அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்! எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.��

புதன், ஜூன் 27, 2018

இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள்

இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவது நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அக்குடும்பங்களின் துயரம் இலேசாகும், வலி குறையும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: தமது சகோதரர் கவலையாக உள்ள நேரத்தில் அவரை ஆறுதல்படுத்துபவருக்கு மறுமைநாளில் ஆபரணங்களுடன்கூடிய கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். (இப்னு மாஜா)

ஒருவர் இறந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்குப் பொறுமையை நினைவூட்டி அதற்கு அல்லாஹ்விடம் உள்ள கூலியை அச்சமயத்தில் கூறுவதும் அவசியமாகும்.


உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்) "தமது குழந்தை' அல்லது "தம் மகன்' இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், "என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!'' என்று கூறியனுப்பினார்கள். அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து "தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1682)

இறந்தவருக்கு அல்லாஹ் கருணை காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இறந்தவரின் குடும்பத்தாரிடம் இவ்வாறு கூற வேண்டும் என்கிறார்கள்: அல்லாஹ் உமக்கு மகத்தான கூலியையும் பொறுமையையும் உமது இறந்துவிட்ட உறவினருக்கு மன்னிப்பையும் வழங்குவானாக.

இறந்துவிட்டவரின் குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக்கொடுப்பது விரும்பத்தக்க விஷயமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஜாஅஃபரின் குடும்பத்தாருக்காக உணவு சமையுங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட துயரம் அவர்களை முழுக்கவே செயலிழக்கச் செய்துவிட்டது. (அபூதாவூது, திர்மிதீ)

இன்று சுன்னத்துக்கு அதாவது நபிவழிக்கு மாற்றமாகத்தான் நடக்கிறது. எல்லாம் ஒரு சடங்காக செய்கிறார்கள். ஒரு வீட்டில் யாரவது ஒருவர் இறந்துவிட்டார் என்றால் , அந்த மையத்தை  உடனே நல்ல்லடக்கம் செய்யாமால்  , அவர் வருகிறார் , இவர் வருகிறார் என்று காக்கவைக்கிறார்கள்.
மூன்று நாட்கள் மட்டும்தான் துக்கம் அனுசரிக்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. (கணவன் இறந்து மனைவியை தவிர)  இன்று நேருக்கு மாற்றமாகத்தான் நடக்கிறது.
இனி வருங்காலங்களில்  என்னாலெல்லாம் வரப்போகிறதோ ? அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!