யதார்த்த வாழ்க்கையில் நாம்(புறம்/குறை part2)


 யதார்த்த வாழ்க்கையில் நாம்(புறம்/குறை part2)

குறை சொல்தல் இன்றைக்கு ஒரு தொற்று நோயாகவே மாறிவிட்டது. ஒரு வகையில் மிகவும் எளிதான ஒரு வேலை குறை சொல்லுதல். எந்த விதமான தார்மீகப் பொறுப்பும் ஏற்க மறுப்பவர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம் குறை சொல்லுதல்.


சின்ன வயதிலேயே அது நமது இரத்தத்தோடு கலந்து விட்டது. ஓடிப் போவோம், கல்லில் இடித்துக் கொள்வோம், திட்டுவது என்னவோ அந்தக் கல்லைத் தான் இல்லையா ? குழந்தைகள் சொன்ன பேச்சைக் கேட்கலேன்னா இப்போ கூட தொலைக்காட்சியைத் தானே திட்டுகிறோம் !


ஒரு நிறுவனத்துக்கு ஒரு புது மேலதிகாரி வந்தார். அவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும்போது பழைய அதிகாரி மூன்று மூடப்பட்ட கவர்களைக் கொடுத்துச் சென்றார். “எப்போதாவது பெரிய பிரச்சினை வந்தால் மட்டும் பிரியுங்கள்” எனும் விண்ணப்பத்தோடு.


புதிய அதிகாரி பதவியேற்றார். ஒரு வருடம் சிக்கல் ஏதும் இல்லாமல் போனது ! போதாத காலம் முதல் சிக்கல் வந்தது. பணத் தட்டுப்பாடு. என்ன செய்யலாம் என யோசித்தபோது அவருக்கு மூடப்பட்ட கவர்களின் ஞாபகம் வந்தது. முதலாவது கவரைப் பிரித்தார். “பழைய மேலதிகாரி மேல் பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். தப்பித்தார். அடுத்த ஆண்டும் அதே போல ஒரு பிரச்சினை. இப்போதும் கவரைப் பிரித்தார். “கமிட்டி மீது பழியைப் போடு” என்றிருந்தது ! அப்படியே செய்தார். அப்போதும் தப்பித்தார். மூன்றாவது ஆண்டும் பிரச்சினை வந்தது. பூதாகரமானது. மூன்றாவது கவரை எடுத்தார். பிரித்து வாசித்தார். “மூன்று கவர்களை நீ உருவாக்கும் நேரம் வந்து விட்டது” என்று எழுதப்பட்டிருந்தது !


நகைச்சுவையாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இதில் இருக்கும் உண்மை நிதர்சனமானது.


அடுத்தவர்களை மட்டம் தட்டுவதன் மூலம் தனது உயரத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சி இது. ஆழ்மனதில் உறைந்து கிடக்கும் நமது விரோதத்தின் வேர்களே இந்த குறையெனும் முட்களை விளைவிக்கின்றன.


பிடிக்காதவர்கள் மீது தான் குறையும், குற்றமும், விமர்சனமும் போர்த்தப்படுகிறது.  “உன் மேல எனக்கு அன்பு ரொம்ப ஜாஸ்தி, அதனால எப்போதும் குறை சொல்வேன்” என்று யாரும் சொல்வதில்லை. அடுத்தவருடைய வளர்ச்சியோ, நிம்மதியோ, புகழோ, அழகோ மனசுக்குள் விதைக்கும் பொறாமை விதைகள் தான் பெரும்பாலும் குறைகளாய் முளைக்கும்.


ஒரு கதை உண்டு

ஒரு மாணவர் ஓவியக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.


அவருக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. நாம் ஒரு அற்புதமான ஓவியம் ஒன்றை வரைந்து அதை பொதுமக்கள் அனைவரின் பார்வையும் படுகின்ற இடத்தில் வைக்க வேண்டும். மேலும் அதில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டும்படி பொதுமக்களுக்கு வேண்டுகோளும் வைக்க வேண்டும் அதன் மூலம் தனது ஓவியத் திறமை எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினார்.


அதை தனது ஆசிரியரிடமும் தெரிவித்தார். அவரும் தனது மாணவரை ஊக்குவிக்கும் வகையில் அதற்கு அனுமதியும் வழங்வி விட்டார்.


அந்த மாணவர் மிகவும் உற்சாகத்துடன் ஓர் அழகான ஓவியத்தை வரைந்து பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைத்து அதில் உள்ள குறைபாடுகளை அடையாளம் இட்டு காட்டவும் என எழுதி அதனருகில் ஒரு எழுதுகோலையும் வைத்து விட்டார்.


ஒரு சில நாட்கள் கழித்து அந்த ஓவியத்தை எடுக்க வந்த மாணவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.


காரணம்… அந்த ஓவியத்தின் அனைத்து பகுதிகளும் குறையுடையதாக அடையாளம் இடப் பட்டிருந்தன. அம்மாணவர் மிகவும் வருத்தத்துடன் தனது ஆசிரியரிடம் வந்து முறையிட்டார்.


அதைக் கேட்ட ஆசிரியர் புன்சிரிப்புடன் தனது மாணவரை நோக்கி கவலைப்படாதே இன்னொரு ஓவியம் அதே போன்று வரைந்து அந்த இடத்தில் வைத்து விட்டு இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும் என பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் எழுதி வைத்து விடு. என ஆலோசனை கூறினார். மாணவரும் தனது ஆசிரியர் சொன்னதைப் போன்றே செய்துவிட்டு வந்துவிட்டார்.


ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த ஓவியத்தை எடுக்க வந்த போது மிகவு‌ம் ஆச்சரியம் காத்திருந்தது. அந்த ஓவியத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. இதை கண்ட மாணவர் தனது ஆசிரியரிடத்தில் நடந்ததை கூறி விபரம் கேட்ட போது…


ஆசிரியர் சொன்னார்.. மக்களுக்கு பிறரின் குறைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்த மட்டுமே தெரியும். பெரும்பாலான மக்களுக்கு அதை சீர்திருத்தம் செய்வதற்கான வழி தெரியாது என விளக்கம் கூறினார்.


ஆக நாம் பிறர் குறைகளை அலசி ஆராய்ந்து அவற்றை விமர்சித்து சம்மந்தப்பட்டவர்களை அவமதிப்பதை தவிர்த்து அவர்களின் குறைகளை அவர்களிடமே பக்குவமாக எடுத்துச் சொல்லி சீர்திருத்தம் செய்வதே சரியான வழிமுறையும், சமூக அக்கறையும் ஆகும்.


சமூக அமைதிக்கான 3 கட்டளைகளை உயர்ந்தோன் அல்லாஹ் பிறப்பிக்கிறான்.


1.சமூகத்தில் ஆண்களோ பெண்களோ யாரும் யாரையும் அவமானப்படுத்தவோ ஏளனம் செய்யவும் கூடாது ஒருவர் தம்மை உயர்வாக மதித்து பிறரை மதிக்கும் போது அங்கு சௌஜன்யம் குலையும்.


2. பரஸ்பரம் குறை சொல்லி திரியக்கூடாது இது துவேஷத்தை வளர்க்கும்.


3. காயப்படுத்தும் வகையில் பட்டப்பெயர் சொல்லி கூப்பிடக்கூடாது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


நன்றி ஜும்மாமேடை வேர்ட்பிரஸ் 

source:jummaamedai.wordpress.com


புறம்/குறை part 2

கருத்துகள்