அல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு, அச்சம், ஆதரவு[ அவசியம் படிக்கவும்]

அல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு, அச்சம், ஆதரவு[ அவசியம் படிக்கவும்]
ஒவ்வொரு முஸ்லீம் ஆண்/பெண்   அறிந்துகொள்ளவேண்டிய ஓர் அருமையான கட்டுரை. அவசியம் படிக்கவும் , படித்து விட்டு மற்றவர்களுக்கு பகீர் செய்யவும்.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக !
வணக்க வழிபாடு குறித்து இஸ்லாம் போதிப்பதில் தனித்தன்மையான விஷயம் ஒன்று உள்ளது. மிக முக்கியமான, மிகவும் அழகான அவ்விஷயம் இதுவே:அல்லாஹ்வை வணங்குகிறவர்கள் தங்கள் உள்ளங்களில் அவன் மீதான அன்பையும் அச்சத்தையும் ஆதரவையும் உணர்ந்த நிலையில் வணங்க வேண்டும். இந்த மூன்று தன்மைகளையும் எப்படி அல்லாஹ்வை வணங்கும்போது கைக்கொள்வது என்கிற கேள்வி முக்கியமானது. இதற்குரிய பதிலை ஒவ்வொரு முஸ்லிமும் கற்றுக்கொள்வது அவசியமே. காரணம், வணக்கத்தின் விஷயத்தில் வழிதவறிச் சென்ற ஒவ்வொரு பிரிவினரும் இங்குதான் சருகினார்கள். நேர்வழியிலிருந்து தடம்புரண்டார்கள்.


பிற மதங்கள் இவ்விஷயத்தில் வழிகெட்டிருப்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். தேவனை நேசி என்றும், இயேசுவை நேசி என்றும் கிறித்துவர்கள் கூறுவதின் மூலம் கடவுளுக்குப் பயப்படவும் வேண்டும் என்பதை மறுத்துவிட்டார்கள். யூதர்களைப் பொறுத்தவரையோ அவர்களின் உள்ளங்கள் முழுதும் இறைவன் மீது ஆதரவு வைத்திருத்தல் எனும் நிலையில் இருக்கிறது. தாங்கள் நரக நெருப்புக்குப் போகப் போவதே இல்லை என்றும், ஏனெனில் தாங்கள் வாக்களிக்கப்பட்ட மக்கள் என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை எந்த வணக்கமாக இருந்தாலும் அதில் மூன்று தன்மைகள் இருந்தாக வேண்டும். இல்லையெனில், அது முழுமை பெறாது. அல்லாஹ்வின் மீது அன்பு, அவனது கருணை மீது ஆதரவு, அவனது தண்டனை மீது அச்சம் ஆகியவை அதில் இணைந்திருக்க வேண்டும். குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஃபாத்திஹாவைச் சந்தித்தால் இவ்விஷயம் அங்கிருப்பதைப் பார்க்க முடியும்.

பொருளடக்கம்
வசனம் 1
வசனம் 2
வசனம் 3
சமநிலை சிதறுதல்
முடிவுரை
ஆதாரக்குறிப்புகள்

வசனம்1: "எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது."

குர்ஆனின் திறப்பு வசனமாக உள்ள இவ்வசனத்தில் நமக்கு அல்லாஹ்வின் நேசம் உள்ளது. இதை ஓதும் ஒவ்வொரு தடவையும் நாம் நமது நேசத்தை அல்லாஹ்விடம் வெளிப்படுத்துகிறோம். எப்படி அது என்று நீங்கள் கேட்பீர்கள். ஆம், இவ்வசனத்தில் அல்லாஹ்வை நமது இறைவன் (ரப்பு) என்றும் அகிலங்களின் இறைவன் என்றும் நாம் சாட்சி கூறுகிறோம். ரப்பு என்பதைப் பொதுவாக இறைவன் என்று மொழிபெயர்க்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் இப்பெயருக்கு அது முழுமையான மொழிபெயர்ப்பாக ஆகாது. இப்பெயரிலுள்ள எல்லா அர்த்தங்களும் இறைவன் என்று சொல்லும்போது வெளிப்பட்டுவிடாது. உண்மை என்னவெனில் ரப்பு என்றால் அனைத்தையும் படைத்தவன், அனைத்திற்கும் உணவளிப்பவன், வளர்ப்பவன், அவனே உயிர் கொடுக்கிறான், மரணத்தை அளிக்கிறான், நமக்கொரு நன்மை கிடைத்தால் அது அவனிடமிருந்து கிடைத்ததே, அனைத்துமே அவனைச் சார்ந்துதான் நடக்க முடியும், அவன் நாடாமல் எந்த ஒன்றுமே நடக்க முடியாது. இத்தனை அர்த்தங்களும் உள்ள பெயரே ரப்பு ஆகும். இன்னும் ஒரு முஸ்லிமுக்கு அந்த ரப்புதான் சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுகிறான். நல்ல குணங்களும் ஒழுக்கங்களும் அவனிடமிருந்தே கிடைக்கின்றன.

ஆக நாம் அல்லாஹ்தான் நமது ரப்பு என்று சாட்சி கூறும்போது அவன் நமக்குப் புரிந்து எல்லா அருள்களையும் ஏற்றுக்கொள்கிறோம். அவனது அருட்கொடைகள் எத்தனை எத்தனையோ. அவற்றை நாம் எண்ணி முடிக்க முடியாது. இந்த நிலையில் அவனை நாம் நேசிக்காமல் இருக்க முடியுமா? இந்த உலகில் நமக்கு ஒருவர் சின்ன அன்பளிப்பு செய்தாலும், நம்மிடம் ஏதேனும் ஒரு விதத்தில் சின்ன உபகாரம் செய்தாலும், அவர் மீது நமக்கு அன்பு வளர்கிறது. சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் நமக்கு எத்தனையோ அருட்கொடைகளைப் புரிந்துள்ள நிலையில் அவனை நாம் எவ்வளவு நேசிக்க வேண்டும்? நமது குடும்பம், வீடு, பாதுகாப்பு, உணவு, ஆரோக்கியம் இப்படி எத்தனையோ விஷயங்களில் அவன் புரிந்துள்ள அருள்களை விட அவன் நமக்கு இஸ்லாமைக் கொண்டும் சுன்னாவைக் கொண்டும் நேர்வழி காட்டியுள்ளானே அது எவ்வளவு பெரிய அருள்? எனவே நமது அன்பும் நன்றியுணர்வும் மேலோங்கிய நிலையில் இப்படிக் கூற வேண்டும்: “எல்லாப் புகழும் நன்றிகளும் அகிலங்களைப் படைத்து வளர்த்து வரும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.”

வசனம்2: "அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன்."

முதல் வசனத்தில் அல்லாஹ்தான் நமது ரப்பு என்று அவன் கூறினான். இந்த அடுத்த வசனத்தில் அவனது இரண்டு அழகிய பெயர்களைக் கூறியுள்ளான். அர்ரஹ்மான், அர்ரஹீம் என்பவையே அவை. அர்ரஹ்மான் என்றால் அவன் அளவற்ற அருளாளன் என்று பொருள். அவனது இயல்பும் உள்ளமையும் கருணையும் அருளும் மிக்கதாக உள்ளது. அர்ரஹீம் என்றால் அவன் நிகரற்ற அன்பும் கருணையும் உள்ளவன் என்று பொருள். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், அவனது செயல்கள் அனைத்தும் கருணையைக் காட்டக்கூடியவை. அவன் தனது படைப்புகள் மீது கருணை காட்டுகிறான். (இந்த விளக்கம் இப்னுல் கய்யிம் (ரஹ்) தமது பதாயில் ஃபவாயிதில் கூறுவதாகும்.)

ஆக அல்லாஹ்வின் இந்த இரண்டு பெயர்களை நாம் ஓதும்போது அவன் மீது ஆதரவு உண்டாகிறது. அவன் மிகவும் கருணையும் அன்பும் உடையவன் என்பதால் அவன் நமது பாவங்களை மன்னிப்பான் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அந்தப் பாவங்கள் எவ்வளவு இருந்தாலும் அவன் மன்னிக்கக்கூடியவனே. நாம் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. ஏனெனில் அவன் கூறுகிறான்:
(நபியே!) நீர் கூறும்: ‘என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கருணை உடையவனுமாக இருக்கின்றான்.(39:53)

நாம் அவனுக்குப் பயந்தும் நடக்க வேண்டியுள்ளது என்பதை அல்ஃபாத்திஹாவின் அடுத்த வசனம் சொல்லிவிடுகிறது.

வசனம்3: "நியாயத்தீர்ப்புநாளின் அதிபதி."

இந்த வசனத்தை ஓதும்போது நமக்கு நாமே மறுமைநாளை ஞாபகப்படுத்திக்கொள்கிறோம். அது அச்சுறுத்துகிற நாளாக உள்ளது. நாம் அல்லாஹ்வின் முன்பு நிற்போம். நிர்வாணமாக, விருத்தசேதனம் செய்யப்படாதவராக, வெறுங்காலோடு நிற்போம். சிலர் தங்கள் வியர்வையிலேயே மூழ்கிவிடுவார்கள். அது பூமியில் எழுபது முழங்கள் இறங்கியிருக்கும். மக்கள் அந்நாளில் போதையில் இருப்பவர்கள் போல இருப்பார்கள். ஒவ்வொரு மனிதனும் தனது பாவங்கள் குறித்து அவனிடம் பதிலளித்தே ஆக வேண்டும். சிறியதோ, பெரியதோ எந்தப் பாவத்தையும் அவன் விட்டு வைக்கமாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான்.(99:7-8)

எனவே நாம் இந்த மூன்றாவது வசனத்தை ஓதியவுடன் நமக்கு மறுமைநாளும் அதன் விசாரணையும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. நமது எந்தச் செயலுக்கும் நாம்தான் பொறுப்பாளி. நம்மை அவன்தான் தீய செயல்களை விட்டுப் பாதுகாக்க வேண்டும்.

இதற்குப் பிறகு அடுத்த வசனம் இப்படி ஆரம்பிக்கிறது: ‘உன்னையே வணங்குகிறோம்.’ அதாவது, அல்லாஹ் ஒருவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவனை எப்படி வணங்குவது? அதுதான் அன்பு, அச்சம், ஆதரவு இவற்றுடன் வணங்குவது. இந்தத் தன்மைகளை வளர்த்துக்கொள்ள நமக்கு அல்லாஹ்வின் உதவி வேண்டும் அல்லவா? ஆகவே அடுத்து கூறுகிறோம்: ‘உன்னிடமே உதவி தேடுகிறோம்.’ (வசனம் 4)

சமநிலை சிதறுதல்

நமது வணக்கத்தில் அன்பு, அச்சம், ஆதரவு ஆகியவை இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட பின்பு ஒரு கேள்வி எழுகிறது. இந்த மூன்று பண்புகளும் என்ன அளவுகளில் நமது வணக்கத்தில் இருக்க வேண்டும்? இதற்குப் பதில் காண மறுபடியும் நாம் குர்ஆனுக்குச் செல்வோம்.

அல்லாஹ் கூறுகிறான்: (அல்லாஹ்வுடைய தண்டனைக்குப்) பயந்தும், (அவனுடைய வெகுமதிக்கு)ஆதரவுவைத்தும்அவனிடம்பிரார்த்தனை செய்துகொண்டிருங்கள்.(7:56)

அவர்கள் (உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தியும், தங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைத்தும், பயந்தும் (அவனைப்) பிரார்த்தனை செய்வார்கள்.(32:16)

ஆக, அச்சமும் ஆதரவும் நமது உள்ளங்களில் சம அளவில் இருக்க வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் மூலம் பின்வரும் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறுவன் மரணத்தின் தருவாயில் இருந்தான். நபியவர்களிடம் அவனிடம் வந்து, “எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்கள். அவன், “அல்லாஹ்வின் தூதரே, நான் அல்லாஹ்வின் ஆதரவு வைத்த நிலைக்கும், எனது பாவங்களை எண்ணிப் பயந்த நிலைக்கும் மத்தியில் இருக்கிறேன்” என்று கூறினான். அப்போது நபியவர்கள், “ஓர் அடியான் எதை நாடி ஆதரவு வைக்கிறானோ, எதை விட்டுத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அஞ்சுகிறானோ, அவற்றை அல்லாஹ் கொடுக்காமல் அவனது உள்ளத்தில் இந்த இரண்டு தன்மைகளும் ஒன்றிணையாது” என்று கூறினார்கள். (அஹ்காமுல் ஜனாயிஸ், இமாம் அல்பானீயால் ஆதாரப்பூர்வமானதென உறுதிப்படுத்தப்பட்டது, எண். 2)

எனவே நாம் எந்த நற்செயல் செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்வான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். அதே சமயம், அது ஏற்கப்படத் தகுதியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்புண்டு என்று பயப்படவும் வேண்டும். இதுபோல் நாம் ஒரு பாவத்தைச் செய்துவிட்டால், நாம் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டால் அவன் அதை மன்னிப்பான் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். அதே சமயம், அது குறித்து விசாரணையும் நடக்கலாம் என்று பயப்படவும் வேண்டும்.

இந்த சமநிலையை நமது அழைப்புப்பணியின்போதும் வெளிப்படுத்த வேண்டும். நாம் மற்றவர்களைச் சத்தியத்திற்கு அழைக்கும்போது, அவர்கள் இனி தங்கள் பாவங்கள் பற்றி கவலையே படத்தேவையில்லை என்ற மனநிலையையும் அவர்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடாது. அதே சமயம், அவர்கள் தங்கள் பாவங்களால் அழிந்து நாசமாகிவிட்டார்கள், இனி ஒன்றுமில்லை என்ற மனநிலையையும் ஏற்படுத்திவிடக் கூடாது. மாறாக, ஆர்வமூட்டலும் எச்சரிக்கை செய்தலும் சம அளவில் இருக்க வேண்டும். நாம் அவர்களுக்கு நரகத்தின் கடுமையைச் சொல்வதுடன், சொர்க்கத்தின் அருள்களையும் சொல்ல வேண்டும். குர்ஆனை நாம் கண்டால் அதில் அல்லாஹ் இவ்வாறே சமநிலையைக் காட்டுகிறான்.

அவன் கூறுகிறான்: நிச்சயமாக உம்முடைய இறைவன் வேதனை செய்வதில் மிகத் தீவிரமானவன். மேலும், நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையவனாகவும் இருக்கின்றான்.(7:167)

அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களில் இரண்டு மனிதர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் ஒரு குறிக்கோளுக்காக முயற்சி செய்து வந்தனர். ஒருவர் பாவம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இன்னொருவர் தன்னால் முடிந்த வரை உலகில் சிறந்ததைச் செய்ய முயற்சி செய்தார். அல்லாஹ்வின் வணக்கத்தில் மூழ்கியிருந்தவர், பாவம் செய்கின்ற மனிதரைக் கவனித்தார். அப்போது அந்த மனிதரிடம், “இப்பாவத்தை விட்டு விலகிக்கொள்” என்று கூறுவார். ஒரு நாள் இவர் அம்மனிதர் பாவம் செய்வதைக் கண்டு, “இதிலிருந்து விலகிக்கொள்” என்று சொன்னார். அதற்கு அவர், “என்னை எனது இறைவனிடமே விட்டுவிடு. நீ என்ன என்னைக் கண்காணிப்பவனா?” என்று கேட்டார். அப்போது இவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அல்லாஹ் உன்னை மன்னிக்கவே மாட்டான். உன்னைச் சொர்க்கத்தில் அனுமதிக்கவும் மாட்டான்” என்று சொல்லிவிட்டார். பிறகு இருவரின் உயிர்களும் கைப்பற்றப்பட்டது. அவர்கள் அகிலங்களின் இறைவனிடம் கொண்டு செல்லப்பட்டனர்.

அப்போது அல்லாஹ் சிறந்த வணக்கசாலியாக கடும் முயற்சி செய்தவரிடம், “உனக்கு என்னைப் பற்றி அறிவு இருக்கிறதா? அல்லது என் கையில் உள்ள அதிகாரம் உன்னிடம் இருக்கிறதா?” என்று கேட்டான். பிறகு பாவியாக இருந்த மனிதனை நோக்கி, “போ. நீ எனது கருணையால் சொர்க்கம் நுழைந்துவிடு” என்று கூறினான். வணக்கசாலியின் விஷயத்தில், ‘இவனை நரகத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்’ என்றான்.

அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்: எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அந்த மனிதர் பேசிய வார்த்தையானது இந்த உலகையும் மறு உலகையும் அழித்துவிடக்கூடியது. (சுனன் அபூதாவூது 4901 ஸஹீஹ் அல்பானீ)

ஆகவே நாம் எந்த மனிதரையும் அவர் அழிந்துவிட்டார், நாசமானார் என்றோ அல்லது அதுபோன்ற வார்த்தைகளைக் கொண்டோ பேசிவிடக் கூடாது. அது மிகப் பெரிய பாவமாகும். அதே சமயம் நாம் பெரும்பாவங்கள் குறித்து அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யவும் வேண்டும். ஏனெனில் அவற்றுக்குத் தண்டனை இருப்பதைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் எச்சரிக்கிறான். அவர்களைத் தண்டிப்பதும் மன்னிப்பதும் அல்லாஹ்வின் விருப்பமாகும்.

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) கூறுகிறார்கள்: அல்லாஹ்வைத் தேடிச் செல்லும் பாதையில் ஒரு முஃமினின் உள்ளமானது ஒரு பறவையைப் போன்றது. அன்பு என்பது அதன் தலை. அச்சப்படுதலும் ஆதரவு வைத்தலும் அதன் இறக்கைகள். தலையும் இறக்கைகளும் நல்ல நிலையில் இருந்தால், பறவை சரியாகப் பறக்கும். தலை இல்லையென்றால் அது செத்துவிடும். இறக்கைகளை இழந்துவிட்டாலோ அது வேட்டையாடப்பட்டுவிடும்.

முடிவுரை

அன்பு, அச்சம், ஆதரவு ஆகிய மூன்று தன்மைகளும் ஒரு வணக்கத்தில் தவறிப்போனால் அது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை இப்போது புரிந்திருக்கலாம். சத்தியப் பாதையிலிருந்து தடம்புரள்வதாகவே அது அமையும். எனவே ஒவ்வொரு முஸ்லிமும் தமது உள்ளத்தில் இந்த மூன்று தன்மைகளைச் சரியாக பேணிக்கொள்ள வேண்டும். முன்பு நாம் குறிப்பிட்டபடி, அச்சமும் ஆதரவும் சம அளவிலும், அன்பு மிக உயர்ந்த அளவிலும் இருக்க வேண்டும். இதையே ஃபுளைல் இப்னு இயாழ் (ஹி.187) கூறுகிறார்கள்: அச்சத்தை விட அன்பு சிறந்தது. அச்சம் நம்மில் பாவத்தைச் சோதித்துப் பார்க்கிறது. அன்போ நம் மீது கடமையாக்கப்பட்டதை மனப்பூர்வமாகச் செய்யத் தூண்டுகிறது.

கருத்துகள்