மரணத்தில்மதிப்பைப் பேணுங்கள்!

அல்லாஹ்வின் திருபெயரால் ......
எல்லாப் புகழும் , புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் !

மரணம் செய்தி கேட்டால் இதை எல்லோரும் கூறுவார்கள். ஏதாவது துன்பமான செய்தி அல்லது துயரமான செய்தி கேட்டால் கூட இதைச் சொல்ல வேண்டும் .


ஹஜ்ரத் உபாதா [ரலி] அவர்களுக்குத் தனது மரண நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு கூடி இருந்தவர்களிடம்  ''எனக்காக எவரும் அழக்கூடாது . என்னுடைய உயிர் பிரிந்த பின் நீங்கள் அனைவரும் ஒழுங்கான முறையில் பேணிக்கையாக உளுச் செய்ய வேண்டும். பள்ளி வாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத் தொழுது என்னுடைய பாவ மன்னிப்பிற்காக துஆச் செய்ய வேண்டும். ஏனெனில் ''தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள் '' என்று அல்லாஹ் கூறி இருக்கிறான். தொழுதபின் என்னை நல்ல விதமாக அடக்கம் செய்யுங்கள் என்றார்கள்  .

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் [ரலி]   அவர்கள் பிரயாணத்தில் இருந்தார்கள். அப்போது நபி [ஸல்] அவர்களின் பரிசுத்த மனைவி ஒருவர் மரணமாகிவிட்டதாக தகவல் வந்தது  . உடனே அவர்கள் சஜ்தா செய்தார்கள் . இதைக் கண்ணுற்ற ஒருவர் ''ஏன்  இவ்வாறு செய்தீர்கள்? என வினவினார். உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் சஜ்தாவில் [தொழுகையில்]  ஈடுபடுங்கள் என்று நபி [ஸல்] அவர்கள் எங்களுக்கு உபதேசம் செய்து இருக்கிறார்கள். இப்போது நபி [ஸல்] அவர்களின் பரிசுத்த மனைவி அவர்களின் மரணச் செய்தி   கிடைத்து இருக்கிறது. நபி [ஸல்] அவர்களுடைய மனைவியாரின் மரணத்தை விடத் துன்பம் தரும் சம்பவம்  எதுவாக இருக்க முடியும்? என பதில் அளித்தார்கள்.

படிப்பினை தரும் இச்சம்பவம் ''அபூதாவூத் ''தில் இடம் பெற்றுள்ளது. மரணமடையும் நிலையில் உள்ளவர்களுக்கும்- மரணத்தருவாயில் உள்ளவரின் அருகில் உள்ளவர்களும் எத்தகைய பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த இரண்டு  சம்பவங்களும் புத்தி புகட்டுகின்றது .
இன்று நேருக்கு மாற்றமாக தான் நடக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும் . சுன்னத்  வழிமுறைகள் பேணுதல் இல்லை , தாமதமாக அடக்கம் செய்கிறார்கள். அடக்கம் செய்தபின்  அவரவர் அமைதியாக [மனதிற்குள்] அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற  எண்ணம் உதிக்கவில்லை . சடங்காகத்தான் எல்லாம் நடக்கிறது என்று சொல்லும் அளவுக்கு  இருக்கிறது.

மரணம் கட்டாயம்..

மனித வாழ்வில் மரணம் ஒரு கட்டாயம். நாம் என்று பிறந்தோமோ அன்றைக்கே எழுதி வைக்கப்பட்ட ஒரு முடிவு மரணம். என்றாவது ஒரு நாள் மரணம் நம்மைக் கொண்டு  போகும் ன்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. நாம் விரும்புகிறோமோ விரும்பவில்லையோ  மரணம் நம்மை ஒரு நாள் விரும்பும் . அப்போது , நாம் அதன் பின்னால்  இறுதி ஊர்வலம் செல்லக் கூடியவர்களே! சிலருக்கு மரணம் சொல்லிக் கொண்டு வரும். பலருக்கு அது சொல்லாமலே கொண்டு போய்விடும். மரணத்தைச் சிலர் பயப்படுவது உண்டு. சில பெரிய மேதைகள் வரவேற்பதற்குத் தகுதி படைத்த  ஞானவான்கள் அச்சம் தீர்ந்தவர்களாக மரணிப்பதை அறிந்திருக்கிறோம்.

சில குடும்பங்களில் மரணமாகப் போகும் நபரை விட அருகில் இருக்கும் உறவினர்களே அதிகம் கலவரம் செய்து ஆர்ப்பாட்டம் செய்து மரணப் படுக்கையில் இருக்கும் நபரைக்  கலங்க வைத்து விடுகின்றார்கள். சிலர் அமைதியான மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருந்தாலும்  சுற்றியுள்ளவர்கள் அவர்களின் அமைதியைக் குலைத்து  பதற வைத்து கதற வைத்து விடுகின்றார்கள். உயிரோடு இருக்கும்போது ஏறெடுத்தும் பார்க்காதவர்கள் கூட உயிர் போகப் போகிறது என்பதை அறிந்து பாசங்களை கொட்டி பாட்டுப்பாடி ஆட்டம் போடா வந்து விடுவார்கள்  . இது பசப்பும் பாவமும் ஆகும்.

மரணத்தின் வாசலிலே..

மரணம் உறுதியாகி இருக்கும் நேரம் படுக்கையில் உள்ளவருக்கு ஏக தெய்வக் கொள்கையின் உறுதிப் பிரமானக்  கலிமா ஷஹாதாவை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அருகில் இருப்பவர்களும் அவரின் உயிர் மிக மிக சுலபமாகப் பிரிவதற்குப் பிரார்த்தித்துக் கொண்டு இருக்க வேண்டும். மரணப் படுக்கையில் உள்ளவர்கள் தனக்கு மரணம் வரப் போகிறது என்பதை உணர முடியும் போது  மனிதர்களிடம் பேசுவதை முடித்துக் கொண்டு இறைவனிடம் பேசத்துவங்கி விட வேண்டும். தான் வாழ்க்கையில் செய்த தவறுகளை எண்ணிப் பிழை பொறுக்கத் தேடி  இறைவனிடம் மன்னிப்புக் கோர வேண்டும். இஸ்திஃபார் தச்பீஹ் களை சொல்லிக் கொண்டு கலிமாவை மொழிந்து கொண்டும் இருக்க வேண்டும்  .

உலகை விட்டும், உறவை விட்டும், சொத்தை விட்டும் சுகத்தை விட்டும் போகப் போகிறோம்  என்ற பதட்டம் வரக்கூடாது. எல்லாவற்றையும் தான் விட்டு விட்டுப் போகப் போகிறோமே இனி நமக்கு உலகில் என்ன இருக்கிறது? என்ற மரணத்துணிவு வேண்டும். [இந்தத் துணிவை அல்லா மக்களுக்கும் அல்லாஹ்  தருவானாக..]

முல்லா நசீருதீன் ..

முல்லா நசீருத்தின் அவர்கள் அப்போது தான் திருமணம் முடித்துத் தனது புது மனைவியைப் புகுந்தகம் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். கிராமத்திலிருந்து புறப்பட்ட படகு ஆற்றில்  சென்று கொண்டிருந்தது. அமைதியாக சென்று கொண்டிருந்த படகு அலைகளால தாக்கப்பட்டு ஆட்டம் போடா  ஆரம்பித்தது. படகுப் பயணிகளுக்குப்  பயம் கல்விக் கொண்டது . அனைவரும் அலற ஆரம்பித்து விட்டார்கள். முல்லா நசீருத்தின் தனது புது மனைவியைப் பார்த்தார். அந்தப் புதுப் பெண்  எந்த ஒரு அச்சமும் இல்லாமல் அமைதியாகவே இருந்தார்கள். ''எல்லோரும் கதறுகிறார்கள்! உனக்கு எந்த ஒரு மரண பயமும் இல்லையா? '' என்று முல்லா கேட்டார். ''நீங்கள் புதிதாக என்னை மணமுடித்த அன்புக் கணவர். எனக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால் நீங்கள் சும்மா இருந்து விடுவீர்களா? எப்படியாவது என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் அமைதியாக இருக்கிறேன் என்று சொன்ன அந்த மங்கை, ''உங்களுக்கு பயம் இல்லையா? என்று முல்லாவிடம்  கேட்டார் அந்த புதுப்பெண், அதற்குப் புன்னகையுடன் முல்லா...''  நான் எங்கோ பிறந்தேன்! நீ எங்கோ பிறந்தாய்! இன்று தான் உன்னை நிகாஹ் செய்து அழைத்துப் போகிறேன்  . உனக்கு ஒரு ஆபத்து என்றால் நான் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கையில் என்னைப் படைத்து இத்தனை வருடங்களாக வாழ வைக்கும் அல்லாஹ்  என்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை எனக்கு இருக்காதா?  அந்த நம்பிக்கையில் தான் நடப்பது நடக்கட்டும் என்று நான் பயமில்லாமல் அமைதியாக இருக்கிறேன்'' என்றார் .

இது படிப்பினை தரும் சம்பவம் இது. வாழ்வில் எந்த நிலை வந்தாலும் இறைவனிடம் நம்பிக்கை இருக்க வேண்டும். மரணம் நம்மைத் தழுவப் போகிறது என்ற நிலையில் இருக்கும்போது கூட பண்பட்ட மனித இதயம் பதறாமல் அமைதியாகவே இருக்கும்  .

அமைதி தேவை ..
நூற்றாண்டுகாலம் செல்வா சுக போகத்துடன் வாழ்ந்த மனிதராக இருந்தாலும் மரண  தருவாயில் இன்னும் கொஞ்சம் காலமாவது வாழ முடியாதா? என்ற ஏக்கப் பெருமூச்சுத்தான் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்  . எந்த வயதினராக இருந்தாலும் மரணத்தை  எப்போதும் எதிர்நோக்கி நிற்பவர்களே! மரணிப்பவர்களை விட உயிரோடு இருப்பவர்கள் தான் அதிகப் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். நமது குடும்பங்களில் மரணப் படுக்கையில் கிடப்பவர்களுக்கு அமைதியைக் கொடுப்பது மிக மிக  அபூர்வமாகி விட்டது. அமைதியைக் கெடுப்பதிலேயே அதிகமான நேரங்களைக் கழித்து விட்டு கண்ணீரும் அழுகையுமாக உயிர் பிரிய வைத்து விடுகிறோம் .

இதில் பெண்களாகிய நாமே மிகவும் மோசமாக நடந்து கொள்கிறோம். மரணப் படுக்கையில் கிடப்பவரிடம் அவர்களுக்குப் பாசமானவர்களை இழுத்து வந்து நிறுத்தி  '' இதோ பாருங்கள் உங்கள் பிள்ளையை... இதோ பாருங்கள் உங்கள் பேத்தியை'' என்று அமைதியாகப் பிரியும் உயிரையும் பதறப் பதறப் பிரித்து விடுகின்றோம்.

உறவின் கடமை ..

இது தான் அவர்களுக்கு நாம் செய்யும் உதவியா? நாமும் ஒரு நாள் மரணப் படுக்கையில் படுக்கப் போகிரவர்கல்தாம்  . அப்போது தான் நமது நிலை என்ன என்று நமக்கு தெரியும்  . ஆனால் அதை யாரிடமும் சொல்ல முடியாது . ஒருவர் மரணித்த பின் அந்த உடலின் மேல் விழுந்து  அழுது உருண்டு இம்சை செய்வது கூடாது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கதறி அழுவதும் கூடாது. அழுகை ஒரு இயற்கை. அதை யாரும் நிறுத்த முடியாது. அந்த அழுகையையும் செயற்கையாக்கி ஆர்ப்பாட்டம் பண்ணவும் கூடாது.

மரண நிலையில் உள்ளவர்களுக்கு அமைதியைக் கொடுப்பதும், மரணமாகி விட்டவர்களுக்கு நன்மையைச் சேர்ப்பிப்பதும்  தான் உண்மையான நன்மை. அது தான் உறவுக்கும்  உரிமைக்கும் உரித்தான கடமை. எது அவர்களுக்கு போய்  சேரும் என்று  அறிந்து செய்யுங்கள்! மார்க்கத்தில் இல்லாத பழக்க வழக்கத்தை செய்ய முற்படாதீர்கள்! அல்லாஹ்  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டு  செயல்படுத்துங்கள் ! அல்லாஹ்வும் , அவனுடை தூதர் நபி [ஸல்] அவர்கள் காட்டி தந்த வழிமுறைப் படி பின்பற்றுங்கள்! மூன்றாவது வழியை தேடாதீர்கள்! முன்னோர்களின் படி நடக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்! நாம் இருக்கும் பாதை சத்திய பாதை இஸ்லாம்  என்பதை மறந்து விடாதீர்கள்! அல்லாஹ்  நம் அனைவருக்கும் அருள் செய்வானாக...
அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள்