அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புத வாழ்க்கை (2ஆம் பாகம் )




அல்லாஹ்வின் திருபெயரால் ......
நிச்சயமாக அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்  வாழ்க்கை வரலாறைப் படிப்பதினால் நம் வாழ்வில் மாற்றம் ஏற்படும் , அண்ணலாரின் மீது அன்பும், பாசமும் ,நேசமும் இன்னும் அதிகரிக்கும் . சுன்னத்துகளை பின்பற்ற அதிகம் கவனம் , ஆசைகள் பிறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உணவுகள் எப்படி இருந்தது என்று நாம் பார்த்தோம் . அவர்கள்  அணிந்திருந்த ஆடைகள் , இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன .

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை , கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி "இவ்விரு ஆடைகள் அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள் " என்று குறிப்பிட்டார் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து "இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன் " என்றார் . அவர்களுக்கு அது தேவையாக இருந்தால் அதைப் பெற்றுக் கொண்டனர் . பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர்  என சஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்கள் .
நூல்: புகாரி .

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது  என்பதையும் உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம் .

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது  தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள் .
நூல்: புகாரி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும் இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது  என்பதையும் இந்தச் சான்றுகளிருந்து அறியலாம்.

மாமன்னராகவும் , மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்கு சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன .

உணவு , உடை போன்ற வசதிகளுக்காக தான் மனிதன் சொத்துக்களைத் தேடுகிறான் . எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான் .மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான் . இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்து பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் , இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

உணவு ,உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா ? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா ?

" நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை . ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள் " என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார் .
நூல்: புகாரி.

கூலம் நிரப்பட்ட தோல் தலையணை  தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது  என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் .
நூல்: புகாரி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம் அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும் . இதைக் கண்ட நாங்கள் " அல்லாஹ்வின் தூதரே ! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம் ; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும் " எனக் கேட்டோம் . அதற்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் " எனக்கு இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது ? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லகூடிய ஒரு பயணிக்கும் , அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும் , இவ்வுலகத்துக்கும் உள்ளது" எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள் .
இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார் .
நூல்கள் :திர்மிதி, இப்னு மாஜா ,அஹ்மத் .

"நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன் . எனது இரு கால்களையும் அவர்கள் சஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன் . அவர்கள் சஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள் . உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன் . அவர்கள் சஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன்.இவ்வாறு நடந்ததற்கு காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது " என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார் .
நூல்: புகாரி.

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5ஷ் 5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை .மனைவி கால்களை  மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது . என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்.

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள் .

"முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள் அதை மீட்காமலேயே மரணித்தார்கள் " என்று நபிகள் நாயகம் (ஸல்) மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார் .
நூல்:புகாரி.

அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களின் பட்டியலைப் பாருங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ , வெள்ளிக் காசையோ , அடிமைகளையோ , வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை , தமது ஆயுதங்கள் , தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள் .
நூல் புகாரி.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் (ஸல்) மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துக்கள் இவை தாம்.

அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போன்று இந்த உலகத்தில் யாராவது வாழ்ந்து இருக்கிறார்களா ? அப்படி யாராலும் வாழ முடியுமா ? நிச்சயமாக முடியாது . இந்த மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வு ஒரு அற்புதமான வாழ்வு !அவர்களின் சிறப்பை சொல்லிக்கொண்டே போகலாம்.......

இன்ஷாஅல்லாஹ் தொடரும்......

அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள்