மனைவியை பேணுதல்

மனைவியை பேணுதல்
“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.” (ஸஹீஹ் முஸ்லிம்)
(நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)

மூமினான மனைவியை வெறுக்காதீர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
நல்ல மனைவிக்கு அடையாளம்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
மனைவியிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது! நபிமொழி!
பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மனைவியின் நியாயமான உரிமையை பரிக்காதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)
நீங்கள் சிறந்தவரா? சுய பரிசோதனை செய்து பாருங்கள்!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)

கருத்துகள்