வியாழன், நவம்பர் 16, 2017

வாழ்விற்கு விடை காண முற்பட்டால்!

வாழ்விற்கு விடை காண முற்பட்டால்!

அல்லாஹ் இவ்வுலகில் மனிதர்களை ஒரு குறிக்கோளோடு படைத்திருக்கிறான். “நான் ஜின்களையும், மனிதர்களையும் எனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காகவேயன்றி வேறு எதற்காகவும் படைக்கவில்லை. 51:56” லும் “உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான். என்று 67:2 லும் அந்தக் குறிக்கோளை தெளிவு படுத்தியும் உள்ளான். எனவே உலகில் பிறந்த ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ‘நாம் யார்?’ எங்கிருந்து வந்தோம் எங்கே போகப் போகிறோம்? நமது இறுதி முடிவு என்ன? அது யார் கையில் இருக்கிறது? இவை போன்ற கேள்விகளை எழுப்பி அவற்றிற்கு விடை காண முற்பட்டால் அவர்களது வாழ்வில் நிச்சயம் ஒளி பிறக்கும். “கண்டதே காட்சி கொண்டதே கொள்கை” என்று தான் தோன்றித்தனமாக வாழ்க்கை வாழ ஒரு போதும் முற்படமாட்டார்கள்.



இன்று உலகிலுள்ள பெரும்பான்மை மக்கள் 97% குறிக்கோளே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்’ என்ற மேம்போக்கான எண்ணத்திலேயே அதிகமான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏதோ குறிக்கோளுடன் வாழும் அந்தச் சிறுபான்மை 3% மக்களிலும் மிகச் சிறுபான்மையினரே வாழ்க்கையின் அசல் குறிக்கோளை விளங்கி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அழிந்து போகும் அற்பமான இவ்வுலகில் அவர்கள் அடையும் சொத்து, சுகம், பட்டம், பதவி, மக்களிடையே ஏற்படும் பிரபல்யம், பேர், புகழ் இவற்றைப் பெரிதாக நினைத்து தங்களது வாழ்நாளை வீண் நாள்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வுலகில் குறிக்கோளே இல்லாமல் வாழும் மக்களாக இருந்தாலும் அல்லது இவ்வுலகில் அவர்கள் அடையும் சொத்து, சுகம், பட்டம், பதவி, பேர், புகழ் இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு வாழும் மக்களும் சரி, இரு சாராரும் ஒரே வித நஷ்டத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் நிரந்தரமாக மறு உலக வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்.

இவ்வுலகில் அவர்கள் அரசராக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் தலைவராக இருந்தாலும், தொண்டராக இருந்தாலும் வாழப்போவது அதிகப்பட்சமாக நூறு ஆண்டுகளே. மிக அதிகமான மக்கள் 70 வயதைக் கூட கடப்பதில்லை. அதற்கு முன்னரே மரணத்தைத் தழுவி மறுமை வாழ்க்கையை சந்தித்து விடுகிறார்கள். ஆனால் இவர்கள் மறுமை வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காமல் சதா இவ்வுலக வாழ்க்கையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால், மரணிக்கும்போது மறுமைக்குறிய எவ்வித சாதனமும் இல்லாமல் வெறுங்கையினராகவே செல்கின்றனர். அதன் விளைவு? எப்படி தாயின் வயிற்றிலிருந்து இவ்வுலகிற்கு வருகைத்தரும் ஒரு குழந்தை சப்பாணியாக, குருடாக, செவிடாக, ஊமையாகப் பிறந்தால் இவ்வுலகமே அக்குழந்தைக்கு நரக வாழ்க்கையாக ஆகிவிடுகிறதோ அதே போல் ஆன்மாவின் உறுப்புகள் சிதைந்த நிலையில் மரணமடையும் ஒருவன் மறுமையில் நரக வாழ்க்கை வாழ்வது திண்ணம்.

உலகில் தோன்றிய இறைத்தூதர்கள் அனைவருமே மனிதனின் அசலான குறிக்கோளை உணர்த்தும் பணியையே செய்தனர். ஆன்மாவின் உறுப்புகள் முறையாக செவ்வனே தயாராகும் அற்புத வழியை அவர்கள் மக்களுக்குப் போதித்தனர். அதில் மிக முக்கியமானது படைத்த இறைவனுக்கு மலக்குகளையோ, நபிமார்களையோ, இறந்தவர்களையோ, இருப்பவர்களையோ இணை வைக்காமல் இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடுவதாகும்.

இறைவனின் இக்கட்டளைக்கு முரணாக பெரும்பான்மையான மக்கள் இன்று அமரர்களையும், நபிமார்களையும், இறந்துபோன பெரியார்களையும் இறைவனுக்கு இணையாக ஆக்கி அவர்களிடம் தங்கள் தேவைகளுக்காக முறையிடுகிறவர்களாக இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களை தங்களுக்கும் இறைவனுக்கும் இடையில் பரிந்துரை செய்பவர்களாக கருதி வழிபடுகின்றனர்.

இறைவன் மனிதனைன் பிடரி நரம்பைவிட அவனுக்குச் சமீபமாக இருப்பதாகவும், அவனிடமே மனிதன் தனது தேவைகளைக் கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். பெரியார்களை இடைத்தரகர்களாக ஆக்கி அவர்களின் பொருட்டால் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பது தனக்கு இணை வைக்கும் “ஷிர்க்” என்ற குற்றம் என்று மிகத் தெளிவாக எச்சரித்துள்ளான். பார்க்க (18:102-106, 10:18, 39:3) முற்றிலும் அந்த இறைவனையே நம்பி, அவனிடமே சரனடைந்து அவனது ஏவல் விலக்கல் படியே வாழ வேண்டும். அவர்களே உண்மையான விசுவாசிகள்-மூஃமின்கள்-முஸ்லிம்கள்.
இவ்வாறு படைத்த இறைவனுக்கு அவர்களை பரிந்துரைப்பவர்களாக ஆக்காமல் இறைவனுக்கு எதையும் யாரையும் இணையாக்காமல் பரிசுத்த முஸ்லிமாக ஒருவர் ஆகிவிட்டால் அடுத்து அவர் மீது ஐங்கால தொழுகை நீங்காக் கடமையாக ஆகிவிட்டது.  கண்டிப்பாக அவர் ஐங்கால தொழுகையை தொழுதே தீர வேண்டும். தொழுகை இல்லாத நிலையில் அவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழக்கிறார்.
ஆக எந்த நிலையிலும் சுகத்திலும், துக்கத்திலும், நோயிலும், ஆரோக்கியத்திலும், பிரயாணத்திலும் உள்ளூரிலும் அவர் கண்டிப்பாக தொழுதே ஆக வேண்டும். எதையும் எப்படிப் பட்ட நிலையிலும் தொழுகையை விடுவதற்கு காரணமாகக் கூற முடியாது. ஆனால் பிராயாணத்தில் தொழுகையை சுருக்கியும், சேர்த்தும் தொழுவதற்கும், தண்ணீர் கிடைக்காவிட்டால் தயமும் செய்து கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளார். அதுபோல் நோயாளில் நின்று தொழ முடியாவிட்டால் உட்கார்ந்தும் அதுவும் முடியாவிட்டால் படுத்தும் அதுவும் முடியாவிட்டால் படுத்தும், அதுவும் முடியாவிட்டால் சமிக்கை மூலம் தொழுதே தீர வேண்டும். ஆக ஓர் ஆணைப் பொருத்த மட்டிலும் தொழுகையை விட்டு விட்டு உயிர் வாழ முஸ்லிம் என்ற நிலையில் அனுமதியே இல்லை.
இறை விசுவாசத்திற்குப் பிறகு தொழுகையிலும் ஒரு முஸ்லிம் ஒழுங்குற செயல்பட ஆரம்பித்து விட்டால், அடுத்து அவர் மீது ஜகாத்- ஏழைவரி கடமையாகி விட்டது. அல்லாஹ் அனுமதித்த ஹலாலான வழியில் அவர் பொருள் ஈட்டித் தனது மனைவி மக்களைத் காப்பாற்றுவதோடும் தன்னிடமிருக்கும் பொருளாதார வகைக்குறிய பொருள்கள் ஒரு வருடம் பூர்த்தியாகி இருந்தால் அதற்கு 40-ல் ஒரு பங்கு ஜகாத் கொடுப்பது கடமையாகும். தொழுகையைப் போல் ஜகாத்தையும் முறைப்படி நிறைவேற்ற வேண்டும் என அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளான். ஜகாத் கொடுக்காதவர்களை மிகமிக கடுமையாக எச்சரித்துள்ளான்.  பார்க்க (2:43,83,110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5,11,18,34,35,60,71, 19:31,55, 21:73, 22:41,78, 27:3, 30:39, 31:4, 33:33,41:6,7, 58:13, 73:20, 98:5
இந்த இறை வாக்குகளை ஓதி உணர்கிறவர்கள் ‘ஜகாத்’ கடமை நிறைவேற்றா விடில் எவ்வளவு கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.  செல்வங்களை சேர்த்து வைத்திருக்கும் ஒருவர் இறை நம்பிக்கையில் உறுதியாக இருந்தாலும், ஐங்கால தொழுகைகளை அதனதன் நேரத்தில் ஒழுங்காக தொழுது வந்தாலும் தன்னிடமுள்ள செல்வங்களுக்கு ஒழுங்காக கணக்குப் பார்த்து ஜகாத் ஏழைவரி கொடுக்காவிட்டால் அவன் வெற்றி பெற முடியாது. மறுமையிலும் நஷ்டமடைவான்.
தன்னிடமுள்ள அனைத்து செல்வங்களுக்கும் அதாவது தனது சொந்த உபயோகத்திற்கு இருக்கும் வீடு, வாகனம், மற்றும் உபயோகப் பொருள் நீங்கலாக, தனது வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கத்துடன் ஈடுபடுத்தும் முதலீடுகள் அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்ல வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும். இதுவே நபிவழி.
Thanks.. source,,,, http..hakkem.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!