செவ்வாய், ஜூன் 26, 2018

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

இஸ்லாமை முறித்துவிடும் பத்து நிபந்தனைகள்(அவசியமான கட்டுரை)

வணக்க வழிபாட்டில் அல்லாஹ்வுக்கு இணையாளர்களை ஏற்படுத்துதல்

குர்ஆன் கூறுகிறது: அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களைத் தான் நாடியோருக்கு மன்னித்துவிடுவான். (அல்குர்ஆன் 4:116)

எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, திட்டமாக அவனுக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடைசெய்துவிடுகிறான். அவனுடைய தங்கிமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் யாரும் இருக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 5:72)


இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்தனை செய்வது, அவர்களிடம் உதவியைக் கோருவது, அவர்களுக்காக அறுத்துப் பலியிடுவது, அவர்களின் பெயர்களில் நேர்ச்சை செய்வது ஆகிய அனைத்தும் இணைவைப்புகளாகும். இந்த வணக்கங்களை அவர்களுக்குச் செய்யக் கூடாது.

அல்லாஹ்வுக்கும் தனக்கும் இடையில் தரகர்களை ஏற்படுத்திக்கொள்தல். அவர்களிடம் பரிந்துரை தேடுதல், அவர்கள் மீது பொறுப்புச் சாட்டுதல். யார் இத்தகைய காரியங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் ஏகோபித்த முடிவின்படி இறைநிராகரிப்பாளர்களே. அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் என்று சொல்வதுடன் பொய்யர்கள் என்றும் அறிவிக்கிறான். அதற்குக் காரணம் அவர்களின் பின்வரும் கூற்றுதான்:
அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாங்கள் இவர்களை வணங்கவில்லை(என்று கூறுகின்றார்கள்).அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விஷயத்தைப் பற்றிஅல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்தமாட்டான்.(அல்குர்ஆன் 39:3)

இப்படிச் சொன்னதால் அவர்கள் பொய்யர்களாகவும், இந்தச் செயலால் அவர்கள் காஃபிர்களாகவும் ஆகிவிட்டார்கள்.

இணைவைப்பவர்களையும் நிராகரிப்பாளர்களையும் அவர்கள் இணைவைப்பவர்கள் என்பதை ஏற்காமலும், அவர்கள் இணைவைப்பவர்களில் அடங்குவார்களா என்று சந்தேகப்படுவதும், அவர்களின் நம்பிக்கைகளை அங்கீகரிப்பதும் இஸ்லாமை முறித்துவிடும். இணைவைப்பவர்கள் (முஷ்ரிக்குகள்) எனும் வார்த்தை பொதுவானதாகும். அதில் அனைத்து வகையான காஃபிர்களும் அடங்குவார்கள். எனவே, ஒவ்வொரு காஃபிரும் இணைவைப்பவர்தாம். யார் அவர்களை காஃபிர்களாகக் கருதவில்லையோ, அவரும் அவர்களைப் போன்ற காஃபிர்தாம். 

நபியவர்களின் வழிகாட்டல் பரிபூரணமானதல்ல என்று நம்புவதும், அவர்களின் சட்டத்தையும் தீர்ப்பையும் விட மற்றவர்களுடைய சட்டமும் தீர்ப்பும் சிறந்தது என்று நம்புவதும் இஸ்லாமை முறித்துவிடும். நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டலை விடச் சிறந்த வழிகாட்டல் உண்டு என்று நம்புகிறவர்கள்தாம், பொய்யான தெய்வங்களின் சட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து முழக்கமிடுவார்கள்.

யார் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த சட்டத்தையும் வழிகாட்டலையும் வெறுக்கிறார்களோ அவர்களும் காஃபிர்கள்தாம். அவர்கள் அதனைச் செயலில் பின்பற்றி நடந்தாலும் காஃபிர்கள்தாம்.

குர்ஆன் கூறுகிறது: இதற்குக் காரணம் என்னவென்றால்,அல்லாஹ் இறக்கி வைத்ததை உண்மையாகவே அவர்கள் வெறுத்துவிட்டார்கள்.ஆகவே, அவர்களுடைய செயல்களை எல்லாம் (அல்லாஹ்) அழித்துவிட்டான்.(அல்குர்ஆன் 47:9)

இஸ்லாமிய விஷயங்களில் ஒன்றைக் கேலி செய்கிறவர்களும், உதாரணமாக இஸ்லாம் சொல்கின்ற தண்டனை மற்றும் மறுமையில் வழங்கப்படும் நற்கூலி ஆகியவற்றைக் கேலி செய்கிறவர்களும் காஃபிர்களே.

குர்ஆன் கூறுகிறது:(நபியே! அவர்களை நோக்கி), ‘அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவன் தூதரையுமா நீங்கள் ஏளனம் செய்கின்றீர்கள்?” என்று நீர் கேட்பீராக!நீங்கள் (செய்கின்ற சூழ்ச்சிகரமான ஏளனத்திற்கு) வீண் காரணங்கள் கூற வேண்டாம்.நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிச்சயமாக (அவனை) நிராகரித்துவிட்டீர்கள்.(அல்குர்ஆன் 9:65,66)

சூனியத்தின் எல்லா வகைகளும் இஸ்லாமை முறிக்கும். ஓர் ஆணையோ பெண்ணையோ அவர்கள் நேசிக்கின்றதை விட்டுத் திருப்புவதற்காகவும், சிலருக்கு சிலர் மீது அல்லது அவர்கள் வெறுக்கின்றவற்றின் மீது நேசத்தை ஏற்படுத்துவதற்காகவும் செய்கின்ற அனைத்தும் சூனியமே. யார் சூனியத்தைச் செய்கிறாரோ, அல்லது அதனை அங்கீகரிக்கிறாரோ அவர் காஃபிரே. இதற்குரிய ஆதாரம் அல்லாஹ்வின் பின்வரும் வசனத்தில் உள்ளது:
மாறாக இந்த இரண்டு மலக்குகளும் அவர்களுக்குக் கற்றுத் தரும்போது, நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். எனவே இதனைக் கற்றுக்கொண்டு நீங்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிடாதீர்கள் என்று கூறாதவரை அதனை அவர்கள் யாருக்கும் கற்றுத் தரவில்லை. (அல்குர்ஆன் 2:102) 

இறைநிராகரிப்பாளர்களின் நம்பிக்கைகளை விரும்புவதும், அடக்குமுறைக்கு உள்ளான முஸ்லிம்களுக்கு எதிராக இறைநிராகரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதும் இஸ்லாமை முறித்துவிடும்.
குர்ஆன் கூறுகிறது: உங்களில் எவனேனும் அவர்களில் எவரையேனும்நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான்.நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.(அல்குர்ஆன் 5:51)

இஸ்லாமியச் சட்டங்களைப் பின்பற்றுவதிலிருந்து சிலருக்கு விதிவிலக்கும் அதிகாரமும் உண்டு என்று நம்புகிறவர்களும் காஃபிர்களே.

குர்ஆன் கூறுகிறது: எவரேனும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படாது.மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)

இஸ்லாமைப் புறக்கணித்து திரும்பிக்கொள்வதும், அதன் போதனைகளைக் கற்றுக்கொள்ளாமலும், செயல்படுத்தாமலும் பிடிவாதமாய் மறுப்பதும் ஒருவரின் இஸ்லாமை முறித்துவிடும்.

குர்ஆன் கூறுகிறது:தன் இறைவனுடைய (எச்சரிக்கையான) ஆதாரங்களைக் கொண்டு மறுமையை நினைவூட்டிய பின்னரும் இதனைப் புறக்கணித்துவிடுபவனைவிட அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் இத்தகைய குற்றவாளிகளைப்பழிவாங்கியே தீருவோம்.(அல்குர்ஆன் 32:22)

முடிவுரை

இஸ்லாமை முறிக்கும் இந்த அனைத்து விஷயங்களிலும் அவற்றை விளையாட்டுக்காகச் செய்தாலும், வேண்டுமென்றே செய்தாலும் எந்த வித்தியாசமும் இல்லை. நிர்ப்பந்திக்கப்பட்ட மனிதர் மட்டுமே விதிவிலக்கு பெறுவார். இவை அனைத்தும் மிகவும் அபாயமானவை. முஸ்லிம்களில் அதிகமானவர்களிடம் இவை ஏற்படுகின்றன. எனவே, முஸ்லிம்கள் இவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவற்றில் தாங்கள் விழுந்துவிடுவோமோ என்று அச்சப்பட வேண்டும்.

நாம் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவனிடமே பாதுகாவல் கேட்போம். எவையெல்லாம் அவனுடைய கோபத்தைக் கொண்டு வருமோ, அவற்றை விட்டு விலகியிருப்போம். அல்லாஹ்வின் அருளும் கருணையும் அவனுடைய தூதர் மீதும், அவரின் குடும்பத்தார், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!