அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

சனி, மார்ச் 11, 2017

சிறு நேரத்தில் பெரு நன்மைகள் [தொடர் 1]

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சிறு நேரத்தில் பெரு நன்மைகள் [தொடர் 1]
ஆர். அப்துல் கரீம், எம்.ஐ.எஸ்.சி.

மனிதர்களில் பெரும்பான்மையினர் எல்லா செயல்களும் விரைவாக அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர்.  எவ்வளவு பெரிய வேலையும் சொற்ப நேரத்தில், இலகுவாக முடிந்து விடுவதையே அதிகமானோர் விரும்புகின்றனர்.
அதனாலேயே சமையல் வேலையை எளிதாக்கித் தரும் மிக்ஸி, கிரைண்டர் போன்ற வீட்டுப் பொருள்களுக்கும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் பைக், இரயில் போன்றவை உள்ளிட்ட அனைத்து நவீன சாதகங்களுக்கும் மக்களுக்கு மத்தியில் தனிமவுசு இருப்பதைக் காண முடிகிறது.

முப்பதே நாட்களில் ஆங்கிலம் கற்றுக் கொள்ளலாம் எனும் தலைப்பிலான புத்தகங்கள் அதிகம் விற்பனையாவதும், ஒரு நிமிடத்தில் பாஸ்போர்ட் போட்டா என்று விளம்பரம் செய்யப்படும் கடைக்குத் தனியாக மக்கள் கூட்டம் மொய்ப்பதும் சீக்கிரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்ற பெரும்பான்மை மக்களின் மனநிலையைக் கண்ணாடியாய் பிரதிபலிக்கின்றது.
மக்களின் இந்த மனநிலையைப் பறைசாற்றும் அடையாளங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் என்றாலும் விஷயம் அதுவல்ல. இவ்வாறாக எல்லாவற்றிலும் சொற்ப நேரத்தில் அதிக பலன் கிடைக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இறைவனிடத்தில் நன்மைகளைப் பெறுவதற்கு இதுமாதிரியான வழிமுறைகள் உண்டா? என்று கேட்டால் ஆம் என்பது தான் அதற்குச் சரியான பதிலாகும்.
ஒரு நன்மைக்குப் பத்து கூலிகள் தருவதை (அல்குர்ஆன் 6:160) வழக்கமாக வைத்திருக்கும் இறைவனிடம் இது போன்ற சலுகைகள் இல்லாமலிருக்குமா?
நபிகள் நாயகம் கற்றுத் தந்த நல்லறங்களிலும் சொற்ப நேரத்தில் அதிக நன்மைகளைப் பெற்றுத்தரும்படியான ஏராளமான வழிபாடுகளை அறிய முடிகிறது. அவ்வகையிலான சில நன்மைகளை இங்கே பட்டியலிடுகிறோம்
முதல் தகுதி
அதற்கு முன் முக்கியமான ஒன்றை இங்கே குறிப்பிட்டு விடுகிறோம்.
குறைந்த நேரத்தில் அதிகமான நன்மைகளைப் பெற வேண்டும் என்று ஆசை கொள்வதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன் முக்கியமாக நம் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது தான் மனத்தூய்மை.
செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்காக என்ற மனத்தூய்மையுடன் செய்யும் போதே அல்லாஹ்விடம் அதற்குரிய கூலியைப் பெற முடியும் என்பதை எப்போதும் மறந்து விடக் கூடாது.
ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றை அவர்களுக்குக் கூறுவீராக! அவ்விருவரும் ஒரு வணக்கத்தைப் புரிந்தனர். அவர்களில் ஒருவரிடம் அது ஏற்கப்பட்டது. மற்றொருவரிடம் ஏற்கப்படவில்லை. "நான் உன்னைக் கொல்வேன்'' என்று (ஏற்கப்படாதவர்) கூறினார். "(தன்னை) அஞ்சுவோரிடமிருந்தே அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்'' என்று (ஏற்கப்பட்டவர்) கூறினார்.
(அல்குர்ஆன் 5:27)
எனவே சரியான இறைநம்பிக்கையுடனும், மனத்தூய்மையுடனும் இந்நன்மைகளைப் புரிந்தால் அல்லாஹ்விடம் அதிக நன்மைகளைப் பெற்றிடலாம் என்பதில் சந்தேகமே இல்லை.  அவற்றை இனி காண்போம்.
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட...
உளூச் செய்த நிலையில் பாங்கிற்குப் பிறகு அஷ்ஹது அன் லாயிலாஹ என்று துவங்கும் துஆவை ஓதினால் சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படும் என்று நபிகள் நாயகம் சொல்கிறார்கள்.
நாங்கள் (முறைவைத்து) ஒட்டகங்கள் மேய்த்து வந்தோம். இந்நிலையில் எனது முறை வந்தபோது மாலை நேரத்தில் நான் அவற்றை ஓட்டிக்கொண்டு மேய்ச்சல் நிலத்திற்குச் சென்றேன். (பிறகு நான் திரும்பிவந்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள், "ஒரு முலிஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை'' என்று கூறுவதை நான் கேட்டேன்.

உடனே நான் "என்ன அருமையான வார்த்தை!'' என்றேன். அப்போது எனக்கு முன்னால் இருந்த ஒருவர் "இதற்கு முன்னர் சொன்ன வார்த்தை இதைவிட அருமையானது'' என்றார். உடனே நான் (அவர் யார் என்று) பார்த்தேன். அங்கே உமர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் (என்னிடம்) கூறினார்கள்: சற்று முன்னர்தான் நீங்கள் இங்கு வந்தீர்கள்; நான் பார்த்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நீங்கள் வருவதற்கு முன் பின்வருமாறு) கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் அங்கத் தூய்மை செய்துவிட்டு, "அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி),
நூல்: முஸ்லிம் 397
சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்படுவது விலை மதிக்க இயலாத நன்மை என்பதும், அதற்குரிய வழிமுறையாகச் சொல்லப்பட்டது மிக எளிமையானது என்பதும் சொல்லிப் புரிய வேண்டியதில்லை.
ஒரு நாளுக்கு ஆயிரம் நன்மைகள்
நாளொன்றுக்கு ஆயிரம் நன்மைகளை அள்ளித் தரும் மிக எளிதான வழிபாட்டை நபிகள் நாயகம் பின்வரும் நபிமொழியில் கற்றுத்தருகிறார்கள். அதை உளமாறப் படித்து அது எவ்வளவு எளிதானது என்பதை நீங்கள் உணரும் போது சுப்ஹானல்லாஹ் என்று கூறத் தயங்க மாட்டீர்கள்.
நாங்கள் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது அவர்கள், "உங்களில் ஒருவரால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாதா?'' என்று கேட்டார்கள். அப்போது அங்கு அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?'' என்று கேட்டார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்' என்று கூறித்) துதிக்க, அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: சஅத் பின் அபீவக்காஸ் (ரலி),
நூல்: முஸ்லிம் 5230

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!