செவ்வாய், பிப்ரவரி 04, 2020

மனிதன் ஏன் படைக்கப்பட்டான் ?

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

இறைவன் மனிதனைப் படைத்தது , அவனுக்கு அறிவாற்றலைக் கொடுத்து, அவனுக்கு உணவளித்துப், பாதுகாப்பதெல்லாம் அந்த ஏக இறைவனை ஏற்று, அவனுக்கே வழிபடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்குத் தான்.
ஆனால் மனிதனோ தன்னுடைய ஆரம்பத்தையும் மறந்து விடுகிறான்.எதுவுமே தெரியாத இளம் பிராயத்தையும் மறந்து விடுகிறான். எதையும் செய்யத் துணியவைக்கும் வாலிப சக்தி, பணச் சக்தி, ஆயுத சக்தி எல்லாம் சேர்ந்து முன்னரிருந்தையும் மறக்கச் செய்கின்றன. பின்னர் வர இருப்பதையும் நினைக்க முடியாமல் தடுக்கின்றன. இதை நினைவுபடுத்துவதற்காகவே இறைவன் திருமறையில் கூறுகிறான்:


''மனிதனை ஒரு துளி இந்திரியத்தால் தான் படைத்தோம் என்பதை அவன் கவனிக்கவில்லையா ? அவ்வாறிருந்தும் அவன் பகிரங்கமான விரோதியாகி (நமக்கு மாறு செய்யத் தலைப்பட்டு ) விடுகிறான்.(அல்குர் ஆன் :36,77)

மனிதனுக்கு மனிதன் செய்யும் உதவிகளை மற்றவர்களிடம் சொல்லிக் காட்டுவதைப் பார்க்கிறோம். 'என்னால் முன்னுக்கு வந்தவன்' என்று பேசப்படுவதைக் கேள்விப்படுகிறோம். ''என்னிடம் வளர்ந்த நீ , எனக்கே எதிரியாகி விட்டாயே? ''என நபி மூஸா (அலை) அவர்களிடம் பிர் அவுன் கேட்டது போல, இன்று உலகத்தில் தான் செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டப்படுகின்றன என்றால் , உண்மை நிலையை விவரித்துக்கூறும் பேருபகாரியான இறைவன் கூறுவதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? அவனை மறந்தோ மறுத்தோ நடப்பதற்கு எந்த உள்ளமும் இடம் தராது. நூறாயிரம் ஆண்டு தலைகீழூம் , கால் மேலுமாக நின்று வணங்கினாலும், அவன் செய்த அருளுக்கு ஈடாக முடியாது.

குழந்தை பிறக்கும்போதே கைகளை மூடிக்கொண்டு பிறக்கிறது .எதோ இருப்பதுபோல் இரு கரங்களையும் மூடிக் கொண்டு 'வெறுங்கையுடன் துன்யாவுக்குப் போகிறேன் இதேபோல, துன்யாவை விட்டுச் செல்லும்போதும் வெறுமனே தான் செல்வேன் செல்வேன் '' என்பதைச் சொல்லாமல் சொல்லிக் கொண்டே பிறக்கிறது.👍👈

மனிதனுக்கு இறைவன் தந்த பாக்கியங்களில் மிக உன்னதமான பாக்கியம், அவனை அழகான அங்க அமைப்புகளுடன் படைத்ததாகும். சில நேரங்களில், மனிதனுக்கு படிப்பினையூட்டுவதற்காக, கண் குருடு, காத்து செவிடு, ஊமை, நொண்டி, இரட்டை மண்டை அதிகக் குட்டை , அளவுக்கு மீறிய உயரம் என்ற விதத்தில் படைக்கிறான்.

உறவுகளுடன் நாம் வாழ்கிறோம் . ஆரம்பம் தாய், தந்தை , சகோதரர்கள், சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள் இப்படி சில ஆண்டுகள் வாழ்க்கை போகிறது. பிறகு, திருமணம், மனைவி , பிள்ளைகள் இது ஒரு காலம் சென்றுவிடுகிறது. பிறகு பாட்டி தாத்தா இது ஒரு காலம் செல்கிறது.  முடிவு நாலு பேர்  தூக்கிக்கொண்டு போய் மண்ணறையில் வைத்துப் பத்துபேர் சேர்ந்து மண்ணை அள்ளி மூடுகிறார்கள். புதை குழி நிரப்பப்பட்டதும் எல்லோருமே திரும்பிவிடுகிறார்கள். மூன்று காரியங்கள் மட்டுமே மைய்யத்தை தொடர்ந்து செல்கின்றன. முதலாவது அவன் இறைவனுக்கு செய்த அழகிய வணக்கம் ; இரண்டாவது தன் கையால் செய்த தான தர்மம்; மூன்றாவது ஸாலிஹான பிள்ளை அவன் ஹக்கில் செய்யும் நல் துஆ !
இதுதான் வாழ்க்கை ...
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் , அதை எப்படி கழிக்கிறீர்கள் ? நல்வழியிலா ? அல்லது மனம்போன போக்கிலா தீய வழியா ?
நன்றி மவுலவி A .S .காஜா முஹ்யித்தீன் (பாகவி)
சத்திய பாதை இஸ்லாம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Welcome to your comment!