அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

செவ்வாய், பிப்ரவரி 07, 2017

அண்டை வீட்டார்கள் .........

அண்டை வீட்டார்கள் .........
மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறது. இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.திருக்குர்ஆன் நபிமொழிகளில் அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَى وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنْبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 4 : 36)

நாம், நன்மை செய்யவேண்டியவர்களின் பட்டியலில் அண்டைவீட்டாரை அல்லாஹ் இணைத்துள்ளான். மேலும் உறவினரான அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அல்லது உறவினரல்லாத அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நன்மை செய்வது முஸ்லிம்களின் கடமை என்பதை மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

அவ்வசனத்தின் இறுதியில் “பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்” என்ற வாசகத்தின் மூலம் அண்டைவீட்டாரை அற்பாக நினைக்கூடாது என்பதையும் அவர்களையும் நம்மை போன்றே எண்ண வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறான்.

மூன்று அண்டைவீட்டார்

அண்டைவீட்டார் அதிகபட்சமாக மூன்று உரிமைகளை பெற்றவராக திகழ்வர். அண்டைவீட்டில் உள்ளவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் இருந்தால் அவர்களுக்கு நாம் மூன்று வகையான உரிமைகளை வழங்க கடமைபட்டுள்ளோம்.

ஒன்று அண்டைவீட்டாரின்உரிமைகள்,
இரண்டாவது முஸ்லிம்களின் உரிமைகள்,
மூன்றாவது உறவினர்களின் உரிமைகள்.
அண்டைவீட்டார் முஸ்லிமாக மட்டும் இருந்தால் அவருக்கு இரண்டு உரிமைகளை வழங்கபடவேண்டும். ஒன்று அண்டைவீட்டாரின் உரிமைகள், இரண்டாவது முஸ்லிம்களின் உரிமைகள்.


அண்டைவீட்டார் முஸ்லிமாக இல்லாமலிருந்தால் அவருக்கு அண்டைவீட்டாரின் உரிமை மட்டும் கிடைக்கும்.

அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்.
1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டைவீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது.

2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டைவீட்டார்.இவர் முஸ்லிமான அண்டைவீட்டார். இவருக்கு அண்டைவீட்டார் உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு.

3. மூன்று உரிமைகள் உள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டைவீட்டடார் என்று உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம் :7 பக்கம் :185)

கண்ணிப்படுத்துங்கள்!

நம் வீட்டில் விசேஷங்கள் ஏதும் நிகழ்ந்தால் முதலில் அண்டைவீட்டாருக்கு அழைப்புக் கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்தவேண்டும். ஆனால் இன்று சின்ன பிரச்சனைகளால் சண்டையிட்டுக் கொண்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் வரும் போது, ஊர் முழுக்க அழைப்பு கொடுப்பவர்கள் பக்கத்துவீட்டில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை.

கொடுத்தாலும்கூட மரியாதை கலந்த அழைப்பாக இருப்பதில்லை. நபிகளார் அவர்கள் இது போன்று நடப்பவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறார்கள்.

“அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (6019)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!