ஞாயிறு, ஜூலை 30, 2017

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

மறுமையின் மஹ்ஷரில் நிழல் பெறும் ஏழு தரப்பினர் .

உஷ்ணத்தின் உச்சக்கட்டம் கிழக்கு ஊரெல்லாம் பேசப்படுகிறது. காலை ஆறு மணிக்கே வியர்வை சொட்ட ஆரம்பிக்கிறது. நேரம் செல்லச் செல்ல நிலைமை மிக மோசம்தான். மின் விசிறியும் இல்லையெனில் மனிதனின் நடவடிக்கை அனைத்தும் ஸ்தம்பிதமாகிவிடுமளவுக்கு சூரியன் அதன் வெப்பத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறது.

சூட்டின் தாக்கம் பலரையும் பல விதமான வியாதிக்குள் சிக்கவைக்கிறது. சிறுவர் முதல் பெரியவர் வரை வியர்வைக்கூரு வீறு நடை போடுகிறது. சிலரைக் காய்ச்சலும், வாந்திபேதியும் வாட்டிக்கொண்டிருக்கிறது. சிறுவர்களை சின்னமுத்து எனும் அம்மை போன்ற நோய் அதட்டிக்கொண்டிருக்கிறது. சிலருக்குக் காலையில் 10 நிமிடங்கள் கூட தொடர்ச்சியாக நின்று கொண்டிருந்தால் மயக்கம் ஏற்படுகின்ற அளவுக்கு தாக்குப்பிடிக்க முடியவில்லை.


குளங்கள், நீரோடைகள் மெல்ல மெல்ல வற்றிக் கொண்டிருக்கிறது. பயிர்கள் மடிகின்றன. புற்கள் சாவுகின்றன. கால்நடைகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. பூமியின் சூடு பொறுக்க முடியாமல் விஷஜந்துகளும், ஊர்வனங்களும் ஊருக்குள் உலாவுகின்றன. இதனால் மனிதனுக்கு இரு பக்கத்தாலும் நெருக்கடி. இப்போதே இந்த நிலைமையென்றால் எதிர்வரும் காலங்களை எட்டிப்பார்ப்பதும் கடினம்தான்.

பக்கத்து ஊருக்கு பயணம் செய்வதாயினும் இடையில் கடும் தாகமாகவும், களைப்பாகவும் இருக்கிறது. அடிக்கடி தண்ணீர் தேவைப்படுகிறது. இதனால்தான் தாகத்தைத் தணிக்க வீதியோரங்களில் இடையிடையே 'கூல்பார்கள்'. மரநிழல்களும், கூல்பார்களும் இல்லையெனில் பிரயாணம் அவ்வளவுதான். மின்விசிறி இல்லாமல் இரண்டு, மூன்று நிமிடங்கள் கூட ஒரு வேலையைச்செய்கின்ற போது சொட்டுச் சொட்டாக வியர்வை கொட்டிக்கொண்டிருக்கிறது.

பல கோடி மைல்களுக்கப்பால் இருக்கின்ற சூரியனின் நிலை இப்படி எம்மைத் தாக்கிக்கொண்டிருக்கிறது. எனினும் அதிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்காக பல
ஏற்பாடுகளைச் செய்கின்றோம். ஏதோ ஒருவாறு இவ் உஷ்ணத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு முயற்சிக்கிறோம்.

ஆனால், மறுமையின் மஹ்ஷர் வெளியில் எமது நிலைமை என்னவாகும் என்று ஒரு கணம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நாளை மஹ்ஷரில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவரப்படும். வியர்வை வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக் கொண்டிருப்பார்கள். ஓவ்வொரு மனிதனையும் தான் செய்த பாவத்திற்கேற்ப வியர்வை மூழ்கடித்துக் கொண்டிருக்கும். சிலரை கணுக்கால் வரை, சிலரை முழங்கால் வரை, மற்றும் சிலரை இடுப்பு வரை, கழுத்து வரை, இன்னும் சிலரை காதுவரை வியர்வை தாழ்த்திக்கொண்டிருக்கும். இந்த நேரம் யாரும் யாருக்கும் உதவ மாட்டார்கள். ஏல்லோரும் 'யா நஃப்ஸீ, யா நஃப்ஸீ' அதாவது 'எனது ஆத்மாவே, எனது ஆத்மாவே' என்று கத்துவார்கள் கதறுவார்கள். இந்நிலையை குர்ஆனின் 80ஆம் அத்தியாயம் 34-36 வசனங்கள் பின்வருமாறு சித்தரிக்கின்றது ' அன்றைய தினம் மனிதன் தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியையும், தன் மக்களையும் விட்டும் வெருண்டோடுவான்'.

இவ்வுலகில் பலகோடி மைல்களுக்கப்பால் இருக்கின்ற சூரிய வெப்பத்தைத் தாங்க முடியாத மனிதன் மறுமையின் அந்த மஹ்ஷரில் என்ன செய்யப்போகிறான்? இப்படி பெரும் அமளி துமளிக்குள் மாட்டிக்கொண்டிருக்கும் வேளையில் மனிதன் நிழல் தேடிக்கொண்டிருப்பான். அல்லாஹ்வுடைய அர்ஷுடைய நிழல் தவிர வேறு எந்த நிழலும் இல்லாத அத்தருணத்தில் அல்லாஹ் ஏழு தரப்பினருக்கு அர்ஷுடைய நிழலை வழங்குவான்.

01. நீதமான தலைவன்
02. அல்லாஹ்வை வழிப்படுவதில் வளர்ந்த வாலிபன்
03. பள்ளிவாயலோடு தொடர்பு வைத்திருக்கும் மனிதன்
04. அல்லாஹ்வுக்காகவே சேர்ந்து, அல்லாஹ்வுக்காகவே பிரிந்த இருவர்
05. அழகும், செல்வமும் நிறைந்த ஒரு பெண் தவறான வழிக்கு (விபச்சாரத்திற்கு) அழைக்கின்ற போது நான் இவ்வடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுகிறேன் என ஒதுங்கிக்கொண்ட மனிதன்.
06. இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் (மிக இரகசியமாக) தர்மம் செய்தவர்
07. தனிமையில் அல்லாஹ்வை திக்ர் செய்து கண்ணீர் வடித்த மனிதன்.
என நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் முஸ்லிம் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நெஞ்சங்களே! மேற்படி ஏழு தரப்பினர்களுள் நாம் எந்தத் தரப்பினர் என்று முடிவெடுக்க வேணடிய தருணம்தான் இது. காரணம் இக்காலத்தில்தான் சூரியனின் சூடு எங்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 15 கோடி கிலோ மீற்றருக்கு மேலிருக்கும் இவ்வுலக சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாம் மறுமையில் தலைக்கு மேல் சூரியன் கொண்டு வரப்படும் போது எப்படி நாம் வெப்பத்தைத் தணித்துக்கொள்வது? அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழிவகைகள் என்ன? எனச் சிந்தித்து எம்மை நாம் மாற்றிக்கொள்வோம். 'ஒரு சமூகம் தாமாக திருந்தாத, மாற்றாத வரை அல்லாஹ் மாற்றுவதில்லை' என்ற குர்ஆன் வசனத்திற்கமைய முதலில் எம்மை நாம் மாற்ற வேண்டும், பக்குவப்படுத்த வேண்டும்.

ஆகவே, மறுமையில் மஹ்ஷர் வெளியின் கெடுபிடிகளிலிருந்து தம்மைக் காத்துக்கொள்வதற்கு காத்திரமான செயற்பாடுகள் எவையென இனங்கண்டு அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்பட்டு மேற்படி ஏழு தரப்பினர்களுள் தம்மையும் சேர்த்துக்கொள்ள முயற்சிப்போமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் அத்தரப்பினர்களுள் எம்மையும் சேர்த்து அருள் புரிவானாக!
நன்றி.. ஆக்கம் ஹாபிழ் அப்துல் அஹத் ...
ஸ்ரீலங்காமூர்ஸ் .. இஸ்லாமிய இணையதளம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!