நாங்கள் யார்?

 




நாங்கள் யார்?


-உஸ்தாத் MF அலீ




நாங்கள் யார்?



நாங்கள் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கையைச் சார்ந்தவர்கள். அதாவது, நபிவழியையும் நபித்தோழர்களையும் பின்பற்றியவர்கள் சென்ற பாதையே சீரான, செம்மையான, நேரிய பாதை என்று நம்புகின்றவர்கள். இஸ்லாமின் பெயரால் பல பிரிவினர்கள் வழிதவறிய கொள்கைகளையும், பாவங்கள் நிறைந்த வாழ்க்கை முறைகளையும் பரப்பியபடி இயங்கிவருவதால், அவர்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டவே எங்களை அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்காரர்கள் என்கிறோம். இதுவோர் இயக்கப் பெயர் அல்ல. குறிப்பிட்ட கொள்கைகளையும் பண்புகளையும் பாரம்பரிய நபிவழி அறிஞர்களின் அறிவுரைப்படி பின்பற்றுவோரின் அடையாளப் பெயர். எனவே. 'குர்ஆனும் ஹதீஸுமே எங்கள் கொள்கை' எனும் வாதத்தை முன்வைத்து, 'நாங்கள் சொல்வதுதான் மார்க்கம் என்று எங்கள் சுயக்கருத்துகளை மார்க்கமாக ஒருக்காலும் வாதிடமாட்டோம். அது நமது இரட்சகன் நம் அனைவருக்குமே தடுத்ததல்லவா? ஒரு நீண்ட பாரம்பரியக் கல்வி மிகவும் பத்திரமாக மறுமைநாள் வரை நமக்கு வழங்கப்பட்டுவிட்டதே? புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்துச் சொல்ல என்ன இருக்கிறது அல்லாஹ்வின் அடியார்களே?



நாங்கள் யார்?



அஹ்லுஸ் ஸுன்னாவின் கல்வி என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தொடங்குகின்றது. இறைத்தூதர் மிகத் தெளிவாகப் போதித்துவிட்டார். அதையே அல்இஸ்லாம், அஸ்ஸுன்னா என்கிறோம். அந்தத் தூதரின் போதனைகளை உண்மையான விசுவாசத்தோடும், கீழ்ப்படிதலோடும் அவரின் தோழர்கள் கற்றுக்கொண்டு பின்பற்றினார்கள். அவர்களையே முதல் அஹ்லுஸ் ஸுன்னா என்கிறோம். அவர்களிடம் வலுவான கொள்கை ஒற்றுமை இருந்ததால், அவர்களே முதல் அல்ஜமாஅத்தும்கூட. ஆக, இவர்களிலிருந்து தொடங்கியது அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் கொள்கைகள். இவர்களைப் பின்பற்றி இதே பாதையில் வந்தார்கள் அடுத்த தலைமுறையான தாபிஊன். இவர்களைப் பின்பற்றியே அடுத்த தலைமுறையான தபஉ தாபிஈன் வந்தார்கள்.



எங்கள் இரட்சகனின் திருப்பொருத்தத்தை நாடியவர்களாக நாங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறோம். இந்த மூன்று தலைமுறைகள்தான் எங்களின் கொள்கைகளுக்கும் மார்க்கப் புரிதல்களுக்கும் முன்மாதிரிகள்; அளவுகோல்கள். ஏனென்றால், இவர்களையே நம்முடைய இரட்சகனின் தூதர் மிகச் சிறந்த தலைமுறையினராக அங்கீகரித்து முன்னறிவிப்புச் செய்திருக்கிறார்கள். இவர்களையே அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ் அல்லது ஸலஃபுஸ்ஸாலிஹீன் (முன்சென்ற நல்லோர்கள்) என்று இஸ்லாமிய பேரறிஞர்கள் எல்லோருமே ஏற்றுக்கொண்டார்கள். அகீதா (இஸ்லாமிய நம்பிக்கைகள்), ஃபிக்ஹ் (சட்டதிட்டங்கள்), தஃப்சீர் (திருக்குர்ஆன் விளக்கங்கள்), ஹதீஸ் (நபிவழிச் செய்திகள்) ஆகிய இஸ்லாமியக் கல்வியின் அனைத்துத் துறைகளிலும் இந்த ஸலஃபைப் பின்பற்றுகிறவர்களே உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் ஆவார்கள்.



நாங்கள் யார்?



ஸலஃப் சென்ற பாதையே நேரான, பாதுகாப்பான, வழிபிறழாத, குழப்பமற்ற தெளிவான பாதை என்று உறுதியாக நம்புகிறோம். இதே பாதையில்தான் ஃபிக்ஹ் துறைக்குப் பெரும் சேவையாற்றிய நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் சென்றார்கள். அவர்களோடு நபிவழியைப் பாதுகாக்கப் பெரும் தியாக வாழ்க்கை வாழ்ந்த (ஹதீஸ் ஆய்வாளர்கள்) முஹத்திஸ்களும் சென்றார்கள். (குர்ஆன் விரிவுரையாளர்கள்) முஃபஸ்ஸிர்களும் சென்றார்கள். ஆகவேதான், இவர்கள் அனைவரும் அஹ்லுஸ்ஸுன்னா (நபிவழிக்காரர்கள்), அஹ்லுல் ஹதீஸ் (நபிமொழிக்காரர்கள்), அஹ்லு இல்ம் (கல்விமான்கள்) போன்ற பண்புப் பெயர்களால் கண்ணியப்படுத்தப்படுகிறார்கள். நாங்களும் இவர்களையே போற்றுகின்றோம். இவர்களின் பாதைக்கு எதிராகச் சென்று முஸ்லிம் சமூகத்தைத் தங்களின் நூதனமான சுயக்கருத்துகள் மூலம் பிரிவினையில் தள்ளிய அனைத்துக் கூட்டத்தினரையும் புறக்கணிக்கிறோம்.



அதில் முதலாவதாக, ஷீஆ எனும் ராஃபிளாக்களின் கொள்கைகளையும் அவர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிப்பவர்களையும் புறக்கணிக்கிறோம். நபித்தோழர்கள்மீது குரோதம் கொண்ட இந்த ராஃபிளாக்களின் நச்சுக் கொள்கைகள் முழு முஸ்லிம் சமூகத்திற்கே எதிரானவை. இவர்களின் பல கொள்கைகள் ஊடுருவியதாலே ஏகத்துவத்தின் தூதைச் சுமக்கின்ற நம் சமூகத்தில்கூட இணைவைப்பும் அனாச்சாரங்களும் நுழைந்துவிட்டன.



இரண்டாவதாக, கவாரிஜுகளின் கொள்கைகளையும் அவர்களுடைய சிந்தனைப் போக்கில் இயங்குகின்றவர்களையும் எச்சரிக்கிறோம். நாம் நமது இரட்சகனுக்கு அஞ்சி நடப்போமாக! நேர்வழி சென்ற நமது கலீஃபாக்களில் உஸ்மான் (ரலி) அவர்களையும் அலீ (ரலி) அவர்களையும் கொலை செய்த பெரும்பாவிகள் இந்தக் கவாரிஜுகள். முஸ்லிம் ஆட்சியாளர்களை எதிர்த்துக் களமாடுவதையே இஸ்லாமிய அடிப்படை அரசியல் செயல்பாடாக இவர்கள் கட்டமைத்தார்கள். இவர்களின் கிளர்ச்சி சிந்தனையால் பெரும் பாதிப்புகளையும் பதற்றங்களையும் சமூகம் எதிர்கொண்டது. இணைவைப்புக்கும் இறைநிராகரிப்புக்கும் எதிரான சீர்திருத்தப்பணி திசைமாறி, ஒற்றுமை சீர்குலைந்தது. அசத்தியச் சித்தாந்தங்களுடன் கைகுலுக்கி அழிகின்ற அறியாமை மக்கள் முஸ்லிம்களில் உருவானார்கள். அல்லாஹ்வே, உன் அடியார்களைக் காப்பாற்று.



மூன்றாவதாக, முஅதஸிலாக்களின் கொள்கைப் போக்கில் மார்க்கத்தை அணுகக்கூடிய தர்க்கவாதிகளையும் நாங்கள் புறக்கணிக்கிறோம். 'கேட்டோம்: கட்டுப்பட்டோம்' என்ற பணிவுக்கும் பண்புக்கும் முரணாக இந்தக் கூட்டத்தினர் இயங்குகிறார்கள். மார்க்கத்தின் மூலாதாரங்களில் தெளிவாக உறுதிசெய்யப்பட்ட நம்பிக்கைகளையும் சட்டங்களையும்கூட சந்தேகத்திற்கு உள்ளாக்குகிறார்கள். அவற்றை மார்க்கத்தின் பெயராலேயே பரப்பவும் செய்கிறார்கள். சுயபுத்தியில் தோன்றும் எண்ணங்களை மார்க்கத்தின் நிலைப்பாடுகளாக மாற்றிக்காட்டுகிறார்கள். தத்துவ, இலக்கிய, ஜனநாயக அடிப்படைகளின்மீது நின்று எதையும் ஹலால் ஆக்கிக்கொள்கிறார்கள்.



நாங்கள் இது போன்ற எல்லாக் கூட்டத்தினரின் நேர்வழிக்காகவும் பிரார்த்தனை செய்வதோடு, இவர்களுடன் ஒன்றிக்கலக்காமல் விலகிநின்று சத்தியத்தையும் அசத்தியத்தையும் பொதுஜனங்களுக்குப் பிரித்துக்காட்ட நாடுகின்றோம். எனவே, அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தாகிய எங்களுக்கும் மற்ற கொள்கைவாதிகளுக்கும் இடையே 'யாரின் விளக்கத்தில் சத்தியமுள்ளது?' என்று தீர்ப்பளிப்பதற்கு ஸலஃபின் வாழ்க்கையும் வார்த்தைகளுமே ஆதாரங்களாக எழுந்துநிற்கின்றன என நம்புகின்றோம். கலஃப் எனப்படும் பிற்காலத்தில் வந்தவர்கள் அந்த ஸலஃபுக்கு முரண்படாத வரை, எதிர்த்து நிற்காத வரைதான் அஹ்லுஸ் ஸுன்னா ஆவார்கள்.



நாங்கள் யார்?



ஸலஃபின் மார்க்கப் புரிதலை மட்டுமே சார்ந்து இயங்குவதும், அவர்களின் புரிதலுக்கும் ஆதாரங்களுக்கும் எதிராக மக்களை வழிதவறச் செய்கின்ற நூதனச் சிந்தனைகளுக்கு மறுப்பளித்து கல்விச் சீர்திருத்தம் செய்வதும், இதனை இதே கொள்கை கொண்ட மூத்த அறிஞர்களின் உபதேசப்படி முன்னிருத்துவதுமே எங்கள் அழைப்பியல். நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் அனைவருமே ஸலஃபீ இமாம்களே. நான்கு மத்ஹபுகளின் இமாம்களும் ஸலஃபீகளே. இந்த நன்மக்கள் ஸலஃபையே பின்பற்றினார்கள். ஃபிக்ஹ் சட்டங்கள் சிலவற்றில் அவர்களிடையே கருத்துவேறுபாடுகள் இருந்தன. ஆனால், அடிப்படைக் கொள்கையிலும் ஆதாரங்களை அணுகுகின்ற வழிமுறையிலும் அவர்கள் அனைவருமே சத்தியத்தில் நிலைத்திருந்தார்கள்.



அவர்கள் தங்களின் எண்ணங்கள், சொற்கள், செயல்கள் எல்லாவற்றிலும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்தி வணங்குகின்ற இறைக்கொள்கையைச் சொன்னார்கள். இணைவைப்புகளையும் இறைநிராகரிப்புகளையும் எதிர்த்து விமர்சனம் செய்து மக்களை எச்சரிக்கவும் செய்தார்கள். அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்கள் மற்றும் பண்புகளை எவ்விதத் திரிபும் செய்யாமல், அவற்றின் பொருளை மறுக்காமல், அவற்றைப் படைப்புகளின் பண்புகளுடன் ஒப்பிடாமல், சுயபுத்தியை முற்படுத்திக் கேள்வி கேட்காமல் அப்படியே விசுவாசித்தார்கள்.



இன்னும்...



அல்லாஹ் அவனது மகிமைக்குத் தகுதியான முறையில் அர்ஷுக்கு மேலே உயர்ந்தவனாக, படைப்புகளைவிட்டுத் தனித்தவனாக இருக்கின்ற அதே நிலையில் அவனுடைய நுட்பமான செவியுறும் பண்பாலும், பார்க்கும் பண்பாலும் படைப்புகளைச் சூழ்ந்தும் அறிகின்றான் என்று எங்கள் அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் நம்பினார்கள். அல்லாஹ்வின் உள்ளமையை இறைநிராகரிப்பாளர்களின் அத்துவைதக் கொள்கைப்படி தூணிலும் துரும்பிலும் இருப்பவனாக அவர்கள் வியாக்கியானம் செய்யவில்லை. அல்லாஹ் தனக்கு வருணித்த உயர்ந்த பண்புகளை தத்துவம் அல்லது தர்க்க வாதங்களின் அடிப்படையில் நிராகரிக்கவில்லை.



அவர்கள் அஸ்-ஸுன்னா எனும் நபிவழியை இஸ்லாமின் அடித்தள ஆதாரமாக உறுதியாக நம்பி, அதற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்தார்கள். தங்களின் சொந்த அபிப்ராயங்களை முற்படுத்தாமல், ஆதாரங்களுக்குக் கட்டுப்பட்டார்கள். கருத்துவேறுபாடுகளை அவற்றின் அடிப்படையிலே தீர்த்துக்கொண்டார்கள். மார்க்கத்தின் பெயரால் புதிதாக நுழைக்கப்படும் எல்லாவித நம்பிக்கைகளையும் வணக்கங்களையும் அனாச்சாரம் - பித்அத் என்று கண்டித்தார்கள்.



நாங்கள் யார்?



ஒவ்வொரு நூதன வியாக்கியானங்களுக்கும் பின்னே ஒரு முன் முடிவு அல்லது சிந்தனை வட்டம் இருக்கின்றது. அதைக் கொண்டு வந்துதான் குர்ஆன் ஸுன்னா ஆதாரங்கள்மீது குத்தித் திணித்து கொடி ஏற்றுகிறார்கள் தத்துவவாதிகளும் பித்அத்துவாதிகளும் மன இச்சைக்காரர்களும்.



நாங்கள் அவர்களின் சுய சிந்தனைகளுக்கு மறுப்புத் தருவோம்; எங்கள் இரட்சகனின் திருப்தியை நாடி அவர்களைக் கோபித்துக் கொள்வோம்; புறக்கணிப்போம். அவர்களின் தவ்பாவுக்காக அழுது கொண்டும் இருப்போம்.



நாங்கள் யார்?



நமது நபித்தோழர்களும் அவர்களை பின்பற்றிய நல்ல அறிஞர்களும் நபிவழிக்கு எதிரான எந்த சிந்தனைகளையும் கலாச்சாரம், பண்பாடு, இலக்கியம், கவிதை இஸ்லாமிய மயப்படுத்தல், மதச்சார்பின்மை, தத்துவப் பார்வை, சமரசப் பார்வை, மாற்றுமதத்தினரின் கொள்கைகளையும் மதித்தல் போன்ற எந்தப் பெயர்களைக் கொண்டும் அங்கீகரித்துக்கொள்ளவில்லை. மாறாக, நூதனச் சிந்தனைகளைச் சமூகத்தில் பரப்பிய அனைத்துக் கூட்டத்தாரையும் எதிர்த்துக் கருத்தியல் யுத்தம் செய்தார்கள். அசத்தியத்தையும் அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வோரையும் அடையாளப்படுத்தி, சத்தியத்தை உறுதியான ஆதாரங்கள் மூலம் தெளிவுபடுத்தி சமூகத்திற்கு உபதேசம் செய்தார்கள்.



திருக்குர்ஆனுக்கு மனஇச்சை அடிப்படையிலோ, ஆதாரப்பூர்வமான நபிவழி அல்லது நபித்தோழர்களின் வழிகாட்டல் இவற்றுக்கு முரணாகவோ விளக்கம் கூறுவதை அஞ்சினார்கள். தன்னிச்சையாகக் கருத்துக் கூறுவதின் மூலம் வழிகேட்டைப் பரப்பி மார்க்கத்திற்கும் சமூகத்திற்கும் தீங்கிழைத்து அல்லாஹ்வின் முன்னிலையில் பெரும்பாவியாக நிற்பதை வெறுத்தார்கள். அவர்களையும் அவர்களைப் போன்றுதான் நீங்களும் இருப்பீர்கள் என்றால் உங்களையும், நாங்கள் அல்லாஹ்வுக்காக நேசிக்கிறோம்.




நாங்கள் யார்?



அஹ்லுஸ் ஸுன்னாவை நேசிக்கும் நாங்கள் சொல்கிறோம். குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுமே இந்த மார்க்கத்தின் மூல ஆதாரங்கள். இவற்றோடு இஜ்மாஃ என்கிற நபித்தோழர்கள் காலம் முதல் தொன்று தொட்டு வருகின்ற ஒருமித்தக் கருத்தும் உறுதியான துணை ஆதாரமாகும். கியாஸ் என்கிற மூலாதாரங்களின் அடிப்படையிலிருந்து சட்டத் தீர்ப்பெடுக்கும் முறைமையும் ஆதாரமாகும். உரத்துச் சொல்கிறோம், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அனைத்துமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹ்யிதான். எனவே, ஒருக்காலும் அவை அவனுடைய வேதத்திற்கு முரண்படாது. மாறாக, அவை அவனது வேதத்திற்குக் கூடுதல் விளக்கத்தை அளித்து பரிபூரண வழிகாட்டலையே வழங்கும். ஒரு வஹ்யி இன்னொரு வஹ்யிக்கு எதிராக இருக்காது. எனவே, பகுத்தறிவுக்கும் விஞ்ஞானத்திற்கும் உணர்வுகளுக்கும் குர்ஆனுக்கும் முரண்படுவதாக வாதித்து ஸஹீஹான ஹதீஸ்களை நிராகரிப்பவர்கள் தங்கள் வழிகேடும் மனஇச்சையும் கொண்ட கொள்கையைக் கைவிட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனிடம் பாவமீட்சி தேடித் திரும்ப வேண்டும் என்று உபதேசிக்கிறோம். எங்களையும் அவன் இந்தச் சத்திய அடிப்படையில் மரணம் வரை நிலைநிறுத்த அவனிடம் வேண்டி நிற்கிறோம்.



நாங்கள் யார்?



லா இலாஹ இல்லல்லாஹ் என்றால் வணக்கவழிபாடுகளுக்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்றால் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நம்புகிறோம். இந்தத் தூய உறுதிமொழியின் பொருளையும் இது நிலைநிற்கின்ற தூண்கள், நிபந்தனைகள், இதனை முறித்துவிடுகின்ற காரணிகள் அனைத்தையும் தெளிவாக விளக்கி மக்களை தவ்ஹீதின் பக்கமும் ஸுன்னாவின் பக்கமும் ஒற்றுமைப்படுத்துவதே சரியான முறையில் அமைந்த சீர்திருத்தப்பணி என்று உறுதிகூறுகிறோம். இதற்கு மாற்றமாக இணைவைப்பு, இறைநிராகரிப்பு குறித்து சமூகத்தை எச்சரிக்காமல் மவுனம் காத்துக்கொண்டும், தற்கால அரசியல் நிலைப்பாடுகளுக்காகச் சத்திய ஏகத்துவப் பிரச்சாரத்தை வீரியமற்றதாக ஒதுக்கிவைப்பதும் இறைத்தூதர்களின் பாதைக்கு எதிரானது என்று எச்சரிக்கிறோம்.



இவ்விசயங்களில் முஸ்லிம்கள் அனைவரும் விழிப்புணர்வு பெற்று இஸ்லாமின் சத்தியச் செய்தியைச் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்த வேண்டுமென பிரார்த்தனை செய்கிறோம். இதனை அஹ்லும் இல்ம் எனப்படும் இஸ்லாமியக் கல்வியைச் சுமந்த மூத்த அறிஞர்களின் உபதேசங்களை உற்றுக் கவனித்து அவற்றின் வழிகாட்டலில் செய்ய நாடுகிறோம்.



நாங்கள் யார்?



"உலமாக்களுக்கு உலகம் தெரியாது: அரசியல் நடப்புகள், எதிரிகளின் சூழ்ச்சிகள் தெரியாது. எனவே, வணக்க வழிபாடுகளுக்குச் சட்டங்கள் சொல்லவும், திருமணங்கள் நடத்திவைக்கவும், பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டவுமே அவர்கள் லாயக்கானவர்கள்" என்று அறிஞர்களை இழிவுபடுத்தி ஒதுக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் அணுகிவரும் ஒவ்வொருவரைக் குறித்தும் எங்கள் இரட்சகனிடம் முறையிடுகிறோம்.



இந்த மக்கள் அத்துமீறிய, மனஇச்சைமிக்க இச்சிந்தனையை முஸ்லிம் பொதுபுத்தியில் ஊன்றுவதின் மூலம் உம்மத்தை மூத்த உலமாக்களின் உபதேசங்களைவிட்டுத் தனிமைப்படுத்துகிறார்கள். உம்மத்தின் விவகாரங்களில் தங்களின் சுய அறிவுக்கேற்ப தாங்களே (சமூக ஊடகங்களில்) கருத்துச் சொல்லி தீர்ப்பளித்து அதற்காகத் தொடர் பரப்புரையிலும் ஈடுபடுகிறார்கள்.



இதனால் விளையும் குழப்பங்களுக்கு எதிர்வினையாற்றி அறிஞர்கள் மறுப்பளித்தால் "இந்த முல்லாக்களுக்கு இதேதான் வேலை. இவர்கள் பிற்போக்குவாதிகள்; எதைத் தொட்டாலும் ஹறாம் என்பார்கள்; இவர்கள் தூய்மைவாதிகள்: கடும்போக்குவாதிகள்; மத அடிப்படைவாதிகள்; வஹ்ஹாபிகள்; கலாச்சார எதிரிகள்; புரோகிதர்கள்; அரசவை அடிவருடிகள்; மத நல்லிணக்கம் தெரியாதவர்கள்” என்று வெறுப்பை உமிழ்கிறார்கள்.



இவ்விசயத்தில் முதலில் அல்லாஹ்வின் சொல்லையே அவர்களுக்கு நாங்கள் உபதேசமாக நினைவூட்டுகிறோம்:



إِذْ يَتَلَقَّى الْمُتَلقَّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ فَعِيدٌ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ



வலப்புறத்தில் ஒருவரும், இடப்புறத்தில் ஒருவருமாக இருவர் (மனிதனின் ஒவ்வொரு சொல்லையும் செயலையும்) குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதைக் கூறியபோதிலும் அதனை எழுதக் காத்துக்கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (குர்ஆன் 50:17,18)



அதே நேரம், இந்த உபதேசத்தை மட்டுமே நாங்கள் போதுமாக்கிக் கொள்ளமாட்டோம். வழிதவறச் செய்கின்ற ஒவ்வொரு பரப்புரைக்கும் எதிராக எங்களிடமிருந்து மறுப்புரை வரும். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டுவோம். சாமானியன் ஏமாந்துவிடாதபடி அசத்தியப் பிரசாரத்தை அடையாளம் காட்டுவோம். இது அல்லாஹ்வின் மார்க்க விவகாரம்; விருப்பு வெறுப்புகளின்படி சொந்த முடிவுகளைச் சொல்ல அவரவரின் குடும்ப விவகாரம் அல்ல. உண்மையில் அல்லாஹ்வின் மார்க்கத் தீர்ப்புதான் எல்லா விவகாரங்களிலும் இறுதியானது.



இதுதான் நம்முடைய அஹ்லுஸ் ஸுன்னா உலமாக்களின் பாரம்பரிய வழிமுறை. நாங்கள் அவர்களின் ஆதாரங்கள் மூலம் மறுப்புகளைப் பரப்புரை செய்வோம். வழிகெடுத்துக் கொண்டிருப்போரையும் இதன் வழியாக நாங்கள் நேர்வழிக்கு அழைப்போம். வழிகெட்டுப் போனவர்களுக்காகப் பிரார்த்தனையும் செய்வோம். வழிகெடாமல் மிச்சம் இருக்கின்றவர்களில் எங்களையும் ஆக்கிவிட்ட அல்லாஹ்வின் கருணைக்கு நன்றி செலுத்திக் கொண்டு, எங்கள் உள்ளங்கள் தடுமாறிவிடக் கூடாது என்று பயந்துகொண்டும் கிடப்போம்.



இப்படித்தான் சாக விரும்புகிறோம்; எங்கள் இரட்சகன் முன்னிலையில் போக விரும்புகிறோம்.



நாங்கள் யார்?



ஒரு கூட்டத்தாரின் கொள்கைகள் பல தீங்காக இருக்க, அவர்களிடம் சில நல்ல பண்புகளும் இருக்கலாம். அதற்காக அவர்களைப் பாராட்டுவது அஹ்லுஸ் ஸுன்னா இமாம்களின் மரபு அல்ல. ஏனெனில், அவர்களிடமுள்ள தீயவையும் மக்களுக்கு மத்தியில் நல்லவையாக அங்கீகாரம் பெறத் தொடங்கிவிடும். மக்கள் ஏமாறுவார்கள்; வழிதவறுவார்கள்.



நீங்கள் எதில் அவர்களைப் பாராட்டினீர்கள், எதில் விமர்சித்தீர்கள் என்று மக்கள் வடிகட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.



நாங்கள் ஒருக்காலும் அஹ்லுல் பித்ஆ வல் ஹவா மனிதர்களைப் பாராட்டிப் பேச மாட்டோம். அதாவது, நமது இரட்சகன் அல்லாஹ் மார்க்கம் ஆக்காத நம்பிக்கைகளையும் செயல்களையும் மார்க்கம் ஆக்கிக்கொள்கின்ற பித்அத்வாதிகளையும் மன இச்சைக்காரர்களையும் பொதுவெளியில் பாராட்டி அங்கீகாரம் தேடித் தர மாட்டோம். அப்படி நாங்கள் செய்தால், அது அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் ஆகிய நபிவழிக்கும் நபித்தோழர்களின் ஜமாஅத்திற்கும் செய்கின்ற தீங்கும் துரோகமுமே என்று உறுதியாக நம்புகிறோம்.


நன்றி இஸ்லாமியபுரம் வலைத்தளம் .

கருத்துகள்