யாரையும் சிறுமை படுத்தாதீர்.(புறம் /குறை )part 3)


 யாரையும் சிறுமை படுத்தாதீர்.(புறம் /குறை )part 3)

உயர்ந்தோன் அல்லாஹ் சிறுமை படுத்துவதற்கு தடை விதிக்கிறான். எள்ளி நகையாடுவதும் கேவலப்படுத்துவதும் தான் சிறுமை படுத்துதல் (சுக்ரிய்யத்) என்று சொல்லப்படும்.


நபி ஸல் அவர்கள் குறிப்பிடுவார்கள்


கர்வம் என்பது உண்மையை ஏற்க மறுப்பதும் மக்களை கேவலமாக மதிப்பதும் தான்.


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரலி அவர்கள் 

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 147.

திர்மிதீ 1922


மக்களை அற்பமான வர்களாகவும் மதிப்பற்ற வர்களாகவும் கருதுவது என்பது ஹராம் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட செயல்.


ஏனென்றால் சில வேளை சிறுமைப்படுத்தி கேவலப்படுத்துகின்றவரை விட பாதிப்படைகின்றனர் அல்லாஹ்விடம் மகத்தான தகுதி உடைய வராகவும் அவனுக்கு மிகவும் விருப்பமானவர் ஆகவும் இருக்கக் கூடும்.


இதனால்தான் அல்லாஹ் தன் திருமறையில் சொல்கின்றான்


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌…


நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்…


(அல்குர்ஆன் : 49:11)



குறை சொல்ல வேண்டாம்

.وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ..


..உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். என்று அல்லாஹ் கட்டளையிட்டான்..

(அல்குர்ஆன் : 49:11)


மக்களைக் குறை பேசி இழிவு படுத்துகின்ற ஒவ்வொருவரும் சாபத்திற்கும் பழிப்பிற்கும் உரியவர் ஆவார்.

وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ‏ 

(மக்களை நேருக்கு நேர்) இழித்துரைத்துக் கொண்டும், (முதுகுக்குப் பின்) குறை கூறிக் கொண்டும் திரிகின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் கேடுதான்.

(அல்குர்ஆன் : 104:1)


கண்ணாடி தத்துவம்

ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.


பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறு குறுப்பு…!


‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான் இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ‘ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை…


பெரியவரை நெருங்கினான்.


“ஐயா…!”


“என்ன தம்பி?”


“உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?”


“ஆமாம்!”


“அதில் என்ன தெரிகிறது?”


“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ பார்த்தால் உன் முகம் தெரியும்!”


“அப்படியானால் சாதாரணக் கண்ணாடிதானே அது?”


“ஆமாம்!”


“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”


பெரியவர் புன்னகைத்தார்.


“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால் அது தரும் பாடங்கள் நிறைய!”


“பாடமா…??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?”


“அப்படிக் கேள். உங்களில் ஒவ்வொருவரும் மற்றவருக்குக் கண்ணாடி போன்றவர்கள்”


“எனக்கு ஒன்றும் புரியவில்லை!”


“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச் சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இது தெளிவுபடுத்துகிறது.”


“எப்படி?”


“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?”


“ஆமாம்”


“அதே போல் *உன் சகோதரனிடம் – நண்பனிடம் எந்த அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது. இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”*


“அடுத்து…?”


“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகி விடும். இல்லையா?”


“ஆமாம்!”


“அதே போல் *மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”*


“அப்புறம்?”


“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”


“இல்லையே…! மாறாக அந்தக் கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”


“சரியாகச் சொன்னாய். அதே போல் *நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும். இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”*


“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில் இத்தனை கருத்துகளா…! அப்பப்பா! யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!” என்று அந்த பெரியவரிடம் சொல்லிவிட்டு அவரை வணங்கி சென்றான்..


ஆம். நண்பர்களே.., இனி கண்ணாடி முன்னால் நின்று உங்கள் முகத்தை பார்க்கும்போது எல்லாம் இந்த அறிவுரைகளை மறந்துவிடாதீர்கள்.. இவை உங்களின் மனத்தை அலங்கரிக்கும்’’.


கண்ணாடி தத்துவம்.

source: www.jummaamedai.wordpress.com

கருத்துகள்