னுடைய வீட்டில் உலூச் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது. ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்

அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். பள்ளியை விட்டு அவர் தூரமாக இருந்ததைப் போல் வேறு யாரும் தூரமாக இருக்க நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தொழுகை கூட விடுபடுவது கிடையாது. “கும்மிருட்டிலும் கடும் வெப்பத்திலும் ஏறி வருவதற்காக ஒரு கழுதையை வாங்க வேண்டியது தானே?” என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், “என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பள்ளிக்கு வரும் போது என் வருகையும் என்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும் போது என்னுடைய திரும்புதலும் பதியப் பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் வழங்குவானாக!” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உபை இப்னு கஅப் (ரலி), நூல் : முஸ்லிம்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் கா-யாகி இருந்தன. சலமா கிளையினர் பள்ளிக்கருகில் வந்து விட விரும்பினர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்களை நோக்கி, “நீங்கள் பள்ளிக்கு அருகில் வந்து விட விரும்புகின்றீர்களாமே!” என்று வினவினார்கள். அதற்கு அவர்கள் “ஆம் அல்லாஹ்வின் தூதரே! இடம் பெயர்ந்து வருவதை நாங்கள் விரும்புகின்றோம்” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “ஸலமா கிளையினரே! உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப் படுகின்றன. உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப் படுகின்றன” என்று கூறினார்கள். உடனே சலமா கிளையினர் “நாங்கள் மாறி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை” என்று பதிலளித்தனர்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),நூல் : முஸ்லிம்

பள்ளி தூரமாக இருப்பதால் ஒருவர் வீட்டி-ருந்து புறப்பட்டு வரும் போது அவருடைய பாதங்கள் சாலையில் மட்டும் சுவடுகளைப் பதியவில்லை. அல்லாஹ்வின் ஏட்டில் நன்மைகளையும் பதிவு செய்கின்றன என்ற விளக்கத்தை நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெற்ற சலமா கிளையினர் தங்கள் வீடுகளைப் பள்ளிக்கருகில் கொண்டு வரும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள் என்றால் மறுமையின் மீது அவர்கள் எந்த அளவுக்குப் பிடிப்பும் பக்தியும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது.

யார் நீண்ட தூரத்தி-ருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), நூல் : புகாரி (651)

மனிதனின் ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (2891)

குபாவில் உள்ள பனூ அம்ர் பின் அவ்ஃப் உடைய பள்ளியில் நான் தொழுது விட்டு வரும் போது நடந்து வந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ர-)யைச் சந்தித்தேன். அவரைக் கண்டதும் நான் என் கோவேறுக் கழுதையி-ருந்து இறங்கி, “என் சிறிய தந்தையே! இதில் ஏறிக் கொள்ளுங்கள்” என்று சொன்னேன். அதற்கு அவர், “என்னுடைய சகோதரரின் மகனே! இந்த வாகனத்தில் நான் ஏற வேண்டுமானால் (எனது வாகனத்திலேயே) ஏறி வந்திருப்பேன். எனினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியை நோக்கி வந்து அதில் தொழுகின்ற வரை அவர்கள் நடந்து வரத் தான் கண்டிருக்கின்றேன். எனவே அதைப் போல் நானும் பள்ளியை நோக்கி நடந்து வருவதையே விரும்புகின்றேன்” என்று பதில் அளித்தார்கள். வாகனத்தில் ஏறி வர மறுத்து தன் வழியிலேயே சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் கைஸ் பின் மக்ரமா, நூல் : அஹ்மத்இரவு முழுவதும் தொழுத நன்மை

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) மக்ரிப் தொழுகைக்குப் பின் பள்ளியில் நுழைந்து அவர்கள் மட்டும் தனியே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்தேன். அப்போது அவர்கள், “எனது சகோதரன் மகனே! யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அம்ரா. நூற்கள் : முஸ்லிம், அபூதாவூத்

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஜமாஅத் தொழுகையைப் பேணி நன்மைகளை அடைவோமாக!

நன்றி..எம். ஷம்சுல்லுஹா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!